|
மரணதேவன் தன்னை நெருங்கிவிட்டான் என்பது தசரதருக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது. இத்தருணத்தில் தன் கரம் பற்றி இறப்பாறுதல் அளிக்க ஒரு மகன் உடன் இல்லையே! நான்கு பிள்ளைகளைப் பெற்றும் ஒருவன்கூட அருகிலில்லாத சோகம் எந்தத் தந்தைக்கும் ஏற்படக் கூடாது என்று புலம்பித் தவித்தார். ராமன் திரும்ப வரவில்லை. சுமந்திரன் எவ்வளவோ பேசி, எப்படியெல்லாமோ முயற்சித்திருப்பான். ஆனாலும் ராமன் வரவில்லை. எத்தகைய திட சிந்தனை என் மகனுக்கு! ஒருவேளை பழி வாங்குகிறானோ? மனைவி பேச்சைக் கேட்டுக் கொண்டு தன்னை கானகத்துக்கு அனுப்பி வைத்ததற்காக எனக்கு தண்டனை அளிக்கிறானோ? இல்லை, இருக்காது. அப்படிப்பட்டவனாக இருந்தால் அந்தச் சுவடு அவனுடைய இத்தனை நாள் வாழ்க்கையில் எப்போதாவது பிரதிபலித்திருக்கும். ஆனால் இல்லை. என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவன் அவன். ஆமாம், சின்னஞ்சிறு பாலகனான அவனை நான் உயரே துாக்கிப் பிடித்துக் கொஞ்சிய நாட்களில், எங்கே தன் பாதங்கள் என் முகத்தில் பட்டுவிடுமோ என்று அஞ்சி கால்களை மடக்கி வைத்து, அப்போதே மரியாதை செலுத்தத் தெரிந்த உத்தம புத்திரனாயிற்றே அவன்! தந்தை சொல் மீறக் கூடாது என்ற பண்பை உலகோருக்கு உணர்த்தவே இவ்வாறு செய்திருக்கிறான். ஆகவே அவனுடைய நேர்மையை, தந்தை மீது வைத்திருக்கும் மரியாதையை, தண்டனை, அது, இது என்று நானாக கற்பனை செய்துகொண்டு மலினப்படுத்தக் கூடாது. அவன் நியாயவான், தர்மவான், நீதிமான், யாருக்கும், எந்த சந்தர்ப்பத்திலும் மெலிதாகக் கூட துன்பம் இழைக்க நினையாதவன், இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவன், முதியவர்கள் நெஞ்சு விம்மப் பாராட்டும் இனியவனாக விளங்குபவன் அவனுடைய சிந்தனை, சொல், செயல் எல்லாமும் உயர்ந்தவை, அப்பழுக்கில்லாதவை, குற்றம் காண இயலாதவை… பாசம் அலைக்கழித்தது தசரதனை. எங்கோ மூங்கில் காட்டுக்குள் புகுந்து மூவரும் போனார்களாமே, அடடா… அது எந்த தேசத்துக்குரியது, அங்கே மனிதர் வசிக்கிறார்களா அல்லது கொடிய விலங்குகளின் இருப்பிடமா? அவர்கள் எங்கே தங்குவார்கள், எதை உண்பார்கள், எவ்வாறு துயில் கொள்வார்கள்…. ராமா…. ராமா… என் செல்வமே… தசரதன் மெல்ல கண்களை மூடிக் கொண்டார். பக்கத்தில் கோசலையும், சுமித்திரையும் நெருங்கி வந்து அமர்ந்து கொண்டார்கள். சற்று தொலைவில் நின்றிருந்த கைகேயி, முகத்தில் எந்த உணர்வையும் பிரதிபலிக்காமல் கணவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். குலகுரு வசிஷ்டருக்குச் சொல்லி அனுப்பினார்கள். ஓடோடி வந்தார் அவர். அப்போதைய நிகழ்வுகளையெல்லாம் ஒரு மவுன சாட்சியாகவே அவரால் கவனிக்க முடிந்தது. என்னதான் ராஜகுரு என்றாலும், தசரதன் – கைகேயி – ராமன் இடையிலான உணர்வு போராட்டத்தில் அவரால் எந்த அபிப்ராயமும் சொல்ல இயலவில்லை. அதனால்தான் அவசரம் அவசரமாக ராமனின் இளவரசு பட்டாபிஷேகத்துக்கு தசரதன் ஏற்பாடுகளைச் செய்தபோது அவரால் தசரதனுக்கு அனுசரணையாகத்தான் செயல்பட முடிந்ததே தவிர, தசரதனின் அந்தப் பதற்றத்தை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, மாற்று யோசனை எதையும் அவரால் சொல்ல முடியவில்லை. இப்போது எதிர்பாராத அடுத்தடுத்த நிகழ்வுகளால் விரும்பத்தகாத திருப்பம் உண்டாகியிருக்கிறது. தீவிர சிந்தனையுடன் வந்த வசிஷ்டர், தசரதனின் நிலைமையைக் கண்டார். அவருடைய கையை பற்றிப் பார்த்து உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டிருப்பதை உணர்ந்தார். அங்கே நின்றிருந்த சுமந்திரரை வெறுமையாகப் பார்த்தார். ஆக, இனி ராஜாங்கப் பொறுப்பை மேற்கொள்ள வேண்டியவன், தசரதனின் வாக்குப்படி பரதன்தான் என்பது உறுதியாகிவிட்டது. கேகய நாட்டில் சகோதரன் சத்ருக்னனுடன் தங்கியிருக்கும் அவனுக்கு செய்தி சொல்லி அனுப்ப வேண்டும். தசரதன் வைகுண்டம் ஏகிவிட்டதை நேரடியாகச் சொல்லாமல் அவனை வரவழைக்க வேண்டும். ராமனைத் தன் தெய்வமாகவே கருதி வழிபடுபவன் அவன். தசரதனின் இறப்பும், அதற்கு முக்கிய காரணமான ராமன் பிரிவும் பரதனை ஆக்ரோஷம் கொள்ள வைக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படும் அவன் சகோதர பாசத்தால் எந்த நிலைக்கும் செல்லக் கூடியவனாகவே இருப்பான். கைகேயி எதிர்பார்ப்பது போல, அவன் அரியணையில் அமர்வான் என்பது சந்தேகமே. அப்படியானால் அவன் என்னதான் செய்வான்? அருமை அண்ணன் ராமன் தனக்காக விட்டுக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான் என்பதால் அதை ஒரு வாய்ப்பாகக் கருதி அரச பதவியைத் தரித்துக் கொள்ளும் பேராசைக்காரன் அல்ல பரதன். என்னதான் இருந்தாலும் இளையவன் என்ற தகுதி அவனுடைய உள்ளத்தைக் குத்தும். அந்தக் குற்ற உணர்வைத் தான் அடையக் கூடாது என்பதில் அவன் இதுநாள்வரை சமரசம் செய்து கொண்டதே கிடையாது. சத்ருசேனன் என்ற பட்டத்து யானைமீது அம்பாரியில் ராமனை அமர்த்தி தசரதன் மகிழ்ந்தபோது, கீழே நின்றிருந்த பரதன் தானும் கைதட்டி, முகம் மலர்ந்து சிரித்து மகிழ்ந்தானே தவிர, ஒரு சிறு குழந்தை ஆசையாகக் கூட தானும் யானை மீது பயணிப்பேன் என்று அடம் பிடிக்கவில்லை. அதேபோல மூத்தவன் என்ற உரிமையில் தன் தாய் கைகேயி ராமனுக்குப் பல ராஜாங்க நுணுக்கங்களைக் கற்றுத் தந்தபோது உடனிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தானே தவிர, பரதன் கொஞ்சமும் பொறாமைப்படவில்லை. மிதிலாபுரியில், சுயநலமாகத் தான் மட்டும் திருமணம் செய்து கொண்டு வந்து விடாமல், இளைய சகோதரர்களுக்கும் தனக்கு இணையாகத் திருமணம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ராமனின் பெருந்தன்மைப் பாசத்தில் கட்டுண்டவன் பரதன். லட்சுமணன் அளவுக்கு ராமனுடன் கூடவே இருக்கும் பாக்கியம் தனக்குக் கிட்டவில்லை என்றாலும், ராமனுடன் வாழும் பேறு கிடைத்தமைக்காக மகிழ்வெய்தியவன் அவன். ஆகவே நேரடியாக தசரதன் இவ்வுலகை நீத்துவிட்டார், ராமனும் அயோத்தியை விட்டு நீங்கி விட்டான் என்றெல்லாம் தகவல் சொன்னால், பரதனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பது வசிஷ்டருக்குத் தெரியும். நீறு பூத்த நெருப்பாக அவன் மனசுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் பாசத் தணல், இந்த உண்மை தெரியவருமானால் திடீரென எரிமலையாகக் குமுறவும் செய்யும். ஆகவே அவன் அயோத்தி திரும்பிய பிறகு பக்குவமாக விவரத்தைச் சொல்லலாம், சமாதானப்படுத்த முயற்சிக்கலாம்… பரதன் வரும்வரை தசரதன் உடலை பக்குவப்படுத்தி வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய எண்ணெய்க் கொப்பரைக்குள் இட்டு வைத்தார்கள். பலவகை மூலிகைகளையும் உள்ளிட்டு பரதன் வரும் வரை சிதிலமடைந்து விடாதபடி பாதுகாத்தார்கள். கேகய நாட்டில், பரதன் மனதில் அவனே அறியாமல் ஏதோ கலவரம் மூண்டது. ஏதோ அசம்பாவிதத்தை அவனால் ஊகிக்க முடிந்தது. குழம்பிய மனம் நிம்மதியாக உறங்காது, பலவகை துர்கனவுகளால் அலைக்கழிக்கப்படும் என்பது போல அவனால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. கடல் வற்றி வறண்டது. நிலவு வானிலிருந்து வீழ்ந்தது, உலகயே இருள் சூழ்ந்தது, மரங்கள் அனைத்தும் திடீரென பட்டுப்போய் வெறும் குச்சிகளாக நின்றன, பூமி பெருங்கீறலாய்ப் பிளந்தது, பசுமை போர்த்திய மலைகளிலிருந்து புகை கிளம்பியது – என்றெல்லாம் அவன் கனவு கண்டான். இவை மட்டுமா, தசரதன் கருமையான ஆடை அணிந்திருந்தார், சுற்றிலும் நின்ற பல பெண்கள் அவரைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். வழக்கமான மஞ்சள் கலந்த வண்ணமின்றி, சிவப்பு வண்ணத்தாலான சந்தனத்தை அவர் பூசிக் கொண்டிருந்தார். கழுதைகள் பூட்டப்பட்ட தேரில் அமர்ந்து தெற்கு நோக்கிப் பயணப்பட்டார். பரதன் அப்படியே சோர்ந்து போனான். அயோத்தியில் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று அவனால் ஊகிக்க முடிந்தது. ஆனால், ‘நீ போய் உன் மாமன் அரண்மனையில் சில நாட்கள் தங்கிவிட்டு வா’ என தந்தையார் உத்தரவிட்டதால் மீண்டும் அவர் உத்தரவு இன்றி எப்படி ஊர் திரும்புவது என்றே காத்திருந்தான். ராமனின் தம்பி அல்லவா, அவனைப் போலவே தந்தையாரின் ஒவ்வொரு சொல்லையும் ஆணையாகவே ஏற்று நிறைவேற்றி வந்தான் பரதன். அதோ, அயோத்தியிலிருந்து அரச துாதுவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டதுமே அவர்களை வரவேற்க, தானே ஓடோடி வந்தான். ‘தாங்கள் அயோத்தி திரும்ப வேண்டும் என்று சக்கரவர்த்தி எழுதி அனுப்பிய ஓலை இதோ’ என்று அவர்கள் கொடுத்தனர். கைகளை உயரே துாக்கி மானசீகமாக தந்தையாரையும், அருமைத் தமையன் ராமனையும் வணங்கியபடி கண் கலங்கினான் பரதன். அடுத்த கணமே அயோத்தி நோக்கிப் புறப்பட்டான். (தொடரும்)
|
|
|
|