Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » என்ன பாவம் செய்தேன் நான்!
 
பக்தி கதைகள்
என்ன பாவம் செய்தேன் நான்!


அயோத்தியிலிருந்து தகவல் வந்திருக்கிறது என்று தெரிந்த உடனேயே பரதன் பரபரப்பானான். கேகயத்துக்குப் போய் சில நாட்கள் தங்கிவிட்டு வருமாறு பணித்திருந்த தந்தையார், திரும்ப வரச் சொல்லியிருக்கும் இந்த உத்தரவையும் உடனே மேற்கொள்ள ஆயத்தமானான்.
மாமன் உதாஜித், ‘‘பரதா, இன்னும் ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு, பயண ஏற்பாடுகளை மேற்கொண்டு மெல்லப் புறப்படலாமே’’ என்று யோசனை தெரிவித்தான்.
‘‘இல்லை, மாமா’’  வேகமாக மறுத்தான் பரதன். தந்தையார் உத்தரவிட்டிருக்கிறார் என்றால் அதைக் கொஞ்சமும் காலம் தாமதியாமல் நிறைவேற்ற வேண்டியது என் கடமை. என் தமையனார் ராமன் இப்படித்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆகவே நான் இப்போதே புறப்படுகிறேன்’’
ராம பண்பை பரதனும் கொண்டிருப்பது உணர்ந்து யுதாஜித் மகிழ்ச்சி அடைந்தான். ஏற்கனவே ராமனின் நற்பண்புகளை தன் சகோதரி கைகேயி சொல்லக் கேட்டிருக்கிறான் அவன். பரதனும் அவன் அடியொற்றியே வளர்வது கண்டு உள்ளம் பூரித்தான்.
சொன்னபடியே பரதன், தம்பி சத்ருக்னனுடன் ரதமேறி அயோத்தி நோக்கிப் புறப்பட்டான். அவர்களுடன் சம்பந்தி மரியாதையாக, பொன், மணி, ஆடைகள், அணிகலன்கள், உணவுப் பொருட்களை யானைகள் மீதும், தனி தேர்களிலுமாக ஏராளமாக உடன் அனுப்பி வைத்தான் கேகய மன்னன்.
மிக நீண்டு பரவியிருந்த பரிவாரங்கள் சகிதமாக பரதன் குதுாகலத்துடன் பயணப்பட்டான். விரைவாகத் தேரைச் செலுத்தி காலத்தைச் சுருக்குமாறு தேர்ப்பாகனைக் கேட்டுக் கொண்டான்.
ஆனால் அயோத்தியினுள் தேர் நுழைந்தபோது அங்கே நிலவிய அசாதாரண சூழல் அவனுடைய தடுமாற வைத்தது. பறிப்பார் இல்லாததால் முற்றிக் கனிந்த பழங்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து சாலையெங்கும் சிதறிக் கிடந்தன. வயல்களில் முற்றிச் செழித்து வளர்ந்திருந்த நெற்கதிர்கள் அறுப்பார் இன்றி, தலை கவிழ்ந்து பூமியில் படுத்திருந்தன, மலர்களை ஆயிரக்கணக்கில் உதிர்த்துவிட்டு, காம்புகள் மட்டும் அனாதரவாக சோகம் பூண்டிருந்தன, சிறகடித்துத் திரியும் பறவைகளும் இரைதேடும் பசியுணர்வே இல்லாமல் ஆங்காங்கே மரக்கிளையில் வாட்டத்துடன் அமர்ந்திருந்தன, வீதிகளில் நடமாடியவர்களும் இயந்திர கதியாய்தான் அசைந்தார்கள், அவர்களுடைய முகங்கள் சோபை இழந்திருந்தன. அந்தப் பகல் வேளையிலும் பெண்களை சாலைகளில் பார்க்க இயலவில்லை, என்னவோ ஊழிக்காலம் வந்தது போல அனைவரும் அவரவர் வீடுகளில் முடங்கிக் கிடந்தார்கள். எதிர்ப்பட்ட சில பெண்களும் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட, அதைத் துடைத்து விட்டுக் கொள்ளவும் தோன்றாமல் சோகப் பதுமைகளாகக் காட்சி தந்தார்கள்.
பரதன் திடுக்கிட்டான். மிகுந்த சந்தேகத்தோடு திரும்பி தம்பி சத்ருக்னனைப் பார்த்தான். ‘‘நாம் அயோத்திக்குள்தான் போய்க் கொண்டிருக்கிறோமா, அல்லது வேறு ஏதாவது நாடா?’’ என்று வேதனையுடன் கேட்டான்.
சத்ருக்னன், ‘‘ஆம், அண்ணா, அயோத்திக்குள்தான் போய்க் கொண்டிருக்கிறோம். எனக்கும் இந்த விபரீத காட்சிகள் மனதை உறுத்தத்தான் செய்கின்றன. இவையெல்லாம் என்ன சொல்ல வருகின்றன என்பதும் புரியவில்லை. ஏதோ தாங்கிக் கொள்ளவே முடியாத அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று மட்டும் ஊகிக்க முடிகிறது. ஆனால்… அது என்னவாக இருக்கும்…?‘‘ என கவலையுடன் பதிலளித்தான்.
தேர் அரண்மனை வளாகத்துக்குள் புகுந்து, தசரதன் மாளிகைக்கு முன்னால் வந்து நின்றது. தேரிலிருந்து கீழே தாவி குதித்த பரதன் ஓட்டமும், நடையுமாக மாளிகைக்குள் நுழைந்தான். அதன் உட்புற வெறுமை அவனைத் திகைக்க வைத்தது. ‘எங்கே என் தந்தையார்? என்னை வரச்சொல்லி ஓலை அனுப்பிய அவர், என் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பார் என்று நினைத்தால் இந்த மாளிகைக்குள் ஆள் அரவமே இல்லையே…
அப்போது ஒரு சேடிப்பெண் அங்கே வந்து, ‘‘தங்களைப் பார்ப்பதற்காகத் தங்கள் தாயார் கைகேயி காத்திருக்கிறார்’’  என்று சொல்லி அழைத்தாள்.
ஒருவேளை தந்தையார் அங்கே இருக்கலாம் என்ற ஊகத்தில் விரைவாக தாயாரின் மாளிகைக்குச் சென்றான். அங்கே கைகேயி பொலிவிழந்து காட்சியளித்தது அவனைத் துணுக்குற வைத்தது. முகத்தில் அதுவரை அவன் பார்த்திராத கடுமை, கருமை, காணாமல் போன கருணை…
‘‘வா, பரதா, கேகயத்தில் அனைவரும் நலமா?’’  என்று சம்பிரதாயமாக விசாரித்த அவள் குரலில் வழக்கமான பாசம், அன்பு, ஆவல் எதையும் காணோம்.
‘‘அம்மா’’ குழப்பத்துடன் அழைத்தான் பரதன். ‘‘உடனே புறப்பட்டு வருமாறு தந்தையார் உத்தரவிட்டிருந்தார். அதன்படியே நான் வந்திருக்கிறேன். வந்தவுடன், இத்தனை நாள் அவரைப் பாராதிருந்த ஏக்கம் நீங்க, அவர் அடிபணிந்து என் கண்ணீரால் பாதாபிஷேகம் செய்ய ஓடோடி வந்தேன். ஆனால் மாளிகையில் அவரைக் காண இயலவில்லை. இங்கே தங்களுடன் இருக்கக்கூடும் என்று நினைத்தே வந்தேன். அவரை முதலில் தரிசிக்க வேண்டுமே..’’
கைகேயி துக்ககரமான வார்த்தைகளை கொஞ்சமும் ஈரமில்லாமல், உறுதியான குரலில் சொன்னாள்: ‘‘பரதா நாம் யாருமே பார்க்க இயலாத பரமபதத்தை அடைந்து விட்டார் உன் தந்தை’’
நெஞ்சில் கூர் ஈட்டி பாய்ந்ததுபோலத் துடிதுடித்துப் போனான் பரதன். என்ன கொடுமை இது! ‘‘அப்படியென்றால் என்னை உடனே வரச்சொல்லி அவர் பணித்தாரே, அது எப்படி, ஏன், எதனால்…’’
‘‘அந்த ஓலையை அமைச்சர் சுமந்திரன்தான் அனுப்பி வைத்தார். நீ வந்த பிறகு இந்த சோகச் செய்தியைத் தெரிவிக்கலாம் என்று அவர் கருதியிருக்கலாம்’’ அலட்சியமாகப் பேசினாள் கைகேயி.
‘‘எப்படி நேர்ந்தது அவரது மரணம்? அடடா, என் தமையன் ராமன்தான் எத்தனைத் துடித்துப் போயிருப்பார்! அவரால் எவ்வாறு இந்தப் பேரிழப்பை சகித்துக் கொள்ள முடிந்தது?’’
‘‘அவர் விண்ணுலகம் ஏகு முன்னரே, ராமன் கானகம் ஏகிவிட்டான்…’’
‘‘இது என்ன, என்னை மேலும் மேலும் கொடிய வார்த்தை ஆயுதங்களால் வதைக்கிறீர்கள்? ஏன், ஸ்ரீராமன் எதற்காக காடு ஏக வேண்டும்? அண்ணனின் பட்டாபிஷேக வைபவத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தந்தையார் என்னை வரவழைத்திருக்கிறார் என்றல்லவா நினைத்தேன். ஐயகோ! இத்தகைய பெருந்துன்பம் யாருக்குமே நிகழக் கூடாதே! அம்மா, அம்மா, எப்படி நேர்ந்தன இந்த இரு துயரச் சம்பவங்களும்? யார் காரணம் இதற்கு…’’
கைகேயி அவனை தீர்க்கமாகப் பார்த்தாள். குரலில் கொஞ்சமும் குழைவின்றி, குற்ற உணர்வின்றி, ‘‘நான்… நான்தான் காரணம்’’ என்றாள்.
‘‘தாங்களா? என்ன சொல்கிறீர்கள். வேறு யாரோ செய்த குற்றத்தைத் தாங்கள் சுமக்கிறீர்களா? உங்கள் இரக்க சுபாவத்துக்கு எல்லையே இல்லையா?‘‘ தான் மிகவும் மதிக்கும் தன் தாயை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் கதறினான் பரதன்.
‘‘முழு காரணமும் நானே, பரதா. உன் தந்தையார் எனக்களித்த வரங்களை இப்போது நிறைவேற்றித் தரும்படி கேட்டேன். அந்த வகையில் ஒன்று, ராமன் ஆரண்யம் செல்வது, இன்னொன்று நீ அரியணையில் அமர்வது…’’
தாங்க மாட்டாமல் இரு கைகளாலும் தன் காதுகளைப் பொத்திக் கொண்டு அப்படியே சரிந்து விழுந்தான் பரதன். ‘‘ உங்களால் எப்படி இவ்வாறு சிந்திக்கவும் முடிந்தது? ராமன் பிரிவை சக்கரவர்த்தி தாங்குவாரா... இது உங்களுக்குத் தெரியாதா... தெரிந்தும், அவர் உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை என்று கருதியா என் உயிருக்கு உயிரான ராமனை கானகத்துக்கு அனுப்பினீர்கள்’’
‘‘உன் தந்தையார் இறப்பை நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் ராமன் காடு செல்வதால், நீ நாடு ஆள்வாய் என்று எதிர்பார்த்தேன்’’
கும்பிடுவதற்காக உயரே துாக்கும் தன் இரு கரங்களை இப்போது தாக்கும் ஆவேசத்துடன் கைகேயியை நோக்கி இறக்கினான் பரதன். உடனே அருகிலிருந்தவர்கள் அவனை அப்படியே கட்டிப் பிடித்து ஆசுவாசப்படுத்தினார்கள்.
ஆற்றமாட்டாமல் அழுதான் பரதன். ‘‘எத்தகைய கேவலமான விமரிசனத்துக்கு என்னை ஆளாக்கிவிட்டீர்கள் அம்மா! சூரிய குலத்து மாண்பைக் குலைக்க வந்த கொடும்பாவியாக என்னை உலகோருக்கு அறிமுகப்படுத்தி விட்டீர்களே! ‘பரதன் என்று ஒருவன் இருந்தான், அவன் வஞ்சனை மிக்கத் தன் தாயின் சூழ்ச்சியால் ரகுகுலத்தின் பாரம்பரிய மரபைக் ஆளாக்கி விட்டீர்களே அம்மா! வரலாற்றுப் பிழைக்கு என்னைக் காரணமாக்கிவிட்டீர்களே! என்ன பாவம் செய்தேனோ நான்’’
நெடிது நேரம் அழுதும், அரற்றியும், தாயாரை கடும் சொற்களால் நிந்தனை செய்தும் மனம் ஆறாமல் தவித்தான் பரதன்.
பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தள்ளாடியபடி எழுந்தான்.
(தொடரும்)           
ஆறு போனால் நுாறு வரும்
‘‘மனிதனின் ஆயுள் நுாறாண்டு என்பர். எனினும் நுாறு வயதைக் கடந்தவர்கள் அதிகமில்லையே ஏன்?’’ எனக் கேட்டார் திருதராஷ்டிரர்.
அவரது சகோதரரான விதுரர், ‘மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு. இதிலிருந்து தப்பித்தால் மட்டுமே வாழ்வு நீடிக்கும்’ என்று சொல்லி விளக்கினார்.   
*முதல் வாள் கர்வம். மனிதர்களில் பலர், ‘நானே கெட்டிக்காரன். மற்றவர் எல்லாம் முட்டாள்’ என கருதுகின்றனர். தன்னிடமுள்ள குறைகளையும்,  பிறரிடம் உள்ள நிறைகளையும் காண்பவருக்கு கர்வம் உண்டாகாது.
இரண்டாவது வாள் அதிகம் பேசுதல். பேச விஷயமே இல்லாத போதும் வீணாகப் பேசுபவன் வம்பை விலைக்கு வாங்குகிறான்.
மூன்றாவது வாள் தியாக உணர்வு இன்மை. பேராசை தியாக உணர்வைத் தடுக்கிறது.
நான்காவது வாள்: கோபம். இதை வென்றவனே உண்மை யோகி. கோபத்தில் தர்மம் எது? அதர்மம் எது என்பது தெரியாது. விவேகம் இழந்து மனம் பாவத்தில் ஈடுபடும்.
ஐந்தாவது வாள்: சுயநலம்.  எல்லாத் தீமைக்கும் வேரான சுயநலம், பாவம் செய்யத் தயங்குவதில்லை.
ஆறாவது வாள்: துரோகம். உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் விதத்தில் துரோகம் செய்வது தவறு. இந்த ஆறில் இருந்தும் விலகுபவன் நுாறாண்டு காலம் வாழ்வான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar