|
ராமாயணத்தில் ராவணன் மகனான இந்திரஜித்துக்கும், லட்சுமணனுக்கும் இடையே போர் நடந்தது. இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் லட்சுமணன் மயங்கி விழுந்தார். இலங்கை அரச மருத்துவரான சுசேனர் இமயமலையில் விளையும் சஞ்சீவினி என்னும் மூலிகையை கொண்டு வந்தால் குணப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். உடனடியாக இமயமலைக்கு விரைந்தார் அனுமன். இதையறிந்த ராவணன் தடைகளை ஏற்படுத்த அவற்றை முறியடித்தார். அங்கு காலநேமி என்னும் அசுரனை அனுப்பினான் இந்திரஜித். சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அனுமன் அடைந்த போது அங்கு முனிவர் வடிவில் நின்றிருந்தான் காலநேமி. முனிவரைக் கண்ட அனுமன் வணங்க, அருகில் இருந்த குளத்தைக் காட்டி, ‘‘இதில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள். உன் எண்ணம் ஈடேறும்’’ என்றான். அனுமன் நீராடிய போது காலநேமியால் ஏவப்பட்ட மாய முதலை அவரை விழுங்கியது. அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு அனுமன் வெளியேறினார். அந்த முதலை ஒரு தேவனாக மாறியது. ‘‘என் பெயர் தான்யமாலி. சாபத்தால் முதலையாக குளத்தில் இருந்தேன். உங்களால் சாப விமோசனம் பெற்றேன்’’ என்றதோடு காலநேமியின் சதித்திட்டத்தையும் தெரிவித்தான். காலநேமியைக் கொன்றதோடு மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனைக் காப்பாற்றினார். இந்த வரலாறு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சேஷராயர் மண்டபத் துாண்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. |
|
|
|