|
கைகேயி தொடர்ந்து பேசினாள் ‘‘நம் கணவருக்குப் பேரதிர்ச்சி. ராமனை நான் பார்த்துகொண்ட விதம், அவனைப் பாசத்துடன் நான் பராமரித்த பாங்கு கண்டு மகிழ்ச்சியுடன் பலமுறை வியந்தவர் அவர். அத்தகையவளான நான் இப்படி ராமனுக்கு எதிராக நிற்பேன் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். நான் கொஞ்சமும் இறங்கி வராத வேதனையில், என் ஆவேசமான பேச்சாலும், மூர்க்கத்தனமான செயல்களாலும் மனம் வெறுத்த வழியின்றி சம்மதித்தார். ஆனால் அதற்கு முன் என்னை கடுமையாக ஏசினார். பெண் குலத்துக்கே, ஏன் தாய்மைக்கே நான் அவமானச் சின்னம் என கடுஞ்சொல் வீசினார். நான் அமைதியாக ஏற்றுக் கொண்டேன். அந்த அவமரியாதைக்கு உரியவள்தானே, நான்’’ இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பாராத கோசலையும், சுமித்திரையும் நெருங்கி வந்து கைகேயியின் தோள்களை அன்புடன் தொட்டார்கள். ‘‘அவரது கடுஞ்சொற்கள் என்னைக் காயப்படுத்தவில்லை. அது நியாயமான கோபத்தின் வெளிப்பாடு. அந்த சுடு சொற்களால் நான் மட்டும்தானே பழிக்கப்படுகிறேன் என்பதே எனக்கு ஆறுதலாக இருந்தது. ஒரு முடிவாக ராமன் காட்டுக்குச் செல்வது உறுதி என்றான பிறகே நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்’’ ‘‘ஆனால் இப்போது ராமன் இங்கே இல்லை, நம் கணவரும் வைகுந்தம் ஏகிவிட்டார். உன் விருப்பப்படியும், அதை நம் கணவர் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலும், பரதன் அரியாசனத்தில் அமர்ந்தால் அவனுக்கும் கிரகங்களால் பாதிப்பு ஏற்படத்தானே செய்யும் அது உனக்கு சம்மதமா...’’ கோசலை கண்களில் நீர் பெருகக் கேட்டாள். ‘‘சம்மதம்’’ என பதிலளித்த கைகேயியைப் பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். ‘‘இந்த மோசமான பின்விளைவை எதிர்பார்த்துதான் பரதன் நாடாள வேண்டும் என வரம் கேட்டாயா? என்ன கொடுமை இது’’ ‘‘ஆமாம். ராமன் காப்பாற்றப்பட வேண்டுமானால் அதற்காக பரதனை தியாகம் செய்யவும் தயாராக இருந்தேன்’’ ‘‘ஐயோ என்ன சொல்கிறாய் நீ’’ ‘‘ஆமாம், அதற்கும் நான் இந்த விஷயத்தில் உறுதியாகத்தான் இருந்தேன். ஆனால் எனக்கு பரதனைத் தெரியும். அவன் அரியணை மீது ஆர்வம் கொண்டவனல்லன். ராமனுக்கு மறுக்கப்பட்ட அரசுரிமையைத் தான் கைக்கொள்ள அவன் சம்மதிக்க மாட்டான். அத்தகைய ராம பக்தன் அவன். ராமன் வடிவில் நம் குல தெய்வமான ஸ்ரீரங்கநாதரை வழிபடும் உத்தம சகோதரன் அவன்’’ ‘‘அவன் அரச பதவியை விரும்பாதது ஒரு பக்கம் இருக்கட்டும், தன் தமையன் காடேகியதற்கும், தந்தையார் விண்ணேகியதற்கும் நீ தான் காரணம் என்று தெரிந்த பின், பரதன் உன்னைக் கேவலமாக நினைக்க மாட்டானா, உதாசீனப்படுத்த மாட்டானா?’’ ‘‘நிச்சயம் செய்வான். அதையும் நான் எதிர்பார்த்துதான் காத்திருக்கிறேன். அவனைப் பொறுத்தவரை நான் செய்தது மிகப் பெரிய கொடுமை, இல்லையா? அவன் மட்டுமா, அனைவருக்குமே நான் இப்போது மிக பொல்லாதவள் ஆகிவிட்டேனே! எல்லோருக்கும் வேண்டாதவள் ஆகிவிட்டேன். ஆனால் இதனால் எனக்கு வருத்தம் இல்லை’’ ‘‘நம் கணவரிடம் கிரகநிலை பற்றி தெரிவித்திருக்கலாமே! ஜோதிடர்களை வரவழைத்து ஆலோசனை கேட்டிருப்பாரே’’ ‘‘உண்மைதான். ஆனால் எனக்கு உடன்பாடு இல்லை. தனக்கு நேரப்போகும் விதியை தெரிந்து கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைக்கு அவரை ஆளாக்க வேண்டுமா? அதன்பின் அவரால் இயல்பாக இருக்க முடியுமா? என்றோ வரப்போகும் அந்த முடிவை எண்ணி கலங்க மாட்டாரா? இந்த உண்மை ராமனுக்குத் தெரிந்தால் அவனால் அதைத் தாங்க முடியுமா? அவ்வாறு அவன் வருத்தப்படுவதை நம் கணவர் சகிப்பாரா? ‘‘ஆக, ராமன் இல்லை, பரதனும் இல்லை என்றான பிறகு, அந்த ராஜ சிம்மாசனத்தை நம் கணவரே தொடர்ந்து அலங்கரிப்பார். அதனால் ராமனுக்கும் சரி, பரதனுக்கும் சரி பாதிப்பும் நிகழ வாய்ப்பில்லை. இந்தச் சூழலில் நம் கணவருக்குப் பிரச்னை உருவாகும் என்றாலும், அது கிரக சஞ்சாரங்களின் விளைவு என்பதோடு அவருடைய முதுமையும் அதற்குத் தவிர்க்க முடியாத காரணமாக அமைந்துவிடும். இதில் யாருக்கும் சந்தேகமும் எழாது, தற்காலிக வருத்தம் உண்டாகலாமே தவிர அது நீடிக்காது, ராம ராஜ்யத்தில் இதெல்லாம் மறக்கப்பட்டு விடும் என நான் மனதுக்குள் கணக்கு வகுத்துக் கொண்டேன், அதன்படிதான் செயல்பட்டேன்’’ ‘ஆனால் ராமனுக்கு 14 வருடம் வனவாசம் என்ற தண்டனை ஏன்?’ என்று பெற்ற தாயின் பாசத் துடிப்பில் கோசலை கண்களாலேயே கேட்டாள். ‘‘பதினான்கு ஆண்டுகள் வனவாசம் என்பது ராமனைப் பொறுத்தவரை தண்டனை அல்ல, அனுபவம். நம் கணவர் சக்கரவர்த்தியாகத் தொடருவாரானால் அந்தப் பதினான்கு ஆண்டு காலக்கெடு முடிந்ததும் ராமன் திரும்ப வந்து பட்டமேற்கலாம். இதற்கிடையில் எந்த துர்சம்பவம் நிகழ்ந்தாலும், ஜோதிடக் கணிப்புப்படி அது ராமனையோ, பரதனையோ பாதிக்காது’’ ‘‘ஆனால் நம் கணவர் இப்போதே நம்மை விட்டு நீங்கிவிட்டாரே! இந்தச் சூழ்நிலையில் ராமனுக்குத் தகவல் சொல்லியனுப்பி, வரவழைத்து, பட்டமேற்கச் சொல்லலாமே’’ சுமித்திரை தன் யோசனையைச் சொன்னாள். ‘‘ராமன் ஒப்புக் கொள்ள மாட்டான். தன் தந்தை உயிருடன் இருந்தபோது இட்ட கட்டளைகளை, அவர் இறந்துவிட்டார் என்பதற்காக தான் புறக்கணிக்க மாட்டேன் என்று அவன் சொல்லக்கூடும். அதனால் பதினான்கு ஆண்டுகள் கழித்துதான் அவன் வருவான் என்றே எனக்குத் தோன்றுகிறது’’ என்று பதிலளித்தாள் கைகேயி. ‘‘நம் கணவர் முக்தி அடைந்து விட்டார், ராமன் பதினான்கு ஆண்டுகள் கழித்துதான் அயோத்தி திரும்புவான், பரதனும் சிம்மாசனம் ஏற மாட்டான். அப்படியென்றால் மன்னனற்ற ராஜாங்கமா நடக்கும்?’’ ‘‘அதற்கும் ஏதாவது வழி பிறக்கும்’’ என்று தீர்மானமான எதிர்பார்ப்புடன் சொன்னாள் கைகேயி. பிறகு ‘‘உங்களிடம் ஒரு விண்ணப்பம். இப்போது நாம் பேசியதெல்லாம் நமக்குள் ரகசியமாக இருக்கட்டும். உண்மையில் இந்த ரகசியம் என்னோடு போகட்டும் என்றே நான் நினைத்தேன். என்னைப் பழிப்பவர்களில் முதன்மையாக நீங்கள் இருவரும் இருப்பீர்கள் என்றும் தெரியும். அது மட்டுமின்றி இனி வரும் நாட்களில் நான் தனித்து ஒதுக்கப்படுவேன் என்றும் நான் எதிர்பார்த்தேன். ஆனால் இப்படிப்பட்ட சூழல், பல எதிர்கால குழப்பங்களையும், கோளாறுகளையும் உருவாக்கி விடும் என்றே நான் கருதினேன். என்றைக்கும் நிரந்தர குழப்பம், கவலை, வருத்தம், சோகம் என்று நாம் அனைவருமே உழல்வதைவிட, உங்களுக்கு மட்டுமாவது தெரிந்தால் நம் சகோதர பாசத்தைத் தொடர்ந்து பரிமளிக்கச் செய்யலாம். ஆகவே இந்த விவரங்களை நீங்களும் உங்களுக்குள் பூட்டி வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டாள். இருவரும் கண்ணீர் விட்டு விசும்பினார்கள். இப்படியெல்லாம்கூட ஒரு தாய் விளங்க முடியுமா? துயரமோ, நஷ்டமோ தனக்கு நேர்ந்தாலும் சரி, தன் சொந்த மகனுக்கு ஏற்பட்டாலும் சரி, பாரே போற்றும் ராமனுக்கு எந்த விபரீதமும் நிகழக் கூடாது என இத்தனை ஆழமாக சிந்தித்திருக்கிறாளே! ‘‘ஆனால், உலகம் உங்களைத் துாற்றுமே’’ சுமித்திரை நெஞ்சு விம்மக் கேட்டாள். ‘‘துாற்றட்டும், ஏசட்டும். என் அன்புக் கணவரை நான் சொற்கணைகளால் எப்படியெல்லாம் துன்புறுத்தினேன்! அவரது மரணத்துக்கும் காரணமானேனே! எனக்கு தண்டனை வேண்டியதுதான். நான் ஏற்கச் சித்தமாக இருக்கிறேன்’’ கோசலையும், சுமித்திரையும் பெருகும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளவும் தோன்றாமல் சிலைகளாக இருந்தார்கள். அதே சமயம் திரைச் சீலைக்குப் பின்னால் இருந்த மந்தரையும் தன் இருகை கூப்பி கண்ணீர் பெருக்கினாள்.
|
|
|
|