|
100 வயதைக் கடந்த அந்த சன்னியாசிக்கு தன் வாழ்வை வாழ்ந்து முடித்த திருப்தி. கடவுளின் பாதங்களை அடைய முடிவெடுத்தார். சீடர்களை அழைத்தார். இன்று கார்த்திகை முருகனுக்கு அபிஷேகம் நடக்கும் நேரத்தில் நான் அந்த முருகனுடனேயே சேர்ந்து விடுவேன் என்று அறிவித்தார். சீடர்கள் எல்லாம் அவரை வணங்கினார்கள். சிஷ்யர்களே நான் உங்களுக்கு வாழ்க்கைத் தத்துவத்தைப் போதிக்கப் போகிறேன். அனைவரும் என் அருகில் வந்து அமருங்கள் என்றார். எல்லோரும் சுற்றி அமர்ந்தார்கள். தியானத்தில் அமர்ந்தார் குரு. ரொம்ப நேரம் ஆயிற்று. ஆலயத்தில் முருகனுக்கு அபிஷேகம் ஆரம்பமாயிற்று. குரு கண் திறக்கவில்லையே என்று பயந்தார்கள் சீடர்கள். குரு டக்கென கண் திறந்தார். அனைவரையும் பார்த்துப் புன்னகைத்தார். அவர்களுக்குத் தன் பொக்கை வாயைத் திறந்து காண்பித்தார். இதுதான் வாழ்க்கைத் தத்துவம். போய் உங்கள் வேலைகளைப் பாருங்கள் என்றார். மீண்டும் கண்ணை மூடிக் கொண்டார். ஒரு சீடனுக்கு மட்டும் ஒன்றும் புரியவில்லை. வாய்க்குள் அப்படி என்ன வாழ்க்கைத் தத்துவம் இருக்கிறது என்று குழம்பியவன், குருவை மெல்ல எழுப்பித் தன் சந்தேகத்தைக் கேட்டான். என் வாய்க்குள் என்ன இருந்தது? குரு வினவினார். நாக்கும், உள்நாக்கும் இருந்தது. பல் இருந்ததா? இல்லை. அதுதான் வாழ்க்கைத் தத்துவம். வன்மையானது அழியும். மென்மையானது வாழும் சொல்லி முடித்தவர், புன்னகையுடன் இறைவனின் பாதத்தைக் கைப்பற்றினார்.
|
|
|
|