|
அண்டங்காக்கை ஒன்று காட்டில் வசித்து வந்தது. கருப்பாக இருப்பதை எண்ணி அடிக்கடி அது வருத்தப்பட்டது. ஒருநாள் தண்ணீர் குடிக்க சென்ற போது குளத்தில் கொக்கு ஒன்று விளையாடுவதைக் கண்டது. அதன் வெள்ளை நிறமும், நீண்ட அலகும் மனதைக் கவர, ‘‘ வெள்ளை நிறக் கொக்கே... அழகாக இருக்கும் நீ, என்னை விட மகிழ்ச்சியாகவும் இருப்பாய் அல்லவா’’ எனக் கேட்டது. ‘‘நீ சொல்வது உண்மை தான்! ஆனால் கிளியை பார்த்ததில் இருந்து என் மகிழ்ச்சி மறைந்தது’’ என்றது. ‘‘ ஏன்’’ எனக் கேட்டது. ‘‘பச்சைநிற உடலும், சிவந்த வாயும் கொண்ட அது என்னை விட அழகாக இருக்கிறது. எனவே அதுதான் மகிழ்ச்சியாக இருக்கும்’’ என்றது கொக்கு. கிளியைத் தேடிச் சென்ற போது அது மரக்கிளையில் ஆடியபடி அமர்ந்திருந்தது. ‘‘ என்னையும், கொக்கையும் விட அழகாக இருக்கிறாயே... அப்படியானால் மகிழ்ச்சியாகவும் இருப்பாய்தானே’’ என எண்ணத்தை வெளிப்படுத்தியது. அதற்கு கிளி, ‘‘ ஒரு காலத்தில் மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்தேன். ஆனால் மயிலை பார்த்தபின் மகிழ்ச்சி தொலைந்தது’’ என்றது. காரணம் கேட்டது காகம். ‘‘அழகான பறவை மயில். தோகை விரித்தாடும் போது அனைவரின் உள்ளமும் கொள்ளை போகும்’’ என்றது. காகத்திற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘‘மயில் எங்கே இருக்கிறது’’ எனக் கேட்டது. ‘‘நம் ஊர் எல்லையிலுள்ள பூங்காவில் மயில்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன்’’ என்றது கிளி. உடனே காகம் பூங்காவை நோக்கி விரைந்தது. அங்கு ஒரு கூண்டில் மயில் அடைபட்டுக் கிடந்தது. ‘‘மயிலே... அழகாக இருக்கும் நீ மகிழ்ச்சியாகவும் இருப்பாய் அல்லவா...’’ என தயக்கமுடன் கேட்டது. கவலையில் கண்கள் குளமாக, ‘‘ ஏன் என்னை கேலி செய்கிறாய். இந்த அழகு தானே கூண்டுக்குள் சிறை வைத்தது. நானும் உன்னை போல் கருமையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சுதந்திரமாக பறந்து திரிவேனே’’ என்றது. அழகாக இருப்பவர்கள் மகிழ்ச்சியாகத் தான் இருப்பார்கள் என்பது பொய் என உணர்ந்தது. உற்சாகமுடன், ‘மகிழ்ச்சியைக் கண்டு கொண்டேன்... கண்டு கொண்டேன்’’ என இருப்பிடம் நோக்கிப் பறந்தது அண்டங்காக்கை.
|
|
|
|