Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வடிவேலன் எழுதிய வரலாறு
 
பக்தி கதைகள்
வடிவேலன் எழுதிய வரலாறு


‘கலியுக வரதன்’ என்றும் ‘கண் கண்ட தெய்வம்’ என்றும் பக்தர்களால் போற்றப்படுபவர் முருகப்பெருமான்.
ஆறுமுகப் பெருமானின் பக்தர்கள் உலகம் முழுவதும் வாழ்கிறார்கள்.
‘உலகெங்கும் மேவிய பெருமாளே’ என்று 15ம் நுாற்றாண்டின் தொடக்கத்திலேயே அருணகிரிநாதர் தீர்க்க தரிசனத்துடன் போற்றியிருக்கிறார்.  
முருகப்பெருமானுக்குரிய ஆடிக்கார்த்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் விழாக்கள் உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
முருகனின் ஆறுபடைவீடுகளை தரிசித்து பேறு பெறாத பக்தர்களே பிரபஞ்சத்தில் இல்லை.
உணவகங்கள், வணிக நிறுவனங்கள், ஆடை விற்பனையகங்கள், திரைத்துறை அமைப்புகள் என எங்கும் முருகனின் பெயரே சூட்டப்படுகிறது.
சங்கத்தமிழ் இலக்கியத்தில் கடவுள் வணக்கமாக முதலில் அமைந்து முகம் காட்டுவதே நக்கீரரின் திருமுருகாற்றுப்படை நுாலே!
‘‘முருகனை உனை ஓதும் தவத்தினர் மூதுலகில்
அருகாத செல்வம் அடைவார்! வியாதி அடைந்து நையார்!
ஒருகாலும் துன்பம் எய்தார்! பரகதி உற்றிடுவார்!
பொருகாலன் நாடு புகார்! சமராபுரிப் புண்ணியனே!’’
என்று திருப்போரூர் சன்னிதிமுறை பக்தர்களுக்கு உத்தரவாதம் அளிக்கின்றது.
 ‘முருகா! உன்னைப் போல் விரைந்து அருள்புரியும் வேறு தெய்வத்தை நான் அறிந்ததில்லை என ஒருமுறைக்கு இருமுறையாக  சுப்ரமண்ய புஜங்கம் என்னும் பாடலில் வேலவனின் ஆற்றலை நமக்கு விளங்க வைக்கிறார் ஆதிசங்கரர்.
ஆதார சக்தியான கடவுளை பயபக்தியுடன் வணங்குவதும், அவர் புகழ் கூறும் இதிகாசங்கள், புராணங்களை படிப்பதும் நமக்கும், நம் சந்ததிக்கும் நன்மையளிக்கும்.  
‘கந்தனே உனை மறவேன்’  என எப்போதும் முருகனையே சிந்தித்து வாழ்பவர்கள் உடல் நலம், செல்வ வளம், ஆன்ம பலம் பெற்று வாழ்வர்.
‘ஆயிரம் பிறை தொழுவர்! சீர் பெறுவர்! பேர் பெறுவர்
அழியா வரம் பெறுவரே!’’ என மயில் விருத்தத்தில் அருணகிரிநாதர் பாடுகிறார்.
முருகனை வழிபடுவதற்கு மூன்று விரதங்கள். அவை வார விரதம், மாத விரதம், ஆண்டு விரதம்.
வெள்ளிக்கிழமையில் வழிபடுவது சுக்கிரவார விரதம், மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று வழிபடுவது மாத விரதம், ஆண்டு தோறும் ஐப்பசி  வளர்பிறை பிரதமை தொடங்கி ஆறுநாள் இருப்பது ஆண்டு விரதம். இதுவே கந்தசஷ்டி வைபவமாக கோயில்களில் கொண்டாடப்படுகிறது.
கந்தசஷ்டி நன்னாளில் முருகனுக்குரிய வெள்ளிக்கிழமையான சுக்கிர வாரத்தில் முருகனின் சுவையான வரலாற்றை படிக்கத் தொடங்கும் வாசகர்கள் அனைவருக்கும் சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு சாத்தியம் என்பது சத்தியம் அல்லவா!      
வேலவனின் சரித்திரத்தை சொல்வது கந்தபுராணம்.
புராணங்கள் பதினெட்டில் அளவாலும், மகிமையாலும் முதன்மையானது கந்த புராணமே!
18 புராணங்களையும் எழுதியவர் வேத வியாசர், வடமொழியின் கந்தபுராணத்தை முருகனின் திருவருளால் தமிழில் பாடியவர்  கச்சியப்ப சிவாச்சாரியார்.
திருமுருகன் திருக்கதையை கச்சியப்பர் எவ்வாறு பாடினார் என அறிந்து கொள்வோமா?
‘முக்தி தரும் நகர் ஏழுள் முக்கியமாம் கச்சி’ என அருளாளர்கள் போற்றும் தலம் காஞ்சிபுரம்.
‘காஞ்சிபுரமும், கும்பகோணமும் கை எடுக்க விடாது’ என பழமொழி வழக்கத்தில் உண்டு.
அதாவது காஞ்சிபுரம் செல்பவர்கள் கோயிலைப் பார்த்தவுடன் கைகளை எடுத்து கும்பிடுவர். அதன் பிறகு அவர்களால் கைகளைப் பிரிக்க முடியாது. அடுத்தடுத்து கோயில்கள் வரிசையாக உள்ளதால் இந்த இரண்டு தலங்களிலும் கூப்பியகை கும்பிட்டபடி இருக்கும். பிரிக்க முடியாது என்பதே இதன் பொருள்.  
கோயில் நகரமான விளங்கும் காஞ்சிபுரத்தில் மூன்று கோயில்கள் சிறப்பானவை. ஒருபுறம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்.  மறுபுறம் அம்பிகைக்குரிய காமாட்சியம்மன் கோயில் இரண்டுக்கும் நடுவில் விளங்குகிறது முருகனின் குமரகோட்டம்.
சிவ – பார்வதி இடையில் முருகன் அமர்ந்திருக்கும் கோலம் ‘சோமாஸ்கந்த மூர்த்தி’ எனப்படும்.  இந்த சோமஸ்கந்த மூர்த்தி அமைப்பிலேயே காஞ்சியில் மேற்கண்ட மூன்று கோயில்களும் இருப்பது சிறப்பானதாகும்.   
திருமுருகன் கோயிலாக விளங்கும் குமர கோட்டத்தின் குருக்களே கந்த புராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியார்.
பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அர்ச்சனை, அபிேஷகம், அலங்காரம் செய்து வந்த கச்சியப்பருக்கு வேலவனின் வரலாற்றை  தமிழில் பாடவேண்டும் என்ற தணியாத ஆவல் இருந்தது.
‘அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன
அவை தருவித்தருள் பெருமாளே!’
என்ற திருப்புகழ் வாக்கிற்கேற்ப கச்சியப்பருக்கு கந்த பெருமானின் அருட்காட்சி கனவில் வாய்த்தது.
‘அடியவனே! என் வரலாற்றை காவியமாகப் பாடுக! இதோ ஆரம்பவரி’ என்று அருள்புரிந்தார் வேலவன்.
‘‘திகடச் சக்கர செம்முகம் ஐந்துளான்
சகடச் சக்கர தாமரை நாயகன்
அகடு அசக்கு அரவின் மணியாஉறை
விகடச் சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்’’
எனத் தொடங்கி தினமும் பாடல் புனைந்தார் கச்சியப்பர்.
ஒவ்வொரு நாளும் எழுதிய பாடல் ஏடுகளை குமர கோட்ட முருகனின் திருவடியில் வைத்து மறுநாள் அதிகாலையில் ஏடுகளை எடுத்து படிப்பதை  வழக்கமாகக் கொண்டார் கச்சியப்பர்.
என்ன ஆச்சர்யம்!
வைத்த ஏடுகளில் திருத்தம் செய்திருப்பதைக் கண்டு ‘என்னே! முருகப் பெருமானின் அருள்!’ என புளகாங்கிதம் அடைந்தார்.
கந்தபுராணத்தின் 10,345 பாடல்களும் வேலவனே படித்துப் பார்த்து திருத்தி தந்தவை என்றால் ஆறுமுகனின் ‘ஆட்டோ பயோகிராபி’ என அறுதியிட்டு கூறலாம் அல்லவா!
சுப்பிரமண்ய கடவுளே எழுதிய சுயசரிதையான கந்தபுராணம் பன்னிரண்டாம் நுாற்றாண்டில் பிறந்தது.
அமுதம் பெற தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த கதை நமக்கு தெரியும்.
அப்போது கடலிலிருந்து சந்திரன் வந்தான். லட்சுமி தேவி தோன்றினாள். அமுதம் உண்டானது என்கிறது புராணக்கதை. கந்தபுராணம் என்னும் காவியக் கடலை கடைந்தால் கல்வியாகிய மதி என்னும் சந்திரன் தோன்றுவான்.
லட்சுமி தேவிக்கு ஈடாக இதில் சரஸ்வதி காட்சி அளிப்பாள்.
நாவிற்கு சுவையூட்டும் அமுதம் அங்கே விளைந்தது போல இக்கவிதைக் கடலில் காதிற்கும், நாவிற்கும் சுவையூட்டும் பாட்டமுதம் பிறந்து பரவசமூட்டும் என்று புலவர்கள் சிறப்பிக்கிறார்கள்.
‘உச்சிதமாம் சிவவேதியன் காளத்தி ஓங்கு மைந்தன்
கச்சியப்பன் செய்த கந்தபுராணக் கலைக் கடலில்
மெச்சிய சீர் கல்வி மதியும் வெண்தாமரை மேவும் மின்னும்
இச்செவி நாவினுக்கு இன்பாம் அமுதும் விளைந்தனவே!
அழகு, அறிவு, ஆற்றல் அனைத்தும் ஒருசேரப் பெற்ற வடிவேலன் வரலாற்றை அனுபவிப்போம் வாருங்கள்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar