|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » தர்மத்தின் அளவுகோல் |
|
பக்தி கதைகள்
|
|
தர்ம சிந்தனை கொண்டவர் மாமன்னர் போஜராஜன். அவரிடம்
மகளின் திருமணத்திற்காக உதவி பெற விரும்பி விவசாயி ஒருவர் கிளம்பினார்.
கிராமத்தில் இருந்து வரும் வழியில் சாப்பிட சில ரொட்டி துண்டுகளை பொட்டலமாக எடுத்துக் கொண்டார்.
மன்னர் போதுமான பணம் தர சம்மதிக்க வேண்டும் என மனதில் வேண்டியபடி நடந்தார்.
பசியால் சோர்வு உண்டானது. ஒரு குளக்கரையில் அமர்ந்து பொட்டலத்தை பிரித்தார்.
மனதிற்குள் ‘உணவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி’ என பிரார்த்தனை செய்தார்.
அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும் தோலுமாக நின்றது.
இரக்கப்பட்ட விவசாயி ஒரு ரொட்டியை கொடுத்தார். வேகமாக விழுங்கிய நாய் இன்னும் எதிர்பார்த்தது.
இரக்கப்பட்ட விவசாயி ஒவ்வொன்றாக அத்தனை ரொட்டிகளையும் கொடுத்து விட்டார். ‘ ஒருநாள் சாப்பிடாமல் போனால் உயிரா போய் விடும்’ என எண்ணிக் கொண்டார். நாடாளும் மன்னர் அவர் தகுதிக்கு வாரி வழங்கினால் பிரஜையான நாமும் முடிந்த பொருளை தானம் அளிப்பது தானே முறை என தனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டார். தலைநகரை அடைந்ததும் தர்ம சத்திரத்தில் உணவு சாப்பிட்டார்.
பிறகு அரண்மனைக்குச் சென்று மன்னரைச் சந்தித்து தன் எண்ணத்தை தெரிவித்தார். ‘‘இதுவரை நீங்கள் ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள். அதற்கு ஈடாக பொன்னை நான் கொடுப்பேன். தர்மத்தை நிறுப்பதற்காகவே தராசு ஒன்று என்னிடம் இருக்கிறது ’’ என்றார் மன்னர். ‘‘மன்னா...தர்மம் செய்யும் அளவுக்கு பணம் இருந்தால் நான் ஏன் உங்களைத் தேடி வருகிறேன்?
வரும் வழியில் நாய்க்கு உணவு அளித்தேன்.
அதற்கு ஈடாக தர்ம சத்திரத்தில் சாப்பிட்டேன். நான் பெரிய அளவில் இதுவரை தர்மம் செய்ததில்லை’’ என்றார் விவசாயி. ‘‘ பசியை பொறுத்து கொண்டு நாய்க்கு உணவிட்டதும் சிறந்த தர்மமே’’ என்றார் மன்னர். தராசை எடுத்து அதன் ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும், மறுதட்டில் பொன்னையும் வைக்கத் தொடங்கினார். நிறைய பொன்னை வைத்தும் கூட தராசுத்தட்டு சமமாகவில்லை.
வியப்பில் ஆழ்ந்த மன்னர், "உங்களை பார்த்தால் சாதாரணமானவராக தெரியவில்லை. என்னைச் சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார்?" எனக் கேட்டார். ‘‘மன்னா... நான் சாதாரண விவசாயி. என்னைப் பற்றி சொல்லுமளவுக்கு என்ன இருக்கிறது’’ என்றார் பணிவுடன்.
அப்போது தர்மதேவதை காட்சியளித்து, ‘‘போஜனே! தராசில் நிறுத்து பார்ப்பது அல்ல தர்மம்.
கொடுத்தவரின் மனமே அதற்குரிய அளவுகோல்.
நாயின் பசி போக்க தன்னிடம் இருந்ததை உணவையெல்லாம் இவர் பெருந்தன்மையுடன் கொடுத்து விட்டார்.
அதனால் தராசில் எவ்வளவு பொன் வைத்தாலும் அதற்கு ஈடாகாது. திருமணத்திற்கு தேவையான பொன்னை தானமாக கொடு. அது போதும்’’ என்றது. விவசாயிக்கு தேவையான பொன்னை மன்னர் கொடுத்து அனுப்பினார்.
|
|
|
|
|