|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அபிமன்யுவாகிய நான்... |
|
பக்தி கதைகள்
|
|
என் தந்தை அர்ஜுனர். தாய் சுபத்திரை. என் தாய் கண்ணன், பலராமரின் தங்கை. ஆக அவர்கள் இருவரும் எனது மாமன்கள். அஞ்ஞாத வாசத்தின் போது விராட மன்னனின் அரண்மனையில் மாறுவேடங்களில் தங்கியிருந்தார்கள் பாண்டவர்கள். அப்போது அர்ஜுனர் ஆணுமற்ற பெண்ணுமற்ற உருவத்தில் மாறுவேடமிட்டு விராட மன்னனின் மகள் உத்தரைக்கு நடனம் பயிற்றுவித்தார். ஒரு வருட காலத்துக்கு பிறகு பாண்டவர்களின் உண்மைத் தன்மையை அறிந்தவுடன் விராட மன்னன் நிலைகுலைந்தார். புகழ்பெற்ற பாண்டவர்கள் தன்னிடம் பணி செய்ததை எண்ணி மனம் குமைந்தார். அதற்கான பிராயச்சித்தமாகவோ என்னவோ தனது மகள் உத்தரையை என் தந்தை அர்ஜுனனுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பப்பட்டார். ஆனால் என் தந்தை மறுத்தார். ‘நான் அவளுக்கு ஆசிரியராக இருந்தேன். அவள் எனக்கு மகள் போன்றவள். எனவே என் மகன் அபிமன்யுவுக்கு அவளை திருமணம் செய்து வைக்கலாம்’ என்று கூற விராட மன்னர் அதை ஏற்றுக் கொண்டார். என் தாய் சுபத்திரை என்னைக் கருவுற்றிருந்த போது, ஒரு நாள் என் மாமன் கண்ணன் அங்கு வந்தார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்ட பிறகு தங்கள் சிறுவயது நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது போர்த் தந்திரங்களைப் பற்றிய பேச்சு வந்தது. சக்கர வியூகம் குறித்து பேசத் தொடங்கினார் கண்ணன். அன்னையின் கருவறைக்குள் இருந்தபடி நான் இதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பின்னர் சக்கர வியூகத்தில் இருந்து வெளியேறும் வழிமுறையைப் பற்றி கண்ணன் கூறத் தொடங்கிய போது என் தாய் அசதியில் துாங்கத் தொடங்கி விட்டார். அதன் பின் அவர் காதுகளில் கண்ணன் கூறியது செல்லவில்லை. எனவே எனக்கும் அது விளங்காமல் போனது. அதாவது சக்கர வியூகத்தில் இருந்து வெளியேறும் யுக்தி எனக்குத் தெரியாமலே போய் விட்டது. இது பாரதப் போரில் என் விதியைத் தீர்மானித்தது.
பதினெட்டு நாட்கள் நடைபெற்றது மகாபாரதப் போர்.அதில் பன்னிரண்டாவது நாள் நான் கவுரவ சேனைக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தினேன். என் தெய்வீக ஆயுதங்களினால் துரியோதனனைச் சுற்றி ஒரு மாயத் தடுப்பை ஏற்படுத்தினேன். அதே நேரம் பெரியப்பா பீமன் கவுரவ சகோதரர்களில் ஒவ்வொருவராக பலரைக் கொன்றார். மாயத் தடுப்பு காரணமாக துரியோதனனால் இதைத் தடுக்க முடியாமல் போனது. எனவே என் மீது கடும் கோபம் கொண்டார் துரியோதனன். தன் நண்பன் கர்ணனை அழைத்து என்னைக் கொல்லுமாறு உத்தரவிட்டார். நானும் கர்ணனும் கடுமையாகப் போரிட்டோம். ஒரு கட்டத்தில் என் தேரை ஒடித்து அதைச் செயலற்றதாக ஆக்கினார் கர்ணன். ஆனால் சூரியன் அஸ்தமனம் ஆனதால் அதற்கு மேல் போரிட முடியாமல் நாங்கள் அவரவர் இடத்திற்குத் திரும்பினோம்.
மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில்தான் உத்தரை தான் கருவுற்றதை தெரிந்து கொண்டாள். நானும் தந்தையாகப் போகிறேன் என்ற மகிழ்வுடன் போருக்குக் கிளம்பினேன். உத்தரைக்குக் கலக்கமாக இருந்தது. அவள் மனதைத் தேற்றி விட்டு போரில் கலந்து கொண்டேன். போர் தொடங்கிய பதின்மூன்றாம் நாள் அது. என்னை எப்படியும் கொன்றே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தான் துரியோதனன். என் தந்தை அர்ஜுனன் குருக்ஷேத்திரத்தில் இருக்கும்வரை என்னை எதுவும் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்ட அவர் தன் குழுவினருடன் வேறு ஒரு வஞ்சக திட்டத்தில் இறங்கினார். என் தாத்தா விராட மன்னரின் நாட்டை நோக்கி ஒரு படையை அனுப்பினார் துரியோதனன். அந்தப் படையை த்ரிகர்த்த சேனை என்று அழைத்தனர். விராட மன்னன் குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் இருந்தார். எனவே உடனடியாக மிகுந்த வலிமை மிக்க ஒருவரை விராட நாட்டுக்கு அனுப்பி அதைக் காக்க வேண்டும் என்ற கட்டாயம் பாண்டவர்களுக்கு ஏற்பட்டது. தவிர வேகமாகவும் அங்கு சென்று வென்று மீண்டும் குருக்ஷேத்திரத்திற்கு வந்தாக வேண்டும். எனவே அர்ஜுனனோடு அவனது ரதத்தின் சாரதியாக கண்ணன், ஒரு சிறு படையோடு அங்கு சென்றார்.
அன்று அர்ஜுனர் போர்க்களத்தில் இருக்க மாட்டார் என்பதை அறிந்து கொண்ட கவுரவர்கள் சக்கர வியூகம் அமைத்து அதன் மூலம் என்னைக் கொல்ல முடிவெடுத்தனர். யூகத்தை உடைத்து உள்ளே செல்லும் யுக்தி துருபதன், அர்ஜுனர் மற்றும் நான் ஆகிய மூவருக்கு மட்டுமே தெரியும். அர்ஜுனர் களத்தில் இல்லை. எனவே துருபதனை அனுப்பி சக்கர வியூகத்தை உடைக்கச் சொன்னார் பெரியப்பா தர்மர். ஆனால் துரோணர் துருபதருடன் கடுமையாகத் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருக்க சக்கர வியூகத்தின் உள்ளே துருபத மன்னரால் நுழைய முடியவில்லை.
இதை கண்டு சக்கர வியூகத்தை உடைக்க நான் கிளம்புகிறேன் என்றேன். ஆனால் சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்ல முடியுமே தவிர அதிலிருந்து மீண்டும் வெளியே வரும் வழிமுறை எனக்கு தெரியாது என்பதை அப்போது நான் பெரிதாக எண்ணவில்லை. எதிரிகளை மாய்க்க வேண்டும் என்று சிந்தனை ஒன்று தான் எனக்குள் நிறைந்திருந்தது.
சக்கர வியூகத்தை நான் உடைத்து உள்ளே நுழையும்போது எனக்கு பாதுகாப்பாக (என் தந்தையைத் தவிர போர்க்களத்தில் மீதமிருந்த) நான்கு பாண்டவர்களும் வருவதாக திட்டமிட்டனர். ஆனால் அவர்களை ஜெயத்ரதன் தடுத்து முன்னேற முடியாமல் செய்து விட்டார். தான் செய்த தவத்தின் பலனாக மகாபாரதப் போரின் போது ஒரே ஒரு நாள் அர்ஜுனனைத் தவிர மீதி அனைவரையும் அவரால் கட்டுப்படுத்த முடியும் என்று வரத்தை அவர் பெற்றிருந்ததால் இது சாத்தியமானது.
இதன் காரணமாக நான் மட்டுமே சக்கர வியூகத்தின் உள்ளே நுழையும் படியானது. கவுரவர்களுடன் நேரடியான யுத்ததில் ஈடுபட்டேன். ஆனால் யுத்த தர்மத்திற்கு மாறாக என் மீது ஒரே சமயத்தில் சகுனி, கர்ணன், துரியோதனன், துச்சாதனன், துரோணர், ஜெயத்ரதன் ஆகிய அனைவரும் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக நான் மடிய நேரிட்டது.
விராட நாட்டை காப்பாற்றிய என் தந்தை குருக்ஷேத்திரத்துக்கு வந்த போது என் முடிவை அறிந்து பெரிதும் துக்கப்பட்டு அடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் மன்னன் ஜயத்ரதனைக் கொன்று தீருவேன் என்று சபதமிட்டு அந்த சபதத்தை கண்ணனின் உதவியுடன் நிறைவேற்றியது தனிக்கதை.
பாண்டவர்களுக்குப் பல வாரிசுகள் உண்டு. ஆனால் அவர்களில் எனக்குத் தனி இடம் என்பதில் எனக்கு தனிப்பெருமை உண்டு. எனக்கும் உத்தரைக்கும் பிறந்த மகன் தான் பரீட்சித்து. அவனைத் தான் பெரியப்பா தனக்குப் பிறகு அரசாள முடிசூட்டினார். பாண்டவர்கள் வம்சம் தழைத்தது என் மூலமாகத்தான் என்பதில் எனக்கு ஆனந்தம்தான்.
|
|
|
|
|