|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » தொண்டு செய்த அனந்தாழ்வார் |
|
பக்தி கதைகள்
|
|
வைணவத்தலைவர் ராமானுஜரின் சீடர்களில் முக்கியமானவர் அனந்தாழ்வார். மைசூருக்கு அருகே உள்ள சிறுபுத்துார் என்ற கிராமத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர். ஒருசமயம் திருமலையில் ஏழுமலையானுக்கு புஷ்பத்தொண்டு செய்வதாக ராமானுஜரிடம் விருப்பம் தெரிவித்தார். அவரை, ‘‘நீயே! ஆண்பிள்ளை’’ என போற்றினார். திருமலைக்கு வந்த அவர் நந்தவனத்தை நிறுவி மலர் சேவை செய்து வந்தார். கர்ப்பிணியான தன் மனைவியுடன் புஷ்ப கைங்கிரியம் செய்ய குளம் ஒன்றை வெட்டலானார். இத்தொண்டினை நாம் இருவர் மட்டுமே செய்ய வேண்டும் என மனைவியிடம் பணித்தார். அனந்தாழ்வார் மண்ணை தோண்டிக் கொடுக்க அவரும் அதை துாரத்தில் கொட்டி வந்தார். அப்போது சிறுவன் ஒருவன் அவரின் மனைவியிடம் தானும் இத்தொண்டில் இணைந்து கொள்வதாக கூறினான். அவளிடம் கொடுக்கும் மண்ணை வற்புறுத்தி தானே வாங்கி மற்றொரு இடத்தில் கொட்டி வந்தான். சீக்கரமாக மண்ணை கொட்டி வரும் மனைவியை பார்த்து நடந்ததை தெரிந்து கொண்டார் அனந்தாழ்வார். கோபப்பட்ட அவர் தன் பணியில் பங்கு கொண்ட சிறுவனின் மீது கடப்பாறையை வீசினார். அது சிறுவனின் தாடையில் பட்டு ரத்தம் கசிந்தது. தவறை உணர்ந்த அனந்தாழ்வார் மன்னிப்பு கேட்க அவன் பின் சென்றார். அவனோ திருமலைக்கோயிலுக்குள் சென்று மறைந்தார். சிறுவனுக்கு எந்த இடத்தில் ரத்தம் கசிந்ததோ அதே இடத்தில்கருவறையில் உள்ள திருவேங்கடவனுக்கு ரத்தம் கசிவதை கண்டார். தன்னுடன் தொண்டு செய்ய விரும்பி வந்தது திருமலைநாதரே என்பதை உணர்ந்தார். ஏழுமலையான் திருமுகத்தில் வழியும் ரத்தத்தை நிறுத்த அனந்தாழ்வாரின் யோசனைப்படி பச்சை கற்பூரத்தை பட்டாச்சாரியார்கள் வைத்தனர். ரத்தம் நின்றது. அனந்தாழ்வாரின் பக்தியை வெளிப்படுத்தவே சிறுவனாக வந்தேன் என அசரீரி ஒலித்தது. இன்றும் ஏழுமலையான் முகத்தில் பச்சை கற்பூரம் வைக்கும் வழக்கம் உள்ளது. திருமலை தரிசனத்திற்கு வந்தால் அனந்தாழ்வார் பயன்படுத்திய கடப்பாரையை இன்றும் காணலாம். இன்றும் மலையப்ப சுவாமி வனபோஜன உற்ஸவத்தின் போது அனந்தாழ்வார் தோட்டத்திற்கு எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
|
|
|
|
|