|
ஒரு முறை தேவர்களும், முனிவர்களும் ஒன்று கூடி, கல்வியில் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து வித்வ தாம்பூலம் என்னும் பரிசை வழங்க முடிவு செய்தனர். அவர்கள் தீர்க்கமாக ஆலோசித்து இவ்வுலகிலேயே சிறந்த கல்விமான் அவ்வையார் தான் என்ற முடிவுக்கு வந்தனர். வித்வ தாம்பூலத்தை எடுத்துச் சென்று அவ்வையாரிடம் கொடுத்தனர். அவ்வையார் சிரித்தார்.சாதாரண பாடல்கள் எழுதும் எனக்கு பரிசா! இதை நான் ஏற்றால் பாவமல்லவா! புலவர் என்னும் சொல் தேவர்களையே குறிக்கும். தேவாதிதேவனான இந்திரன் ஐந்திரம் என்னும் இலக்கண நூலையே வகுத்தவன். அவனிடம் போய் இந்த விருதைக் கொடுங்கள், பொருத்தமாய் இருக்கும், என்றார். தமிழ் மூதாட்டியே இப்படி சொல்லி விட்டதால், பரிசுக்குழுவினர் இந்திரனிடம் சென்று தாம்பூலத்தை நீட்டினர். அடே! யார் சொன்னது நான் இலக்கண வித்வான் என்று! அவ்வையார் என் மீது கொண்ட மதிப்பால் இந்தப் பரிசுக்கு என்னை சிபாரிசு செய்துள்ளார். உண்மையில், நானும் இதற்கு தகுதியுடையவன் இல்லை. இலக்கணம் எழுதியோருக்கு இப்பரிசைக் கொடுப்பதென நீங்கள் முடிவு செய்தால் அகத்தியம் என்னும் இலக்கண நூலை இந்த உலகுக்கு அளித்த அகத்தியருக்கு இந்தப் பரிசைக் கொடுங்கள். நான் மகிழ்வேன், எனச் சொல்லி விட்டான்.
அந்தக் குழுவினர் அகத்தியரிடம் ஓடினார்கள். அவரும் கலகலவெனச் சிரித்தார். சாதாரண இலக்கண நூலுக்கு இத்தனை பெரிய வித்வ தாம்பூலமா? இதனைப் பெறும் யோக்கியதை எனக்கில்லை. நான் மிகவும் சாதாரணமானவன். நீங்கள் உலகை ஆளும் பரமேஸ்வரியிடம் செல்லுங்கள். இவ்வுலகில் ஏட்டுக்கல்வியை விட ஞானமே மிகச்சிறந்த கல்வி. இவ்வுலக வாழ்க்கை பொய்யானது என்ற ஞானத்தை நமக்கு போதிக்கும் அந்த தேவியே இந்தப் பரிசுக்கு பொருத்தமானவள். அவளிடம் செல்லுங்கள், என்றதும் அங்கே சென்று பணிந்து நின்றார்கள் குழுவினர். அம்மா! அகத்தியரின் கூற்றுப்படி ஞானதேவதையான தங்களுக்கு இந்த விருதை அளிக்க வந்துள்ளோம். ஏற்று அருள் செய்யுங்கள், என்றனர். அம்பாள் கருணை பார்வை பார்த்தபடியே, குழந்தைகளே! உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால், இந்தப் பரிசை என் நாயகரான சிவபெருமானுக்கே குருவாய் இருந்து உபதேசித்தானே என் மகன் முருகன்! அவனுக்கு ஞானப்பண்டிதன் என்ற பெயரே இருக்கிறதே! அவனுக்கே இப்பரிசு பொருத்தம். அவன் கந்தகிரியில் இப்போது இருக்கிறான். அவனிடம் போய் கொடுத்து விடுங்கள், என்றதும், ஆஹா...நம் தமிழ் தெய்வத்தை மறந்துவிட்டோமே என்று அங்கு சென்றனர்.
அங்கும் முருகன் அதை ஏற்பதாக இல்லை. தேவர்களே! முனிவர் பெருமக்களே! இந்தப் பரிசைப் பெறுமளவு கல்வித்தகுதியுடையவனாக நான் விளங்கவில்லை. நீங்கள் பிரம்மாவிடம் செல்லுங்கள். உயிர்களைப் படைப்பது எவ்வளவு பெரிய கலை. அவரிடம் செல்லுங்கள். இந்தப் பரிசை அவரிடம் கொடுங்கள். மேலும், வேதங்களை அவர் கரைத்துக் குடித்தவராயிற்றே! என்றார். பிரம்மலோகத்திற்குள் புகுந்தார்கள் பரிசுக்குழுவினர். பிரம்மதேவா! வேதநாயகனும், உயிர்களைப் படைக்கும் கலை தெரிந்தவருமான உம்மையே சிறந்த கல்விமானாக தேர்வு செய்துள்ளோம். பெற்றுக் கொள்ளுங்கள் வித்வ தாம்பூலத்தை! என்றனர். அவர் தன் அருகில் இருந்த சரஸ்வதியைப் பார்த்தார். என் அன்பு மனைவியல்லவா சகலகலாவல்லி. அவளது வீணை இசையின் முன் வேறு எதுவும் எடுபடுமா! அனைத்து ஏடுகளுக்கும் அதிபதியல்லவா அவள்! வேதவல்லி என்று அவளை புகழ்கிறோமே! அவள் கலை மகள் அல்ல!கலையரசி! கலைகளின் அதிபதி! அவளே ஒரு வித்வ தாம்பூலம் அல்லவா! அவளிடமே கொடுங்கள், என கண்ணசைத்தார். அந்த தாம்பூலத்தை கலைமகள் ஏற்று அனைவருக்கும் அருள்புரிந்தாள்.
|
|
|
|