|
சிறுவன் ஒருவனின் உடல் முழுவதும் கரும்புள்ளிகள் பரவிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட மாணவர்கள் பரிகாசம் செய்தனர். மற்றவருடன் சேர்ந்து விளையாட முடியாததால் சிறுவன் மனம் வாடினான். தாழ்வுமனப்பான்மையால் உடல் மெலிந்தான். சிகிச்சை செய்தும் பலனில்லை என்ற நிலையில் காஞ்சி மஹாபெரியவரை அவனது தாய் சந்தித்து முறையிட்டாள். ‘‘குழந்தை இங்கேயே என்னுடன் மூணுநாள் தங்கட்டுமா’’ எனக் கேட்டார் மஹாபெரியவர். ‘‘எத்தனை நாள் வேண்டுமானாலும் பெரியவாகிட்ட இருப்பது பாக்கியம்’’ என்றாள். ஓரிரு நிமிடமாவது பெரியவரின் சன்னதியில் நிற்க மாட்டோமா...அவரது அருட்பார்வை நம் மீது விழாதா...என அனைவரும் ஏங்கும் நிலையில் இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும் என தாய் மகிழ்ந்தாள். ‘‘நான் என்ன சாப்பிடுறேனோ அதைத் தான் நீயும் சாப்பிடணும்’’ என்றார் மஹாபெரியவர். ‘‘பெரியவா...என்ன சொன்னாலும் கேட்பேன். உடம்பு குணமானால் போதும்’’ என்றான் சிறுவன். ‘‘ உப்பு சேர்க்காத மோரை அடிக்கடி சாப்பிடணும். ஆனா காபி, டீ எதுவும் சாப்பிடக் கூடாது சரியா’’ என்றார். ‘‘சொல்றபடியே செய்றேன் பெரியவா’’ என தலையாட்டினான். மடத்தில் சிறுவனுக்கு வரவேற்பு இருந்தது. அடிக்கடி குடிப்பதற்கு மோர் கொடுத்தனர். பெரியவரும் அவ்வப்போது நலம் விசாரித்தபடி இருந்தார். பெரியவர் பிைக்ஷ செய்த திருவமுது சிறுவனுக்கு வழங்கப்பட்டது. வாழைத்தண்டை பொடிப்பொடியாக நறுக்கி தயிரில் கலந்து கொடுக்கச் சொன்னார். அதுவே பெரியவருக்கும் உணவாகவும், சிறுவனுக்கு பிரசாதமாகவும் தரப்பட்டது. உப்பு, காரம், கடுகு, உளுந்து சேர்க்காத பச்சை வாழைத்தண்டை சாப்பிட்டு பசியை பொறுத்துக் கொண்டான். கரும்புள்ளிகள் மங்கத் தொடங்கின. வெறும் வாழைத்தண்டும், மோரும், நோயைக் குணப்படுத்த போதுமா...மஹாபெரியவர் நிகழ்த்திய அற்புதம் தான் இது. சிறுவனின் தாய் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. மஹாபெரியவர் விடை கொடுத்த போது, ‘‘ஒரு மாசத்துக்கு உப்பு, புளி, மிளகாய் சேர்க்காத உணவைச் சாப்பிடு. உடம்பு நலம் பெறும்’’ என சிறுவனுக்கு ஆசியளித்தார். கண்ணீருடன் விடைபெற்றார் தாய். இதில் நம்மை நெகிழச் செய்யும் விஷயம் என்னவென்றால் இந்த சம்பவம் நடக்கும் போது காய்கறிகளுடன் உணவை பிைக்ஷயாக மஹாபெரியவர் ஏற்று வந்தார். ஆனால் சிறுவனுக்கு பத்தியம் தேவை என்பதால் அதையே தானும் பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
|