|
மணிகண்டன் மகிஷியை அழித்ததும் அத்தோடு பிரச்னை நிற்கவில்லை. மலை போல் சரிந்த அவளின் உடல் வளர ஆரம்பித்தது. இது மேலும் வளர்ந்தால் உலகுக்கே ஆபத்து ஏற்படும் என நினைத்த தேவர்கள் அங்கு கிடந்த பாறைகளைத் துாக்கி அவளது உடல் மீது வைத்தனர். அத்துடன் வளர்ச்சி நின்று விட்டது. இந்தப் பகுதியை ‘கல்லிடுங்குன்று’ என பக்தர்கள் அழைக்கின்றனர். சபரிமலை செல்லும் வழியில், பக்தர்கள் ஓரிடத்தில் கல் வீசி எறிந்து செல்வர். இதற்கு காரணம் மகிஷி போன்றவர்களின் கொட்டம் பூவுலகில் மீண்டும் வரக் கூடாது என்பதற்காகத் தான். இதன்பின் மகிஷியை வதம் செய்த மணிகண்டனை தேவர்கள் போற்றி வணங்கினர். அவனிடம் இந்திரன்,“தாங்கள் வந்த பணி முடிந்தது. இந்த இடத்தை எங்களால் மறக்க இயலாது. இந்த இடத்தை ‘காந்தமலை’ என அழைப்போம். காந்தம் எப்படி இரும்பை ஈர்க்குமோ, அதுபோல் பக்தர்களை ஈர்க்கும் காந்தமாக நீங்கள் விளங்குவீர்கள். இங்கே நான் தேவலோக சிற்பி விஸ்வகர்மா மூலம் ஒரு மாளிகை எழுப்புகிறேன். அதை பொன்னம்பலம் என்பர். இங்கே தாங்கள் குடியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்” என்றான். மணிகண்டன் அதை ஏற்றான். தேவர்களுக்கு விஸ்வரூபம் தரிசனம் காட்டி விஸ்வகர்மா அமைத்த பொன்னம்பலத்தில் அமர்ந்தான். பிறகு ஜோதியாக மாறினான். “இந்திரா! நான் இங்கு என் சுயவடிவில் அல்லாமல் ஜோதியாக ஒளிர்வேன். மகர சங்கராந்தியன்று (சூரியன் மகர ராசியில் நுழையும் முதல் நாள், தை முதல் நாள்) பக்தர்களுக்கு காட்சி தருவேன். பிறப்பற்ற நிலையை நாடும் பக்தர்களுக்கே மட்டும் நான் கண்களில் தெரிவேன். மற்றவர்களுக்கு என் வடிவம் தெரியாது. ஒரு மண்டலம்(41 நாட்கள்) கடும் விரதமிருந்து பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்து வருபவர்களுக்கு ஜோதி தெரியும்” என்றான். இந்த சம்பவத்தை சபரியிடம் கூறிய மணிகண்டன்,“அம்மா! இப்போது புரிந்து கொண்டீர்களா? பிறப்பற்ற நிலையை அடையும் முறையை!” என்றதும், சபரி மகிழ்ந்தாள். “அப்பா! நான் துறவி. எனினும் கடும் விரதமிருந்து காந்தமலை செல்வேன். அங்கே உன்னைத் தரிசித்து பிறப்பற்ற நிலை அடைவேன்” என்றாள். இதையடுத்து மணிகண்டன்,“ இன்னும் ஒரு வரம் இருக்கிறது, அதையும் கேள்” என்றதும், “தெய்வக்குழந்தையே! உன்னை பார்த்ததே எனக்கு பெரிய வரம் தான். இருப்பினும், இங்கு வரும் பக்தர்கள் உன்னை உருவமாகவும் தரிசிக்க வேண்டும். அதற்கு வசதியாக இந்த மலையில் நீ யோகாசனத்தில் எழுந்தருள வேண்டும். நான் பெற்ற இன்பம், இந்த வையகமும் பெற வேண்டும்” என்றாள். மணிகண்டன் சம்மதித்தான். “அன்னையே! உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். என் மீது நீ கொண்ட பக்தியைப் பாராட்டி, இந்த மலைக்கு உன் பெயரையே சூட்டுகிறேன். நீ தங்கியிருந்த இந்த இடமும் சபரி பீடம் என்றே வழங்கப்படும். என்னைத் தேடி வரும் பக்தர்கள் உன்னை வணங்கிய பின்பே என்னை வணங்க வருவர்” என்றான். சபரி கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஐயப்பன் அவளிடம் விடை பெற்று கிளம்பினான். இங்கே இவ்வாறு இருக்க, பந்தளம் அரண்மனையில் ராஜா ராஜசேகரன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். ‘பாலகனான மணிகண்டனை காட்டுக்கு அனுப்பினோமே! சென்ற பிள்ளையைக் காணவில்லையே! அவனுக்கு என்னாயிற்றோ!’ என்று புலம்பினார். தலைவலியால் துடிப்பது போல் ராணி நடித்தாலும் மணிகண்டன் மீது பாசம் கொண்டவள் என்பதால் அவளும் உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்தாள். மந்திரி மட்டும் மட்டற்ற மகிழ்ச்சியை மனதில் தேக்கிக் கொண்டு முகத்தில் மட்டும் கவலை ரேகையை படரவிட்டு சிறப்பாக நடித்துக் கொண்டிருந்தான். இவனைப் போன்றவர்களைத் தான் வள்ளலார் ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்’ என்று கூறுகிறார். தன் சுயநலத்திற்காக அனைவரையும் ஏமாற்றி ஒரு குடும்பத்தின் அழிவுக்கே வித்திட்டுக் கொண்டிருந்தான் மந்திரி. ஆனால் இது கூட தெய்வ சங்கல்பமே. அவன் இப்படி ஒரு ஏமாற்று வித்தையைக் கைக்கொள்ளாமல் இருந்திருந்தால், மணிகண்டனின் வீரத்தை உலகம் அறிந்திருக்குமா என்ன! ஒருவழியாக மணிகண்டன் பந்தள நாட்டின் எல்லையை வந்தடைந்தான். அவன் புலிக்கூட்டத்துடன் வருவதைப் பார்த்த மக்கள் அச்சமும், ஆச்சரியமும் கொண்டனர். இப்படி ஒரு மாவீரனா? இவனை இளவரசனாக அடைய இந்த நாடு என்ன பாக்கியம் செய்தது என்று உள்ளுக்குள் எண்ணங்கள் ஓடினாலும், வீட்டுக்குள் ஓடிச்சென்று கதவை அடைத்துக் கொண்டு, இடுக்குகளின் வழியே என்ன நடக்கிறது என கவனித்தனர். இதற்குள் எல்லைக்காவல் வீரர்கள், குதிரையில் விரைந்து சென்று ராஜசேகரன் முன் நின்றனர். அவர்களில் ஒருவன்,“மகாராஜா! இந்த உலகிலேயே நடக்க முடியாத ஒரு அதிசயத்தை எங்கள் கண்களால் கண்டோம். இதென்ன மாயமா! மந்திரமா...எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை...” என்றதும், மன்னர் அவசரமாக,“என்ன நடந்தது! விளக்கமாக சொல்” என்றார் பரபரப்புடன். உடனே மற்றொருவன் குறுக்கிட்டு,“மன்னாதி மன்னரே! இன்று பந்தளத்தின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். நம் வீரத்திருமகன் இளவரசர் மணிகண்டன், புலி மீது ஏறி வருகிறார். அவர் பின்னால் பல புலிகள் அணி வகுத்து வருகின்றன. இதைக் கண்ட மக்கள் அலறியடித்து ஓடுகின்றனர். தாயின் பிணி தீர்க்க, எந்த பிள்ளையும் செய்யாத, இனி செய்ய இயலாத வீரச்செயலை செய்து காட்டி விட்டார். வாருங்கள். புலிக்கூட்டம் அரண்மனைப் பக்கம் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடும். நம் இளவரசரை வரவேற்க வேண்டும்” என்றான். பந்தள மன்னருக்கு மூச்சு வருகிறதா...இல்லை நின்று விட்டதா என்று கணிக்க முடியாத நிலை...‘ஒரு புலியைப் பிடிப்பதே பெரும்பாடு. பிடித்தாலும் கூண்டில் அடைத்து வண்டியில் ஏற்றி தான் வர வேண்டும். நம் மணிகண்டனோ, புலியில் அமர்ந்து வருகிறானாம். போதாக்குறைக்கு ஒரு புலி கூட்டமே பின்னால் வருகிறதாம்! இந்த அதிசயம் எவர் வாழ்விலாவது நிகழுமா?’ என சிந்தித்தபடியே, ராணியை ஏறிட்டுப் பார்த்தார். அவள் மயக்கநிலைக்கே போய்விட்டாள். மந்திரிக்கோ நெஞ்சே நின்று விட்டது. இனி தன் அரசியல் வாழ்க்கை அவ்வளவு தான்..நம் குட்டு வெளிப்பட்டால் தலையே போய் விடும், கை,கால்கள் உதற அரசரின் பின்னால் சென்றான். இதற்குள் புலிக்கூட்டம் அரண்மனை வாசலுக்கு வந்து விட்டது. மணிகண்டன் புலியிலிருந்து இறங்கி, தந்தையின் காலில் விழுந்து வணங்கினான். மன்னர் அவனை இறுக்கமாக தழுவிக் கொண்டார். “என் செல்வமே! இதென்ன அதிசயம்! புலியைப் பிடிக்கும் முயற்சியில், உன்னை இழந்து விடுவோனோ என்று பயந்து கொண்டிருந்தேன். இது எப்படி சாத்தியமாயிற்று!” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே ராணி ஓடி வந்து மணிகண்டனின் பாதங்களில் விழுந்தாள். “மகனே! என்னை மன்னித்து விடு” என்று கதறினாள். பின்னாலேயே ஓடி வந்த மந்திரியும், மணிகண்டனின் திருவடிகளில் விழுந்து,“இளவரசே! உங்களை சாதாரணமானவர் என நினைத்து துஷ்ட செயல் புரிந்தேன். எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன்” என புலம்பினான். இவர்களுக்கு என்னாயிற்று என்ற கேள்விக்குறியை முகத்தில் தேக்கிய ராஜசேகரன், இருவரையும் கடுமையான குரலில், “எழுந்திருங்கள். என்ன தவறு செய்தீர்கள்! சொல்லுங்கள்” என்று கத்தினார்.
|
|
|
|