|
வா. ஜானகிராமன்
அந்த சமயம் இந்திர சபையில், தேவேந்திரன் வீற்றிருந்தான். உடன் அக்னி, வாயு, குபேரன், பிரகஸ்பதி, வருணன் முதலிய முக்கிய தலைவர்களும் இருந்தார்கள். அவர்களும் மற்றும் ஏனைய தேவர்களும் மிக சோகமாக கவலையுடன் இருந்தார்கள் என்றால் அதற்கு வலுவான காரணம் இருந்தது. கொஞ்ச காலமாக தேவர்களையும், கிரகங்களையும், மற்றுமுள்ள அனைத்து உலகங்களையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தான் பிரம்மாவிடம் ஏராளாமான வரங்களை பெற்ற தாரகன் என்னும் அரக்கன். தாரகன் என்பவன் யார்? வஜ்ரநகன் என்ற அசுரனுக்கும் வராங்கி எனபவளுக்கும் மகனாக பிறந்தவன். தாரகன் என்றால் கரையேற்றுபவன், காப்பவன் என்று பொருள். ஆனால், இந்த தாரகன் தன் பெயருக்கு விரோதமாக, கொடுமை செய்பவனாகவும், அழிப்பதையே தொழிலாக கொண்டவனாகவும் இருந்தான். அவன் தன் உடல் வலிமையாலும், பெற்ற வரங்களின் பலத்தாலும் கிரகங்களைக் கூட தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான். தேவர்களை ஆட்டிப்படைத்து, அடிமையாக்கி துன்புறுத்திக் கொண்டிருந்தான். அவனை வதம் செய்து துன்பங்களிலிருந்து மீள வழி தெரியாமல் அனைவரும் பிரம்மனிடம் சென்று முறையிடுவது என முடிவு செய்தார்கள். உடனே இந்திரன் தலைமையில் அனைத்து தேவருலக முக்கியஸ்தர்களும் சத்தியலோகம் நோக்கி புறப்பட்டார்கள். இப்படி தேவர்கள் பிரம்மனிடம் முறையிட சத்திய லோகம் சென்ற நேரமும், பார்வதி சிவபெருமானுக்கு பணிவிடை செய்ய வந்த நேரமும் ஒன்றாக அமைந்தது. வாடிய, ஒளியிழந்த முகத்துடன் தன்னைக் காண வந்துள்ள இந்திரனையும் மற்றவர்களையும் காண பிரம்மன் அவர்கள் முன் தோன்றினார். அவரைக் கண்டதும் தேவர்கள் அவரை வணங்கினார்கள். வந்த தேவர்களை பிரம்மன் வரவேற்று, அவர்களின் சோகத்திற்கு காரணம் என்னவென்று வினவ, தேவர்கள் - "பகவானே! உலகத்தை படைக்கும் முன் தாங்கள் கூறப்படும் பெயர், காணப்படும் வடிவம் எதுவுமின்றி இருந்தீர்கள்..பிறகு படைக்குங்கால் சத்வம், ரஜஸ், தாமஸ் என்ற முக்குணங்களுடன் பாகுபாட்டுடன், படைப்பவர், காப்பவர், அழிப்பவர் என்ற வேறுபாட்டுடன், பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று வடிவங்களுடன் இருக்கிறீர்கள். இத்தகைய பெருமை வாய்ந்த தங்களை வணங்குகிறோம்”. தன்னை பிரம்ம தேவர் பார்க்கவில்லை என்றோ அல்லது என்னால் அவர் முகத்தை பார்க்க முடியவில்லை என்றோ யாரும் குறை கூற முடியாதபடி அவருக்கு நான்குபுறமும் நான்கு முகங்கள் இருப்பதால் எல்லோராலும் அவர் முகத்தை பார்க்க முடியும். அதுபோலவே அவரும் அனைவரையும் பார்க்க முடியும். தேவர்கள் அவரைப் பார்த்து மேலும், ‘‘தேவா! தாங்கள் முதலில் நீரைப் படைத்தீர். அது தொடங்கி, இடம் விட்டு இடம் செல்லும் ஆற்றல் உள்ள உயிரினங்களை படைத்தீர். அத்தகைய ஆற்றல் அற்ற மரம், செடி, முதலியானவைகளைப் படைத்தீர். அது போலவே அனைத்தையும் படைத்தீர். ஆதலால், பெரியோர்கள் தங்களையே இவ்வுலகத்தின் முதல் காரணமாய் கூறுகின்றனர். முதலில் ஒருவராக இருந்த தாங்கள் பிறகு முக்குணங்களுக்கு பிரதிநிதியாக இருக்கும் தன்மையை அடைந்துள்ளீர். தங்கள் உடலை ஆணாகவும் பெண்ணாகவும் பகுத்துக்கொண்டு இரு கூறாகி அனைத்து ஜீவராசிகளையும் உருவாக்கி, ஆண் பெண் என்ற பாகுபாட்டுடன் இனப்பெருக்கை இடையில்லாமல் நடக்கும் வகையில் இந்த உலகில் நடமாட விட்டீர்கள். தங்களுக்கென்று தனி கால அளவை உருவாக்கிக் கொண்டீர்கள். உலகைப் படைக்க காரணமாய் இருந்தவர் தாங்கள், ஆனால் தங்களை படைத்தவர் யாருமில்லை. உலகிலுள்ள திரவப் பொருள் திடப் பொருள், நுண்ணிய அணுக்கள், மலை, பஞ்சு போன்ற கனமற்ற பொருள், தங்கம் போன்ற கடினப் பொருள், அனைத்தும் தாங்களே’’ என்று தேவர்கள் பிரம்மனை போற்றி துதித்தார்கள். புகழுரைகள் பெரும்பாலும் பொய்யானவை. ஆனால் பிரம்ம தேவரை குறித்து தேவர்கள் சொன்ன புகழுரைகள் அவரிடம் பொருந்தி இருந்ததால் அவை உண்மையாகவே இருந்தன. இந்த புகழுரைகளைக் கேட்ட பிரம்மா, தேவர்களை நோக்கி, ‘‘நீங்கள் அனைவரும் உங்களுக்கு தந்துள்ள பதவிகளை மிகவும் திறமையாக நிர்வகித்து வருகிறீர்கள். ஆகையால், உங்களுக்கு குறை எதுவும் இருக்க காரணமில்லை. ஆனாலும், நீங்கள் அனைவரும் சேர்ந்து வந்திருப்பது எனக்கு புதிராக உள்ளது. இருந்தும், உங்கள் அனைவருக்கும் நல்வரவு கூறுகிறேன். பனியினால் மறைக்கப்பட்ட சந்திர, சூரியனைப்போல உங்கள் முகங்கள் ஒளியிழந்து காணப்படுகின்றன. இதன் காரணம் என்ன?’’ என்று சொல்லிவிட்டு ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரிக்கிறார் பிரம்மன். ‘‘இந்திரா, எப்பொழுதும் ஒளியுடன் விளங்கும் உன்னுடைய வஜ்ராயுதம் இப்பொழுது அது பிரகாசம் இல்லாமல் ஒளியிழந்து, முனை மழுங்கி காணப்படுகிறதே! ஏன்’’ ‘‘வருணா, எதிரிகளை பிணைக்கும், பார்ப்பவர்களை அச்சுறுத்தும் உன் கையிலுள்ள பாசக்கயிறு செயலாற்றுக்கிடக்கிறதே...ஏன்?’’ ‘‘குபேரா, எப்பொழுதும் உன் கையில் உன்னைப் பிரியாமல் இருந்து வந்த உன் ஆயுதம் கதை. அது இப்பொழுது உன்னிடம் காணவில்லையே! ஏன்?’’ இந்திரன் வருணன் இருவரின் கையில் ஆயுதமாவது இருந்தது. குபேரன் கையில் அதுவும் இல்லை. ‘‘யமதர்மா, உன்னுடைய தண்டாயுதம் எதற்கும் பயன்படாமல், ஒளியிழந்து காணப்படுகிறதே! ஏன்? ‘‘சூரியன் சந்திரன் மங்கலாகவே உள்ளதற்கு காரணம் என்ன? சிவபெருமானின் அம்சமான ருத்திரர்கள் தலை குனிந்து நிற்க காரணம் என்ன?’’ "வெகுகாலமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு உரிய இடத்தை நிரந்தரமாகவே பெற்று அனுபவித்து வந்தீர்கள். பலம் மிகுந்த எதிரிகள் உங்களை தள்ளி விட்டார்களா? மேலும் தொடர்கிறார் பிரம்மா. ‘‘என் அன்புக்குரிய மக்களே! நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வந்திருப்பதால் ஏதோ முக்கியமான காரியம் இருக்கும் என்று தெரிகிறது. உலகை நான் படைக்கிறேன். நீங்களும் நானும் இவ்வுலக நன்மையில் ஒன்றாக ஈடுபட்டுள்ளோம். ஆகையால், நீங்கள் தயக்கமின்றி என்னிடம் எதுவும் சொல்லலாம், கேட்கலாம்’’ பிரம்மதேவருக்கு பதிலளிக்க இந்திரன் தன் கண்களாலேயே அருகிலிருந்த பிரகஸ்பதியை கேட்டுக் கொண்டான். அங்கிருந்த தேவர்களிலிலேயே அறிவிற் சிறந்தவர் பிரகஸ்பதி. அவர் மிக்க விநயத்துடன், பிரம்மதேவரிடம் சொல்ல ஆரம்பித்தார். “தங்களிடம் வரம் பெற்ற தாரகன் என்ற அசுரன் அவன் பெயருக்கு விபரீதமாக உலக அழிவிற்காக தோன்றியுள்ளான். அவன் தேவர்களை படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமன்று. அவன் பலத்தின் செருக்கால், அனைத்து கிரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான். எந்த கிரகமும் தன் இயல்பாக செயல்பட முடிவதில்லை. “உக்கிரமான கிரணங்களையுடைய சூரியன் அவனது நகரத்தில் எவ்வளவு தேவையோ அந்த அளவு வெய்யிலைத்தான் தருகிறான். சந்திரனும் அவனுக்கு பணிவிடை செய்கிறான். காற்று வேகமாக வீசி தாரகனின் பூங்காக்களில் உள்ள புஷ்பங்கள் கீழே விழுந்தால், வாயுவை குற்றம் சாட்டுவான் என்று பயந்து லேசாக விசிறியால் வீசுவது போலவே அங்கே காற்று வீசும். பருவங்களின் வித்தியாசங்கள் அவன் நகரத்தில் கிடையாது. வருடம் முழுவதும் ஒரே மாதிரி இனிமையான சீதோஷ்ண நிலைதான் அங்கு. அனைத்து மலர்களும், பழங்களும் வருடம் முழுவதும் கிடைக்கும். தலையில் ரத்தினங்களை சுமந்துகொண்டிரும் நாகங்கள், இரவில் தாரகனது வீட்டில் அணையாத தீபங்களாக நின்று அவனுக்கு பணிவிடை செய்கின்றன. இந்திரன் கூட தாரகனின் நல்லெண்ணத்தை விரும்பி அவனுக்கு அடிக்கடி பலவிதமான ஆடை ஆபரணங்களை அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறான். தேவர்களின் அரசனே இப்படிப்பட்ட நிலையில் இருந்தால், மற்ற தேவர்களின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. இவ்வளவு பணிவிடைகளையும் பெற்ற பின்பும் திருப்தி அடையாமல் அடிக்கடி தேவர்களை துன்புறுத்துகிறான். தேவ மாதர்கள் உலவும் பூங்காக்களில் உள்ள மரங்களையும், மலர்களை தரும் செடிகளையும், வெட்டி வீழ்த்தி விடுகிறான். தேவ மாதர்கள் பலரை சிறை பிடித்து வந்து தனக்கு பணிவிடை செய்யும்படி ஏற்பாடு செய்திருக்கிறான். மந்தாகினி நதியிலுள்ள அனைத்து தாமரைகளையும் பறித்துவந்து தன்னுடைய நகரத்தில் உள்ள வாவிகளில் நட்டுக்கொண்டான். இப்பொழுது மந்தாகினி பழைய அழகை இழந்து விட்டது. (ஆகாயத்தில் ஓடும் கங்கை மந்தாகினி, பூமியில் பாகீரதி, பாதாளத்தில் வேகவதி). தேவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டி யாகத்தில் அக்னியிடம் தரப்படும் ஹவிஸை தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அக்னியிடமிருந்து தட்டிப்பறித்து விடுகிறான். பாற்கடலை கடைந்த போது தோன்றிய உச்சைச்ரவஸ் என்ற சிறந்த குதிரை இந்திரனிடம் இருந்தது. அதை தாரகன் பறித்துக் கொண்டுவிட்டான். பொறுத்துப் பார்த்த தேவர்கள், நான்காவது உபாயமாகிய தண்டத்தை கைக்கொண்டு அவனை எதிர்த்தார்கள். இந்திரனின் வச்சிராயுதம் கூட அவனை கொல்ல முடியவில்லை. மகாவிஷ்ணு ஒரு சமயம் இந்திரனுக்கு தம்பியாகப் பிறந்தார். அந்த அவதாரத்தில் அவருக்கு உபேந்திரன் என்று பெயர். தேவர்கள், மகாவிஷ்ணுவின் அம்சமான உபேந்திரனிடம் தாரகனை வதம் செய்யும்படி வேண்டினார்கள். உபேந்திரன் தன் சக்ராயுதத்தை தாரகன் மீது செலுத்தினார். ஆனால், கழுத்தை அறுக்க வேண்டிய சக்ராயுதம் அவன் மார்பில் மோதி தீப்பொறிகளை வெளியிட்டு அவன் கழுத்தில் தங்க ஆபரணம் ஒன்றை அணிவித்த மாதிரி அங்கேயே தங்கிவிட்டது. (ஒரு குறிப்பு: இந்த உபேந்திரன்தான் ராமாயண காலத்தில், வாலியின் மகன் அங்கதனாக பிறந்தான்). இவ்வளவையும் சொல்லிவிட்டு, பிரகஸ்பதி பிரம்மனிடம் தாரகனை அழிக்க வீரம் மிக்க ஒரு சேனாதிபதியை படைத்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். குறைகளை எல்லாம் கேட்ட பிரம்மன் தேவர்களை நோக்கினார். தொடரும்
|
|
|
|