|
பாண்டுரங்கனின் பக்தர் தாமாஜி பண்டிதர். தன் வீட்டில் சமைத்த உணவை கோயிலுக்கு எடுத்துச் சென்று பாண்டுரங்கனுக்கு நைவேத்யம் செய்வார். ஒருநாள் அவர் வெளியூர் செல்ல நேர்ந்ததால் மனைவியிடம், “நாளை நைவேத்யம் செய்ய நம் மகன் நாமதேவரை கோயிலுக்கு அனுப்பு” என்றார்.
நாமதேவர் மனதிற்குள், ‘நைவேத்யம் செய்யும் உணவை கடவுள் சாப்பிடுவார்’ என்று எண்ணினான். அம்மா தந்த உணவுடன் சென்ற சிறுவன், “சுவாமி! உங்களுக்காக உணவு எடுத்து வந்திருக்கிறேன். வந்து சாப்பிடுங்கள்” என்றான். சிலையாக நின்ற பாண்டுரங்கன் சிறுவனை வேடிக்கை பார்த்தார். சிறுவன் அழ ஆரம்பித்தான். “சின்னவன் என்பதால் தானே சாப்பிட மறுக்கிறீர்கள். இங்கேயே நான் பட்டினி கிடப்பேன்” என்றான். பாண்டுரங்கனின் மனம் உருகியது. சிறுவன் முன் தோன்றி உணவை சாப்பிட்டார். மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு ஓடி வந்த சிறுவன், “கொஞ்சம் கூட மீதி வைக்காமல் உணவை பகவான் சாப்பிட்டு விட்டார். இதோ பாருங்கள் காலித் தட்டு” என்றான். இரவு வீடு திரும்பிய தாமாஜி பண்டிதர் நடந்ததை அறிந்து திகைத்தார். மறுநாளும் நாமதேவரிடமே உணவைக் கொடுத்தனுப்பினார். கோயிலில் ஒரு ஓரத்தில் நின்று நடப்பதைக் கவனித்தார். “சுவாமி! நேற்று போல இன்றும் உணவு கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் சிறுவன் நாமதேவர். நேரம் கடந்தது. “ நேற்று அவ்வளவு உணவையும் சாப்பிட்டீர்களே. இன்று மறுத்தால் நான் பொய் சொல்வதாக நினைப்பார்களே” என்று அழுதான். சிறுவனின் அழைப்பை ஏற்று உணவைச் சாப்பிட்டு விட்டு மறைந்தார் பாண்டுரங்கன். தாமாஜி பண்டிதருக்கு ஆச்சரியம் தாளவில்லை. “மகனே! உன்னால் நானும் பாண்டுரங்கனை தரிசிக்கும் பேறு பெற்றேன். உன்னைப் போல உத்தமமான குழந்தை யாருக்கு கிடைக்கும்” என்று சொல்லி மகிழ்ந்தார். நம்பியவருக்கு கடவுள் காட்சி தருவார் என்பது இதன் தத்துவம்.
|
|
|
|