|
ஏழை பக்தன் ஒருவன் கயிலாய மலைக்குச் சென்றான். அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்தார். மகிழ்ந்த அவன், ‘‘சிவபெருமானே, உம் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர வேறு மகிழ்ச்சி எனக்கு இல்லை. தங்களுக்கு பணி செய்யக் காத்திருக்கிறேன்’’ என்றான். ஒரு கோணிப்பையை கொடுத்த சிவன். ‘‘நான் செல்லும் இடமெல்லாம் இதை துாக்கிக் கொண்டு வா. நம்மைத் தவிர மற்றவர் கண்களுக்கு இது தெரியாது’’ என்றார். அழுக்கு மூட்டையை சுமக்கச் சொல்கிறாரே! என எரிச்சல் பட்டான் அவன். வேறு வழியின்றி சிவபெருமானுடன் சென்றான். பலமுறை அவன் முகத்தில் சலிப்பு வெளிப்பட்டாலும் மவுனமாகவே இருந்தார் சிவன். அவன் சுமக்க சிரமப்பட்ட இடங்களில் தானும் கைகொடுத்து உதவினார். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் ‘போதும் சுமந்தது. மூட்டையை இறக்கி வை’ என கட்டளையிட்டார். ‘மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா?’ என்று சிவன் புன்முறுவல் செய்ததும் மூட்டையில் உள்ள முடிச்சு தானாகவே அவிழ்ந்தது. பொன்னும் மணியும் நவரத்தினங்களும் எங்கும் சிதறின. ‘இத்தனை காலம் வறுமையில் வாடிய உனக்கு நான் கொடுக்கும் அன்பு பரிசு இது’ என்றார் சிவன். சட்டென்று சுவாமியின் பாதங்களில் விழுந்தான். ‘‘பெருமானே! என்னை மன்னியுங்கள். அரிய பொக்கிஷத்தை கொடுத்தும் தங்களை தவறாக நினைத்துவிட்டேனே. உண்மை புரிந்திருந்தால் இந்த கோணிப்பையை சுகமாக எண்ணி சுமந்திருப்பேன். புலம்பியிருக்க மாட்டேனே’’ என்று கண்ணீர் விட்டான். அப்போதும் புன்னகைத்தார் சிவன். நம் ஒவ்வொருவருக்கும் உரிய வாழ்க்கையை கடவுள் அழகாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். அதைச் சுமையாக கருதுவதும், சுகமாக கருதுவதும் நம் கையில் தான் இருக்கிறது.
|
|
|
|