|
தசரதனின் மனைவியர் மூவரும் ஆழ்ந்த சோகத்துடன் அமர்ந்திருந்தார்கள். ஆம், கைகேயியும்தான். கோசலையும், சுமித்திரையும் சங்கடத்துடன் அவளைப் பார்த்தார்கள். ‘ஏன் இந்த துவேஷம், கோபம், வெறுப்பு, இறுதியில் மீட்க இயலா இழப்பு…?’ என்று மானசீகமாக அவளிடம் கேட்டார்கள். அவர்களைப் பார்த்து மெல்ல சிரிக்க முயன்றாள் கைகேயி. ‘‘உங்களிடம் நான் சொல்லத்தான் வேண்டும். என் மனதுக்குள் இருக்கும் ரகசியத்தை நீங்கள் கட்டாயம் அறியத்தான் வேண்டும்’’ என ஆரம்பித்தாள். கோசலையும், சுமித்திரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். என்ன சொல்ல வருகிறாள் இவள்? ரகசியமா? அதுதான் பகிரங்கமாகத் தன் விருப்பங்களை – பேராசைகளை – குரூரமாக நிறைவேற்றிக் கொண்டு விட்டிருக்கிறாளே, இதில் ரகசியம் என்ன வாழ்கிறது? ‘‘உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, இத்தகைய ஒரு நிலைமை உருவானதற்கு ஆரம்ப காரணம், என் சீதன வெள்ளாட்டியான கூனி என்ற மந்தரைதான்’’ சரிதான், தன்னுடைய கொடூரமான செயல் கடுமையாக விமரிசிக்கப்படுவதிலிருந்தும், முழுப் பழியும் தன்மீது விழாத வகையிலும் ஒரு தற்காப்பு முயற்சியாக இவள் தன் தாதி, கூனியின் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறாள்… ‘‘ஆனாலும் அவள் ஆரம்பித்து வைத்தது என்னைப் பொறுத்தவரை நல்லதுக்கே என்றே நான் நினைக்கிறேன்’’ இருக்காதா பின்னே? கணவன் இறக்க நேர்ந்தாலும் பரவாயில்லை, தன் மகன் அரியணை ஏற வேண்டும் என்ற சுயநலம் வெற்றி பெற்று விட்டதே நல்லதுக்குதானே? ‘‘நம் கணவர் எனக்கு இரண்டு வரங்களைக் கொடுத்திருந்ததை அவள்தான் எனக்கு நினைவூட்டினாள். அவற்றைப் பயன்படுத்தி இப்போதைய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள யோசனையும் சொன்னாள். அவளுக்கு ராமன் மீது என்ன காழ்ப்புணர்ச்சியோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் ராமன் மீது வெறுப்பு பாராட்டக் கூடிய ஒரு நபர் இருப்பார் என்பதே எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அதுவும் என்னுடைய சேடிப் பெண்ணான மந்தரை அப்படி ஒரு வன்மம் பாராட்டுவாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை’’ ‘‘ராமனுக்கு எதிராக இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், உன் மகன் பரதன் மீதான அக்கறை, மற்றும் பாசம் காரணமாக அப்படிச் சொல்லியிருக்கலாம் என எடுத்துக் கொள்ளலாமே’’ கோசலை அப்பாவியாகத் தன் கருத்தைச் சொன்னாள். ‘‘ஆமாம், அப்படித்தான் இருக்கும். ராமன் மீது யாருக்காவது கொஞ்சமாவது கோபமோ, வருத்தமோ ஏற்பட முடியுமா என்ன?’’ ‘ஆனால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதே’ என்று சுமத்திரை மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். அதை கைகேயியால் கேட்க முடிந்தது. ‘‘வெளிப்படையாகப் பார்த்தால் நான் ராமனுக்கு முற்றிலும் எதிரானவள் என்றுதான் எல்லோருக்குமே தோன்றும். ஆனால் நான் ராமனின் நன்மைக்காகத்தான் இத்தனை மூர்க்கமாக நடந்து கொண்டேன்’’ பிற இருவரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டார்கள். என்ன சொல்ல வருகிறாள் கைகேயி? இதே உணர்வை சற்றுத் தொலைவில், திரைச்சீலைக்குப் பின்னால் நின்றபடி கேட்டுக் கொண்டிருந்த மந்தரையும் அடைந்தாள். ‘பரதனின் நன்மைக்காக’ என்பதைத்தான் வாய் குளறி மாற்றிச் சொல்லி விட்டாளோ?‘ ‘‘மந்தரை எனக்குள் விரோதத்தைத் துாண்டிவிட முயற்சித்தாள் என்பது உண்மையே. ஆனால் என்னிடம் அவ்வாறு மாற்றம் நிகழ்ந்ததா என்பதை அவளால் அனுமானிக்க முடியவில்லை. அதனாலேயே துாண்டிவிட்ட தீபம் காட்டுத் தீயாக மாறும் என்ற எதிர்பார்ப்பில் அவள் என்னை விட்டு அகன்றாள். சற்றே குழப்பம் மேலிட்டாலும், அப்போதைக்கு எனக்கு அமைதி வேண்டியிருந்ததால், மிகுந்த யோசனையுடன் நந்தவனத்திற்குச் சென்றேன். அங்கே அரசவை ஜோதிடர்கள் இருவர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. இந்த உரையாடல்தான் நான் என்னுடைய கொடிய நாடகத்தை நடத்த முழு காரணமாக அமைந்தது’’ நாடகமா…? ‘‘ஆமாம், அவர்கள் அப்போதைய கிரக நிலையைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். ஐந்தாம் இடத்தில் சனி, ராகு, கேது, செவ்வாய் தசையில் சனி புக்தி என்று என்னவெல்லாமோ உச்சரித்தார்கள். அசுப கிரகங்கள் என்றும் விமரிசித்துக் கொண்டார்கள். அவர்களை நான் அறிவேன். ஜோதிட சாஸ்திரத்தில் மகோன்னதமானவர்கள் அவர்கள். கிரகங்களின் சஞ்சாரத்தையும், அதன் விளைவுகளையும் துல்லியமாக் கணக்கிட்டு சொல்லக் கூடியவர்கள். ‘மிக மோசமான கிரக சஞ்சாரமாக இருக்கிறதே! இதன் தாக்கமும், அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளும் சில வருடங்களுக்கு நீடிக்கப் போகின்றனவே! முக்கியமாக அரச பதவியில் இருப்பவர் மோசமாக பாதிக்கப்பட இருக்கிறாரே! அந்த பாதிப்பு, அவருடைய உயிரைப் பறிக்கும் அளவுக்கும் போகுமே! இந்தச் சூழ்நிலையில் ராமனை சிம்மாசனத்தில் அமர வைத்தால் அவனுக்குப் பேராபத்து நிகழக்கூடுமே! ‘விநாச காலே விபரீத புத்தி‘ என்று சொல்வதுபோல தசரதன் திடீரென்று இப்போது இப்படி ஏன் இந்த முடிவை எடுத்திருக்கிறார்? அதுவும் பரதன் இங்கே இல்லாத சூழலில் தன் மாமனுடன் சிலகாலம் இருந்துவிட்டு வா என்று தசரதனே அனுப்பி வைத்துவிட்ட சூழலில் ராமனுக்கு முடிசூட்ட ஏன் இப்படி பரபரக்க வேண்டும்? கிரக சஞ்சாரம், அதனால் உண்டாகும் தீய விளைவுகளைப் பற்றி அவருக்குத் தெரியவில்லை என்றாலும், எதுவும் விதிப்படிதான் நடக்க வேண்டும் என்ற உண்மை அவரை இவ்வாறு விபரீதமாக யோசிக்க வைத்திருக்கிறதோ…’ ‘இந்த கிரக சஞ்சார காலகட்டத்தில் அரச பதவியில் இருப்பவருக்கு ஆபத்து என்ற உண்மை அவருக்குத் தெரிந்திருக்காவிட்டாலும், ஒரு தந்தையின் உள்ளார்ந்த பாச உணர்வில், தன் மகன் ராமன் அரியணையை அலங்கரிக்க வேண்டும் என்ற இயல்பான ஆவலில் தானே அறியாமல் அவர் அவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் இல்லையா?’ ‘உண்மைதான், அப்படித்தான் அவர் முடிவெடுத்திருக்கிறார். ஆனால் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாமல் ஏன் பரதனை அயோத்தியில் இல்லாத காலத்தை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்? அவன் இவருடைய இந்த ஏற்பாட்டுக்கு முட்டுக்கட்டை போட்டு விடுவானா என்ன?’ ‘எனக்கும் அதுதான் புரியவில்லை. இத்தனைக்கும் பரதன் ராமனை அப்படிப் போற்றி, புகழ்ந்து, அவனுக்குத் தம்பி என்ற வகையில் பெருமை மிகக் கொண்டிருப்பவன். ஆகவே அவனால் தசரத சக்ரவர்த்தியின் ராம பட்டாபிஷேக ஏற்பாட்டுக்கு எந்தக் குந்தகமும் விளைந்துவிட முடியாது’ ‘ஆமாம், அதைவிட நாளைக்கே அந்த வைபவம் என்று அவசரமாக தசரதன் ஏன் தீர்மானித்தார் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது’ ‘‘இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். ஏதோ பெருந்துயர் நேரிடப் போகிறது என்று என் உள்ளுணர்வும் எச்சரித்தது. ஆபத்து என்று நிகழக் கூடுமானால் அது ராமனுக்கு ஏன் நேர வேண்டும் என்று யோசித்தேன். அவன் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது…. அதனால்… அதனால்…’’ தயங்கி நின்ற கைகேயியை இரு பெண்களும் வியப்போடும், திகிலோடும் பார்த்தார்கள். ‘‘அதனால் பழுத்த இலை உதிர்வதுதான் காலத்தின் கட்டாயம். துளிர்க்கும் இலைக்கு இன்னும் எத்தனையோ கால அவகாசம் இருக்கிறது. ஆகவே சிம்மாசனத்தில் நம் கணவரே தொடர்ந்து அமரட்டும், அதனால் அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நாமெல்லாம் இருக்கிறோம், அவர் உடல் நலத்தைப் பாதுகாப்போம். அவருடைய ஆயுட்காலம் முடிவதாகவே சூழ்நிலை அமையுமானால் அதுவும், அவருடைய வயதை உத்தேசித்து நாம் எதிர்பார்க்கும் ஒன்றாகவே ஆகிவிடும். ஆனால் ராமனுக்கு ஏதேனும் தீங்கு நேருமானால், அது எத்தனை பெரிய வருத்தம், சோகம். அதற்கு இடம் கொடுக்கலாமா என்று யோசித்தேன். உடனே மந்தரை எடுத்துக் கொடுத்த யோசனையை செயல்படுத்த முற்பட்டேன்’’ இருவரும் கைகேயியை பிரமிப்புடன் பார்த்தார்கள். ‘‘நம் கணவரிடம் மிகவும் முறைகேடாக நடந்து கொண்டேன். மனதுக்குள் அழுதபடியே வெளியே மூர்க்கத்தனமாக அவருடன் வாய்ச்சண்டையிட்டேன். என்னுடைய ஒவ்வொரு சொல்லாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் குன்றிப் போகும்போது உள்ளுக்குள்ளேயே பெருங்கூக்குரலிட்டு அழுதேன். இறுதியாக எனக்கு அவர் கொடுத்த வரங்களை இப்போது நிறைவேற்றித் தரத்தான் வேண்டும் என்று கட்டாயப்படுத்தினேன்’’ கைகேயியையே தாங்கொணா குழப்ப பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பிற இருவரும். இன்னும் என்னவெல்லாம் சொல்லப் போகிறாள் இவள்?
|
|
|
|