|
நாள் முழுக்க வேலை தேடி அலைந்தார் ஒருவர். மாலையில் மரக்கடை ஒன்றைக் கண்டார். ‘‘ஐயா... நான் கடின உழைப்பாளி; எந்த வேலை கொடுத்தாலும் சிறப்பாகச் செய்வேன்’’ என முதலாளியிடம் உறுதியளித்தார். மரம் வெட்டும் வேலை கிடைத்தது. முதல் நாள் அக்கறையுடன் வேலை செய்தார். மற்ற தொழிலாளிகளை விட வேகமாக மரம் வெட்டும் பணியைச் செய்து முடித்தார். புதியவரின் திறமை கண்டு அனைவரும் வியந்தனர். ஆனால் விதி சதி செய்தது. அடுத்தடுத்த நாட்களில் முதல்நாளைப் போல அவரால் வேகமாக செயல்பட முடியவில்லை. மற்றவர்களின் பரிகாசத்திற்கு ஆளானார். ஒரு வாரம் கடந்தபின், ‘‘என்னாச்சு முதல்நாள் ஆர்வமாக வெட்டினீர்களே... இப்போது ஏன் முடியவில்லை. வேகம் குறைந்து விட்டதே...’’ எனக் கேட்டார் முதலாளி. ‘‘ ஏன் என்றே தெரியவில்லை. முதல்நாளைப் போலவே அக்கறையுடன் தான் வேலை செய்கிறேன்’’ என்றார். ‘‘அப்படியானால்... கோடாரியைக் காட்டுங்கள். அதை எப்படி கூர்மை செய்திருக்கிறீர்கள்’’ எனக் கேட்டார் முதலாளி. ‘‘கூர்மையா... இதுவரை பட்டை தீட்டவே இல்லை’’ என்றார். ‘‘முதல் நாளில் பட்டை தீட்டி கொடுத்தேனே... அதை வைத்தே வெட்டிக் கொண்டு இருக்கிறீர்களா’’ ‘‘ஆமாம்’’ என்றார். ‘‘இது தான் பிரச்னை. பட்டை தீட்டாமல் வெட்டினால் கோடாரி மட்டுப்பட்டு விடும். கடினமாக உழைத்தும் பலன் கிடைக்காது’’ என்றார் முதலாளி. அதன்பின் கோடாரியை கூர்மைப்படுத்துவதை தன் முதல் வேலையாகக் கொண்டார் மரம் வெட்டுபவர். உழைத்தால் மட்டும் போதுமா... செயலில் வெற்றி பெற புத்திசாலித்தனமும் அவசியம்.
|
|
|
|