Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பார்வதி கல்யாணம்
 
பக்தி கதைகள்
பார்வதி கல்யாணம்


பார்வதி ஆகாய கங்கையில் உள்ள தாமரை மலர் விதைகளை, காயவைத்து, அழகிய மாலையாய் தொடுத்து, சிவபெருமானுக்கு அளித்தாள். சிவபெருமான் தன்னை நேசிப்பவர்களிடம் அன்புடையவர். அவர்களின் வேண்டுகோளை மறுக்காதவர். அதனால் பார்வதி தந்த அந்த மாலையை ஏற்றுக்கொண்டார்.  இப்படி பார்வதியும் பரமசிவனும்  நெருக்கமாக உள்ள நிலையை பயன்படுத்திக்கொண்டு மன்மதன் சற்றும் தாமதிக்காமல், சம்மோகனம் என்ற அம்பை தன வில்லில் பூட்டினான்.
பார்வதியின் நெருக்கம் சிவபெருமான் மனத்தில் சற்று கலக்கத்தை உண்டாக்கியது. தன் கண்களால் கோவைப்பழம் போன்ற சிவந்த உதட்டழகு பெற்ற பார்வதியின் முகத்தை ஆவலுடன் பார்த்தார்.  அதே சமயம் பார்வதியும் காதல் வசப்பட்டு, பெருமானை சற்று தலையை சாய்த்து கடைக்கண்ணால் நோக்கி நின்றாள்.
சிவபெருமானுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘நம் மனம் இப்படி திடீரென சலனப்பட காரணம் என்ன? புலன்களையும், மனத்தையும் அடக்கியிருந்த அவர், புறத்தில் உள்ள சூழ்நிலைகள்தான் மாற்றத்துக்கு காரணம் என முடிவு செய்து, அந்த காரணங்களை அறிய விரும்பி நான்கு திசைகளையும் பார்த்தார். மன்மதனைக் கண்டார்.  அவருக்கு காரணம் புரிந்துவிட்டது.  தம்மை அம்பினால் தாக்க தயாராக இருந்த அவன் வில் நாணை இழுத்து, இடது காலை மடக்கி, வலது காலை முன்வைத்து குறி பார்த்து அம்பை எய்தான்.
சிவபெருமான் மிகவும் கோபம் அடைந்தார். புருவங்களை நெறித்தார். அவர் முகம் காண்போர் மனத்தில் அச்சமூட்டுவதாக இருந்தது. தன்னை நோக்கி வரும் மன்மதனின் அம்பை கோபத்தின் உச்சியில் இருந்த பரமன் கண்டு  உங்கார சப்தமிட்டார்.  அந்த அம்பு அப்படியே தடைபட்டு திரும்பிவிட்டது..  அதே சமயம், அவரது மூன்றாவது கண்ணிலிருந்து நெருப்பு திடீரென புறப்பட்டது.  மன்மதன் பரமன் மீது அம்பெய்வதை பார்க்க ஆகாயத்தில் கூடியிருந்த தேவர்கள், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, "பிரபுவே! கோபம் கொள்ளாதீர்கள்" என்று கூவினார்கள்.  ஆனால், அதற்குள் சிவபெருமானின் கண்ணிலிருந்து புறப்பட்ட நெருப்பு மன்மதன் மேல் விழுந்து அவனை எரித்து விட்டது.  அவன் இருந்த இடத்தில் வெறும் சாம்பல்தான் இருந்தது.

சற்று தள்ளி நின்றிருந்த ரதிக்கு, எதோ விபரீதம் நிகழ்ந்து விட்டதென தெரிந்தது, அந்த எண்ணமே காரணமாகி அவள் மூர்ச்சையாகிவிட்டாள்.  அவளுக்கு தன் கணவன் இறந்துவிட்டான் என்று தெரியாது.  அந்த பெருந் துக்கத்தை அவள் உணரவிடாமல் அவளுக்கு ஏற்பட்ட மூர்ச்சை தடுத்து விட்டது.

தன் தவத்திற்கு இடையூறாக வந்த மன்மதனை எரித்த பிறகு, சிவபெருமான் பெண்களிடையே இருக்க விரும்பாமல், பணிவிடை செய்ய காத்திருந்த பார்வதியையும் அவள் தோழிகளையும் பொருட்படுத்தாமல் சிவகணங்களுடன் அவ்விடத்தை விட்டு சென்று விட்டார்.  
பரமேஸ்வரனின் இந்த அலட்சியம், அவரை மருமகனாக எண்ணியிருந்த ஹிமவானுக்கு, வருத்தத்தை கொடுத்தது.  .    பார்வதிக்கோ தன் எண்ணம் வீணானது கண்டு வருத்தமும், தன் தோழிகளின் எதிரே நிகழ்ந்து விட்ட இந்த அவமானமும் அவள் மனதை மிக பாதித்தது. துக்கத்திலிருந்த பார்வதியை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வீடு சென்றான் ஹிமவான்.  
இப்போது மன்மதனிடம் வருவோம். அவனிடம் எங்கே வருவது? அவன்தான் சாம்பலாகி கிடக்கிறானே! ரதியிடம் வருவோம். அவள் மூர்ச்சை தெளிந்து எழுந்து, தன் கணவன் இருந்த இடத்தை நோக்கினாள். அவனைக் காணவில்லை. அவள் அவனைக் காணும் பேற்றை அடியோடு இழந்து விட்டாள் என்பதை அவள் முதலில் அறியவில்லை. சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து நெருப்பு தோன்றிய போது ரதி மூர்ச்சித்துவிட்டாள்.  அதன் பிறகு நடந்தது அவளுக்கு தெரியாது.  
தன் கணவன் இறந்திருப்பானோ என்று அஞ்சிய ரதி, ‘‘நாதனே! நீ உயிரோடு இருக்கிறாயா?’’ என்று கேட்டுக்கொண்டே எழுந்து பார்த்த போது தரையில் கிடந்த சாம்பலை அவள் கண்டாள்.  அதைக் கண்டதும் தன் கணவன் எரிக்கப்பட்டுவிட்டான் என்று ஊகித்து அறிந்தாள்.  அப்படியே தரையில் சாய்ந்தாள். தரையிலுள்ள புழுதி அவள் மீது படிந்து அவளின் உடல் அழுக்கடைந்தது.  கூந்தலும் கலைந்தது. அவள் கதறிப் புலம்பினாள்.
ரதியின் துக்கம் கரை காணாதது. அழுது புலம்புகிறாள். அவளோடு சேர்ந்து அந்த காடே அழுதது.  
‘‘உலகத்தில் அழகுக்கு உதாரணமாக உம்மையே சொல்வது வழக்கம். அந்த அழகு இப்போது சாம்பலாகிவிட்டது.  அதைக் கண்டும் நான் இன்னும் சிதறிப் போகாமல் இருக்கிறேன்.பெண்களின் இதயம் அழுத்தமானதுதான்’’
‘‘நீர் ஏதாவது பிழை செய்திருந்தால், அதனால் என்னைக் காண அஞ்சி நீர் எங்காவது சென்றிருக்கலாம்.  நீர் ஒரு பிழையும் செய்யவில்லை.  அதுபோலவே நான் ஏதாவது தவறிழைத்திருந்தால் நீர் என் மீது கோபம் கொண்டு எங்காவது சென்றிருக்கலாம்.  நானும் ஒரு தவறும் செய்யவில்லை.  அப்படியிருக்கையில் ஏன் என்னை விட்டு சென்று விட்டீர்?  உன்னைக் காணாது அழுது புலம்பும் என் முன் என்வரவில்லை?’’
"மன்மதா! நான் உன் மனத்தில் இருப்பதாக பல முறை கூறியுள்ளாய். அப்படி இருக்கும்பொழுது நான் ஏன் சாம்பலாகவில்லை?’’
‘‘நீ சென்று விட்டதால் இன்பத்தை இழந்தவள் நான் மட்டும் இல்லை.  உலக மக்கள் அனைவருமே இன்பத்தை இழந்து விட்டார்கள்.  நீர் இருந்தாலல்லவா மக்களிடம் காதல் ஏற்படும்.  காதல் மறைந்து விட்டால், உலகில் இன்பம் எது?’’

‘‘மன்மத! நீர் என்னை அலங்கரிக்கத் தொடங்கும் போது தான், இந்திரன் உன்னை அழைத்தான். அந்த சமயத்தில் நீர் என் வலது காலுக்கு செம்பஞ்சு வர்ணம் பூசி முடித்து இடது காலுக்கு பூசத் தொடங்கினீர். ஆனால் அதை முடிக்காமல் சென்று விட்டீர்.  ஆகையால், சீக்கிரமே வந்து  இடது காலுக்கும் செம்பஞ்சு வர்ணம் பூசி அலங்காரத்தை முடித்து வைக்க வேண்டுகிறேன்’’
‘‘அன்பரே! நான் இல்லாமல் நீர் தனியே ஸ்வர்கத்தில் இருக்கும் போது, ஆண்களை வசீகரிப்பதில் கைதேர்ந்தவர்களான தேவருலகப் பெண்கள், உம்மை மயக்கி தம் பக்கம் இழுக்க முயற்சி செய்வர். அவர்களின் அந்த முயற்சி கைகூடுவதற்கு முன்பாகவே நான், நெருப்பில் குதித்து மரணம் எய்தி உம் அருகில் வந்து விடுவேன்’’
(ஒரு குறிப்பு: ரதி, மன்மதன் இருவருமே தேவர்கள்தான்.  எனவே ரதி ஸ்வர்க்கம் செல்ல உயிர்விட தேவையில்லை.  துக்கத்தில் தன்னிலை மறந்து மனிதர்கள் செய்யும் காரியத்தை தான் செய்வதாக சொல்கிறாள் என்று கொள்ளலாம்).
"மன்மதா! நீர் இப்போது வேறு உலகில் இருக்கிறீர்கள்.  நான் மரணம் அடைவதற்கு முன் உமக்கு ஈமச்சடங்குகள் செய்ய விரும்புகிறேன். சாதாரணமாக, உயிர் போன பிறகு உடல் சிறிது காலம் இருக்கும். அதை வைத்து ஈமச்சடங்குகள் செய்வார்கள்.  ஆனால், உமக்கோ உயிர் உடல் இரண்டுமே ஒரே சமயத்தில் சேர்ந்தே சென்றுவிட்டன.  ஆகையால், நான் எப்படி ஈமச்சடங்குள் செய்வது?’’
இப்படி பலவிதமாக ரதி அழுது புலம்புகிறாள்.  வசந்தனையும் காணவில்லை.  அது அவளுக்கு மேலும் துன்பத்தைக் கொடுத்தது.
‘‘உமக்கு எப்பொழுதும் வில்லை செய்து கொடுக்கும் உன் நண்பன் வசந்தன் எங்கே? சிவபெருமான் அவனையும் அழித்து விட்டாரா?’’
ரதியின் புலம்பல் விஷம் பூசிய பாணங்கள்போல் வசந்தனை வருத்தியது. அவளுக்கு ஆறுதல் கூறும் பொருட்டு வசந்தன் அவள் எதிரில் வந்து நின்றான்.
அவனைக் கண்டவுடன் அவளது புலம்பல் மேலும் அதிகரித்தது.  
‘‘வசந்தா! உன் நண்பரின் நிலையைப் பார். சாம்பல் மட்டுமே எஞ்சியுள்ளது. அதைக்கூட காற்று எங்கும் இறைக்கிறது’’
‘‘மன்மதா! ஒருவர் மனைவியரிடம் வைத்திருக்கும் அன்பு உறுதியானதில்லை. ஆனால் நண்பர்களின் வைக்கும் அன்பு உறுதியானது. ஆகையால், எனக்காக இல்லாவிட்டாலும் உன் நண்பன் வசந்தனுக்காகவாவது எங்கள் முன் வா’’
‘‘வசந்தனே! உன் நண்பன் காற்றில் ஏற்றப்பட்ட விளக்கு போல அணைந்து போய்விட்டார்.  இனி அவர் திரும்பப் போவதில்லை.  சோபை இழந்து, உஷ்ணத்துடன் புகைந்து கொண்டிருக்கும் அணைந்த விளக்கின் திரி போல ஒளிழந்து மனத்துக்குள் இருக்கும் தாங்க முடியாத துயரால் புகைந்து கொண்டிருக்கிறேன்.  நானிருக்கும் நிலையைப் பார்’’
...............


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar