|
நோயுற்ற நண்பரைப் பார்த்துவிட்டு அந்தக் கார்ப்பரேட் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். “டாக்டர் கூப்பிடறாங்க” – சொன்னவள் கையில் வாளியும் விளக்குமாறும் இருந்தன. அவள் வேகமாக நடக்கத் தொடங்கினாள். ஓடாத குறையாக அவளைப் பின்தொடர்ந்தேன். அவள் என்னை அழைத்துச் சென்ற இடம் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலாக இருந்தது. “டாக்டர் கூப்பிட்டார்ன்னு சொன்னீங்க?” “ஏன்... என்னைப் பார்த்தால் மருத்துவச்சியாகத் தெரியவில்லையோ?” விளக்குமாற்றைத் காட்டினாள். கீழே விழுந்து வணங்கினேன். “இந்த அறைக்குள் போ.” “யார் இருக்கிறார்கள் தாயே?” அன்னையின் பெயரைக் கேட்டதும் ஆடிப்போனேன். எனக்கு அவனைப் பற்றித் தெரியும். கந்துவட்டிக்காரன். அரசியல் செல்வாக்கு நிறைய உண்டு. அவன் செய்யாத கொடுமைகளே கிடையாது. கொலையும் கற்பழிப்பும் அவனுக்கு பொழுதுபோக்கு. எத்தனை குடும்பங்களை அவன் வேரறுத்திருக்கிறான் என்பதற்குக் கணக்கே இல்லை. “அந்தப் பாவியை நான் ஏன் தாயே பார்க்க வேண்டும்?” பச்சைப்புடவைக்காரி மென்மையாகச் சொன்னாள். “தீமையையும் ஒரு நோயாகப் பார்க்கவேண்டும் என நீயே பலமுறை சொல்லியிருக்கிறாயே!” “தீமை நோய்தான். மறுக்கவில்லை. ஆனால் இவ்வளவு பெரிய நோயை குணப்படுத்த முடியும் எனத் தோன்றவில்லை’’ சாமர்த்தியமாகப் பேசிவிட்டதாக நினைத்தேன். “ஓஹோ... இதுவரை நீதான் சொந்தத் திறமையால் பலரையும் குணப்படுத்தினாயோ...சபாஷ்” மீண்டும் அவள்முன் விழுந்தேன். “தாயே! நீங்கள்தான் மகாமருத்துவச்சி” “அதை மறக்காமல் என் ஊழியனாக போ. மற்றவற்றை பார்த்துக் கொள்கிறேன்” பெரிய அறையில் ஒரு பக்கம் மருத்துவர்களும் நர்சுகளும் இருந்தனர். இன்னொரு பக்கம் சில காவலர்கள் நின்றிருந்தனர். கந்துவட்டிக்காரன் சலனமின்றி படுத்திருந்தான். என்னை விசாரித்து, சோதனையிட்டே அனுப்பினர். துாரத்து உறவு என்று மட்டும்தான் அடையாளம் சொன்னேன். நோயாளிக்கு உதவி செய்ய ஒரு முதியவள் இருந்தாள். “தம்பி, உன்னப் பாக்க ஆளு வந்திருக்குடா. கட்டின பொண்டாட்டியும், பெத்த பிள்ளைங்களுமே அம்போன்னு விட்டுட்டாங்க. உன்கிட்ட வேலை செஞ்ச எந்த நாயும் போலீசுக்குப் பயந்துட்டு உன்னைப் பாக்க வரல. யாரு பெத்த புள்ளையோ உன்னப் பாக்க வந்திருக்குடா. கொஞ்சம் எந்திரிச்சி உக்காருடா, தம்பி” கந்துவட்டி உட்கார்ந்தான். அருகில் அமர்ந்தபடி அவனது கையை அழுத்தமாகப் பற்றினேன். நான் யாரெனக் கேட்டான். சுருக்கமாகச் சொன்னேன். “நீங்க வந்ததுக்கு நன்றி. அதுக்காக கடவுள், கருணை, நான் செஞ்ச பாவம், கருமக்கணக்குன்னு டயலாக் விட ஆரம்பிச்சிராதீங்க. கடவுள நம்பறது காட்டுமிராண்டித்தனங்கறதுதான் என் கொள்கை. பச்சைப்புடவைக்காரி, சிகப்புப்புடவைக்காரின்னு யாரும் கெடையாது. எல்லாம் உங்க மாதிரி ஆளுங்க விட்ட கதை” கந்துவட்டியின் கன்னத்தில் அறைந்தேன். நிலைகுலைந்து அப்படியே படுக்கையில் சாய்ந்தான். போலீஸ்காரர்களும், நர்சும் ஓடி வந்தனர். முதியவள் சொன்னாள். “பேசிக்கிட்டே டக்குன்னு சரிஞ்சிட்டாரு. நல்லவேளை இவரு பிடிச்சிக்கிட்டாரு” “கன்னத்துல யாரோ அடிச்ச மாதிரி சத்தம் கேட்டுதே” “அதெல்லாம் இல்லையே” எல்லோரும் சென்றவுடன் கந்துவட்டியின் சட்டையைப் பிடித்து உலுக்கினேன். “டேய் பொதுவா என்கிட்ட எல்லோரும் பிரச்னைன்னு வருவாங்க. நான் பச்சைப்புடவைக்காரிகிட்ட சொல்லுவேன். சில சமயம் விரதம்கூட இருப்பேன். நுாத்துல ரெண்டு மூணு பேருக்குத்தான் பச்சைப்புடவைக்காரி பிரச்னைக்குத் தீர்வு சொல்வா. ஆனா, உனக்காக பச்சைப்புடவைக்காரி தனது படைத்தல், காத்தல் வேலையெல்லாம் விட்டுட்டு வந்திருக்காடா. எங்கேயோ போயிட்டிருந்த என்னை வழிமறிச்சி உன்கிட்ட அனுப்பிவச்சாடா. நீ இவ்வளவு கொடுமை செஞ்சதுக்கப்பறமும் உன்னை இந்த அளவு நேசிக்கற அந்த தெய்வத்தையே இல்லேன்னு சொல்றியேடா, நீயெல்லாம் மனுஷனா? உலகமே ஒதுக்கிவச்ச உன்ன மாதிரி ஆள்கூட உருப்படணும்னு நெனச்ச அந்த உமா மகேஸ்வரிய இல்லன்னு சொல்றியே, நீ நல்லா இருப்பியா?” “நெஜமாவா?” என திருப்பித் திருப்பிக் கேட்டுக்கொண்டிருந்தான் கந்துவட்டி. “சத்தியமா” “என்னப் பாக்க பச்சைப்புடவைக்காரி வருவாளா? இந்தக் கேடுகெட்டவன்மேலயும் பாசம் வச்சிருக்காளா என்ன?” நான் ஒன்றும் சொல்லவில்லை. திடீரென வாளியும் விளக்குமாறாக உள்ளே நுழைந்தாள் இந்த உலகைப் படைத்தவள். நான் சட்டென எழுந்து நின்றேன். என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினாள் அன்னை. பின் கந்துவட்டியின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள். “எல்லாம் சரியாப்போயிரும் கண்ணு. நீ எதுக்கும் கவலப்படாத” கந்துவட்டி பெரிதாக அழ ஆரம்பித்தான். “பெரிய டாக்டர் வர நேரம். கூட்டம் போடக்கூடாது. பாக்க வந்தவங்க கிளம்பலாம்” நான் கந்துவட்டியையும், கூட இருந்த முதியவளையும் பார்த்து கைகூப்பிவிட்டு வெளியேற முயற்சி செய்தேன். “சார் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போங்களேன். நீங்க இங்க இருக்கும்போது எனக்கு வலியே தெரியல. பச்சைப்புடவைக்காரியப் பத்திச் சொல்லுங்களேன்” “அதுக்கு இன்னொரு நாள் வரேன். இப்போ நான் போகணும். மேலிடத்து உத்தரவு வந்தாச்சு” தாழ்வாரத்தில் வாளியும் கையுமாக நின்றிருந்தாள் பச்சைப்புடவைக்காரி. “இவ்வளவு கொடுமைகள் செய்தவனிடம் என்னை அனுப்பி வைத்து நீங்களே அவனைத் தொட்டு, எல்லாம் சரியாகிவிடும் என ஆசி கூறி... என்ன தாயே நடக்கிறது இங்கே?” “இந்த உலகின் மோசமான தீயவனிடம்கூட கொஞ்சமாவது நல்ல குணங்கள் இருக்குமல்லவா? அதற்குப் பலனாகத்தான் உன்னை உள்ளே அனுப்பி அவனை அறைய வைத்தேன். பின் நானே போய் அவனைத் தொட்டு ஆசி வழங்கினேன்” “அதனால் அவன் நோய் குணமாகி விடுமா? குணமாகி வெளியே வந்து பழையபடி கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டுக் கொடுமைகள் புரிந்தால்? இவனது கர்மக்கணக்கு எப்படி நேராகும்?” “இனிமேல் அவன் தப்பு எதுவும் செய்ய மாட்டான். ஆனால் ஏற்கனவே செய்த தீவினைகள் பலன் கொடுக்கத் தொடங்கிவிட்டன. அவைதான் அவனை நோய் என்ற குழியில் தள்ளி விட்டிருக்கின்றன. பல வருடங்கள் வலியையும் வேதனையும் அனுபவிப்பான். ஆனால் இன்று நடந்த நிகழ்வுகளால் மீதமிருக்கும் வாழ்நாளில் தான் செய்த பாவங்களுக்காக வருந்தி அழுதுகொண்டிருப்பான். அடுத்த பிறவி நன்றாக இருக்கும். இவனை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் சொல்” “அதுதான் கொடுத்து விட்டீர்களே தாயே” “என்ன கொடுத்தேன்?” “எவ்வளவு பெரிய ஞானத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்? கந்துவட்டிக்காரன் தீயவன், நான் நல்லவன் என்ற இறுமாப்போடுதான் உள்ளே போனேன். இப்படி ஒரு கேடுகெட்ட பிறவியா என்று அவனைக் கேவலமாகப் பார்த்தேன். ஆனால் நீங்களோ சில நிமிடத்தில் அவனிடமிருந்த தீமையை ஒட்டுமொத்தமாக அழித்து விட்டீர்கள். கூடவே என் மனதில் இருந்த அறியாமையையும் அகந்தையையும் அழித்து விட்டீர்கள். “மீதமிருக்கும் இந்தப் பிறவியில் கந்துவட்டிக்காரன் அனுபவிக்கும் வலியிலும் வேதனையிலும் அவன் கர்மக்கணக்கு நேராகிவிடும். அடுத்த பிறவியில் கந்துவட்டிக்காரன் என்னைவிட ஆயிரம் மடங்கு நல்ல பக்தனாக இருப்பான். “ஒரு காலத்தில் நானும் அவனைப் போல் தீயவனாக இருந்திருக்க வேண்டும். இன்று செய்ததுபோல் உங்கள் கருணையால் என்னுள்ளே இருந்த தீமையை அழித்திருக்க வேண்டும். எனக்கும் கந்துவட்டிக்காரனுக்கும் தன்மையில் எந்த வித்தியாசமும் இல்லை. காலத்தில்தான் வித்தியாசம். கந்துவட்டிக்காரன் என்னுடைய இறந்தகாலம். நான் அவனுடைய வருங்காலம். “இனிமேல் தீயவனைப் பார்த்தால் அவன் என்னை விடத் தாழ்ந்தவன் என்ற கர்வம் சத்தியமாக வராது, தாயே! அவன் என்னுடைய கடந்தகாலம் என்ற அடக்கம்தான் வரும். “பெரிய ஞானத்தை அநாயாசமாகக் கொடுத்துவிட்டு இன்னும் என்ன வேண்டும் எனக் கேட்கிறீர்களே, உங்கள் அன்பைத் தாங்கும் சக்தி இந்தக் கொத்தடிமைக்கு இல்லை தாயே!” கண்களை மூடித் திறந்தேன். அன்னை மறைந்து விட்டிருந்தாள்.
|
|
|
|