|
சிவபெருமான் தனக்கு மாமனார் ஆகப் போகின்றவனும் அந்த காரணத்தினாலேயே தம்மால் வணங்கத்தக்கவனுமான ஹிமவானுக்கு நமஸ்காரம் செய்தார். அதை ஏற்கவேண்டியுள்ளதே என ஹிமவான் வெட்கமுற்றான். ஆனால் சிவபெருமானை கண்டதுமே, தான் அறியாமலேயே தலையைத் தாழ்த்தி வணக்கம் செய்தான். சிவபெருமான் செய்தது பதில் வணக்கமாயிருந்ததே ஒழிய, முதல் வணக்கமாக இல்லை. பதில் வணக்கத்தை ஏற்பதில் வெட்கப்பட தேவையில்லை. மலர்ந்த முகத்துடன் ஹிமவான் முன் சென்று, தன் மாளிகைக்கு பெருமானை அழைத்துச் சென்றான். வழிமுழுவதும் கணுக்கால் வரை அழுந்தும்படி மலர்கள் கொட்டப்பட்டிருந்தன. ஓஷதிபிரஸ்த பெண்களுக்கு சிவபெருமான் வந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதிலிருந்து அவரைப் பார்க்கப் போகும் ஆவலில் எந்த வேலையும் ஓடவில்லை. ஊருக்குள் அவர் நுழைந்ததும் பெண்கள் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு தெருப்பக்கமாக உள்ள ஜன்னலுக்கு ஓடிவந்தார்கள். ஒரு பெண் ஓடி வரும்போது கூந்தல் அவிழ்ந்துவிட்டது. அவள் கூந்தலை கையால் தாங்கியபடி சென்றாள். அதை முடிந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை. ஒரு பணிப்பெண் தன் எஜமானியின் காலில் செம்பஞ்சு ரசத்தைப் பூசிக் கொண்டிருந்தாள். சிவபெருமான் வருவதை கேள்விப்பட்டு எஜமானியம்மாள் அப்படியே எழுந்து ஓடினாள். வழியெங்கும் சிவந்த செம்பஞ்சு ரசம் படிந்தது. வலது கண்ணிற்கு மை இட்டுக்கொண்டிருந்த ஒரு பெண், பெருமான் வருவதை பார்க்க இடது கண்ணுக்கு இடாமல் கையில் தூரிகையுடன் ஓடினாள். பெண் ஒருத்தி சிவபெருமானை பார்க்க வேகமாய் சென்ற பொழுது, அவள் ஆடையின் முடிச்சு அவிழ்ந்துவிட்டது. அப்படியே கையால் தாங்கிக் கொண்டு ஓடினாள். மற்றொரு பெண் நுாலின் ஒரு முனையை தன் கால் கட்டைவிரலில் கட்டிக்கொண்டு, மறுமுனையில் ரத்தினங்களை கோத்துக் கொண்டிருந்தாள். சிவபெருமான் வருவதைக் கேட்ட அவள் வேகமாகச் சென்றதால் வழியெங்கும் ரத்தினங்கள் உதிர்ந்து, அவள் ஜன்னல் அருகில் சென்ற பொழுது வெறும் நுால் மட்டுமே விரலில் இருந்தது. இந்த இடத்தில கொஞ்சம் கம்பனைக் காணலாமா? ராமனைக் காண மிதிலை நகரப் பெண்கள் போட்டி போட்டுகொண்டு தெருவில் குவிந்தார்கள். நல்ல நீரைக் கண்டால் குடிக்க வரும் மான் கூட்டம் போல், பெண்கள் யாவரும் தங்கள் ஆடை, அணிமணிகள் அவிழ்வதைக் கூட பொருட்படுத்தாமல் ராமனைக் காண ஓடி வருகிறார்கள். ராமனைக் கண்ட அந்த பெண்களின் கண்களில் ராமனின் உருவமே நிரம்பி வழிகிறது. அவன் அந்த பெண்களுக்கு கண்ணனைப் போல் தோன்றி அனைவரது கண்களிலும் நிறைந்தான். அவர்கள் நிலையை கம்பர் அழகாக சொல்கிறார். "தோள் கண்டார் தோளே கண்டார் தோடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்"
ஓஷதி பிரஸ்தத்தின் பெண்கள் எவ்வளவோ பரவாயில்லை! இப்படி தெருவிலுள்ள வாசல் பக்கத்து ஜன்னல்களில் பெண்களில் முகமே நிறைந்திருந்தது. அப்பொழுது சிவபெருமான் முக்கிய வீதியில் நுழைந்தார். அவர் வரவை கருதி தெருவெங்கும் தோரணங்களும், கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. ஓஷதி பிரஸ்தத்தின் பெண்கள் பார்க்க விரும்பியது சிவபெருமானை மட்டுமே. சுற்றியுள்ள வேறு எதைப் பற்றியும் பொருட்படுத்தாமல் அவரை மட்டுமே நோக்கியபடி இருந்தனர். சிவபெருமானை கண்டபிறகு பார்வதி மெய் வருந்தி தவம் இருந்தது சரியானதே என தெரிந்து கொண்டனர். சிவபெருமானுக்கு பணிப்பெண்ணாக இருப்பதே ஒரு பாக்கியம். அப்படியிருக்கையில் மனைவியாக இருந்து விட்டால், எவ்வளவு பெருமை! ஹிமவான் ஓஷதிப்ரஸ்த மக்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டே வீட்டில் நுழைந்தான். மகாவிஷ்ணு கைகொடுக்க, சிவபெருமான் அதை பற்றிக் கொண்டு ரிஷப வாகனத்தின் மீதிருந்து கீழே இறங்கினார். முன்னே பிரம்மதேவன் வழி காட்டிக்கொண்டு செல்ல அரண்மனையில் நுழைந்தார். அவரை தொடர்ந்து தேவர்களும், சப்தரிஷிகளும், சிவ கணங்களும், அரண்மனைக்குள் சென்றனர். சிவபெருமானை வரவேற்ற ஹிமவான், அவரை தக்க ஆசனத்தில் அமரச் செய்து, ரத்தினங்கள், பட்டு வஸ்திரங்கள், மதுபர்கம் முதலிய வேத விதிப்படி மந்திரங்களை ஓதி கொடுத்தான். திருமணங்களில் பல சடங்குகள் உண்டு. சில வேதவிதிப்படி அமைந்தவை, வேறு சில மரபு வழியில் பின்பற்றப்படுபவை. வரப்பிரேஷணம்: திருமணத்திற்கு தயாராய் உள்ள வாலிபன், தனக்கு நெருங்கியவர்களாயும், விஷயம் அறிந்தவர்களாயும் உள்ளவர்களை, தக்க பெண்ணை கண்டு ஏற்பாடு செய்யும்படி அனுப்பி வைப்பது. இதை சிவபெருமான் திருமணத்தில் சப்த ரிஷிகள் செய்தார்கள். மாப்பிள்ளை அழைப்பு: திருமணம் பொதுவாக பெண் வீட்டில் நடக்கும். அதற்காக மாப்பிள்ளையை அழைத்து வரவேண்டும். தற்காலத்தில் ஜானவாசம் என்ற பெயரில் இது செய்யப்படுகிறது. சிவபெருமான் அந்த முறையில் ஹிமவானின் அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறார். நிச்சயதார்த்தம்: பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் சம்பந்தம் செய்து கொள்ள விரும்பி ஒப்பந்தம் செய்துகொள்வது. இதற்கு மணமகனும் மணமகளும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெற்றோர்கள் மட்டும் போதுமானதே. இதுவும் சப்த ரிஷிகள் பெண் பேசி ஏற்பாடு செய்வதற்கு வந்த பொழுதே நடந்துவிட்டது. கன்னிகாதானம்: பெண்ணின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட சிவபெருமான் மாமனார் அளித்த ஆடை ஆபரணங்களை அணிந்து மணமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பூர்ண சந்திரன் போல் பொலிவுற்ற முகத்துடன் உள்ள பார்வதியின் அருகில் மனமும் கண்களும் மகிழ்ச்சியால் மலர பெற்று விளங்கினார். இருவரும் ஒருவருக்கொருவர் ரகசியமாக பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியடைந்தனர். ஹிமவானால் தரப்பட்ட தளிர் போன்ற பார்வதியின் கரங்களை சிவபெருமான் பற்றினார். பெருமானுக்கு கை வியர்த்தது. முன்னமேயே இருவரும் ஒத்த அன்புடையவர்களாக இருந்தனர். சாதாரணமாக எந்த திருமணத்திலும் சிவனும், பார்வதியும் மணமக்களிடம் உறைவதாக ஒரு ஐதீகம். அதன் காரணமாக இருவரும் மிக்க பொலிவு பெற்று விளங்கினர். பிறருக்கே அழகு தரும் அந்த இருவரும் அவர்களது திருமண காலத்தில் சோபையுடன் இருப்பதில் என்ன ஆச்சரியம்? அக்னி வலம் வருதல்: கைகளை பற்றிக்கொண்டு, ஜொலிக்கின்ற அக்னியை அவர்கள் பிரதட்சிணம் செய்தார்கள். புரோகிதர் சொன்னபடி மும்முறை அக்னியை வலம் வந்து அமர்ந்தனர். பொரியிடுதல் (லாஜ ஹோமம்): சகோதரன் எடுத்து பெண்ணின் கையில் பொரியை வைக்க, மணமகனாகிய சிவன் மாவிலையால் அதன் மீது நெய் வார்க்க, மணப்பெண் அக்னியில் பொரியை இட்டாள். பொரியிட்ட அக்னியிலிருந்து கிளம்பும் புகையை கைகளால் அள்ளி முகத்தருகே கொண்டு சென்று நுகரும்படி புரோகிதர் சொல்ல, அவ்வாறே பார்வதி செய்தாள். "குழந்தாய்! இந்த அக்னி சாட்சியாக உனது விவாகம் நிறைவேறிவிட்டது. சிவபெருமான் உன் கணவர். இனி அவர் செய்யும் காரியங்கள் நல்லதா, கெட்டதா என்று ஆராயாமல் அவருடன் சேர்ந்து ஒற்றுமையுடன் தான தர்மங்களை செய்வாயாக’’ என புரோகிதர் பார்வதிக்கு கூறினார். அதை பார்வதி கவனமுடன் கேட்டுக் கொண்டாள். அருந்ததி காணல்: பார்வதி அருந்ததியை திருமணத்தில் நேரே கண்டுவிட்டாள். அதனால் சிவபெருமான் பார்வதியிடம் துருவ நட்சத்திரத்தை பார்க்கும்படி சொன்னார். வெட்கத்தால் மெல்லிய குரலில் ‘பார்த்து விட்டேன்’ என்று பார்வதி கூறினாள். விவாகத்தில் அனைத்து சடங்குகளும் முறைப்படி நன்கு கற்றறிந்த புரோகிதர்களால் செய்து முடிக்கப்பட்டது. உலகிற்கே தாய் தந்தையரான இருவரும் உலகின் பாட்டனாராக கருதப்படும் பிரம்ம தேவரை வணங்கினர். சகல வித்தைகளுக்கு தலைவியான சரஸ்வதியின் கணவர் பிரம்ம தேவர். ஆயினும் சகல மங்களங்களும் பொருந்திய சிவபெருமானுக்கு என்ன சொல்லி ஆசீர்வாதம் செய்ய முடியும்? சற்று யோசித்து, வீரனான மகன் பிறக்க வேண்டும் என ஆசீர்வதித்தார். பிறகு சிவபெருமானும் பார்வதியும் நன்கு அலங்கரிக்கப்பட்ட மேடையை அடைந்தனர். அங்குள்ள ஆசனங்களில் அமர்ந்து வந்திருந்த சுற்றத்தினர், தேவர்கள் ஆசியால் துாவிய அட்சதையை ஏற்றனர். மகாலட்சுமி தாமரை மலரை இருவருக்கும் குடையாக பிடித்து மரியாதை செய்தாள். அடுத்து சரஸ்வதி அவர்களை புகழ்ந்து பேசி ஆசி கூறினாள். இவை எல்லாம் முடிந்தபின், அங்கு ஹிமவான் ஏற்பாடு செய்திருந்த தேவமாதர்கள் நடித்த ஒரு நாடகத்தை கண்டு களித்தனர். கடைசியாக ஒரு முக்கியமான விஷயம். இதுவரை தேகமில்லாமல் உலவிய மன்மதனுக்கு சிவபெருமான் உடல் கொடுத்து பழையபடி இருக்க அருள்புரிந்தார். மன்மதன் பார்வதி பரமேஸ்வரரை வணங்கினான். சிவபெருமானும் மன்மத பாணங்கள் தம்மிடம் வருவதை அங்கீகரித்தார். சாந்தி முகூர்த்தம் :விருந்தினர் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பியபின், சிவபெருமான் பார்வதியின் கரம்பற்றி கொண்டு சயனகிரகம் சென்றார். அங்கு நீர் நிறைந்த கலசம் வைக்கப்பட்டு, புஷ்பங்கள், கோலம் முதலியவற்றால் அலங்கரிக்கப் பட்டிருந்தது அந்த கிரகம். . சயன கிரஹத்தில் பார்வதி நாணம் மிகுந்து அழகாக விளங்கினாள். அவளுடைய வெட்கத்தை கண்ட சிவபெருமான் வேடிக்கையாய் பேசி அவளுக்கு சிரிப்பை உண்டாக்கி வெட்கத்தைக் குறைத்தார். பார்வதியும் பரமனும் கைலாயத்தில் இருந்து இந்த உலக மக்களுக்கு அனைத்து வழிகளிலும் அருள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நாமும் அவர்களது பாதம் பணிந்து இன்புற்றிருப்போம்.
|
|
|
|