|
சின்ன ஓட்டல் ஒன்றில் கையில் துாக்குவாளியுடன் வந்தாள் ஒரு சிறுமி, ‘‘அம்மா பத்து இட்லி வாங்கி வரச் சொன்னாங்க... காசு நாளைக்குத் தருவாங்களாம். அண்ணா!’’ என்றாள். ஓட்டல் நடத்துபவர்,‘‘உங்க கணக்கில் நிறைய பாக்கி இருக்கு...அம்மாக்கிட்டே சொல்லுமா.... இப்போ வாங்கிட்டுப் போ...’’ என்றார்.
இட்லி பார்சலையும், துாக்குவாளியையும் கொடுத்தனுப்பினார். ‘‘சரி...அம்மாவிடம் சொல்றேன்... போயிட்டு வரேன் அண்ணா’’ என சிறுமி கிளம்பினாள்.
அந்தக் கடையில் சாப்பிட வந்த இளைஞன் இதைப் பார்த்து விட்டு, ‘‘நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க’’ எனக் கேட்டான். ‘‘அட...சாப்பாடு தானே சார்.... குழந்தைகள் கேட்கும் போது மறுக்க மனசு வரல.. பாவம் குழந்தை பசியால் அழுதிருக்கும்.. அதான் சார், குழந்தையை அனுப்பி இருக்காங்க. அவங்க நம்பிக்கையை பொய்யாக்க நான் விரும்பல....
உழைச்சி சம்பாதிக்கிற காசு இது...வந்துடும் ....ஆனா இப்போதைக்கு அந்தக் குடும்பம் சாப்பிடுதுல, அதுபோதும் . உணவு தரவில்லை என்றால் தாய்க்காக குழந்தை திருடப் போகும் அல்லது குழந்தையின் பசி போக்க தாய் தவறான பாதைக்கு செல்வாள். ஆனால் நான் நஷ்டப்பட்டாலும், நடக்க இருந்த இரண்டு தவறுகளைத் தடுத்த மகிழ்ச்சி போதும்’’ என விளக்கம் கொடுத்தார் ஓட்டல் நடத்துபவர். உன்னிப்பாக கேட்டார் இளைஞர். மீண்டும் ஓட்டல் நடத்துபவர், ‘‘எனக்கும் இந்த விஷயத்தில் அனுபவம் உண்டு. என் இளமைப்பருவத்தில் புட்டு விற்கும் பாட்டியிடம் இதே போல கடன் சொல்லி அவ்வப்போது பசியாறுவேன். அப்போது ‘
ஏன் பாட்டி, நான் பணம் தராமல் ஓடிவிட்டால் என்ன செய்வாய்’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘அட போப்பா, பணம் வந்தால் லாபக் கணக்கு. பணம் தராவிட்டால் அது என் புண்ணியக் கணக்கில் வரவு வைக்கப்படும்’ என சிரித்தார்’’ என்றார்.
இதுதான் நம் இந்திய பண்பாடு! இனியாவது அன்னதானம் செய்யுங்கள்.
|
|
|
|