|
இப்படியாக ராமாவதார தொடர்பும், கிருஷ்ணாவதார தொடர்பும் திருமலையில் வெங்கடேசனுக்கு ஒரு சேர கிடைத்துள்ளது. அங்கே ஆகாசராஜனின் அரண்மனையில் பத்மாவதி வளர்ந்து திருமண பருவம் அடைந்தாள். ஒருநாள் ஸ்ரீனிவாச பெருமாள் ஒரு குதிரை மீது ஏறிக்கொண்டு வேட்டைக்குச் சென்றார். அப்படி செல்லும் போது அங்கே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதனுள் குதிரையைச் செலுத்தினார். அது அரண்மனையைச் சேர்ந்த நந்தவனம். அங்கே பத்மாவதி தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். பரந்தாமன் அங்கே பத்மாவதியைக் கண்டான். அவளும் நாராயணனைப் பார்க்கிறாள். அவனைக் கண்டதும் இவனே நம் நாயகன் என்று முடிவு செய்து விட்டாள். அவள் கவலை இதை எப்படி தாயாரிடம் சொல்வது? நாள் முழுவதும் இதே நினைப்பாக ஏங்கிக் கொண்டு சரியாக சாப்பிடாமல், துாங்காமல் உடல் மெலிந்தாள். அவள் தாயார் பெண்ணின் இந்த நிலைமைக்கு காரணம் புரியாமல் தவித்தாள். அதுபோலவே நாராயணனும் பத்மாவதியையே நினைத்து உருகிக் கொண்டு எதையோ பறிகொடுத்தவன் போலவே நடமாடி வந்தான். இதைக் கண்டு வகுளமாலிகா, ‘இப்படியே விட்டால் சரிவராது’ என்று தீர்மானித்து நாராயணனை அழைத்து, ‘‘குழந்தாய், கொஞ்ச நாளாய் நீ சரியில்லாமல் இருக்கிறாய். உடம்புக்கு ஏதாவது உபாதையா, அல்லது மனத்தில் ஏதாவது கவலையா, தயக்கமில்லாமல் சொல்’’ என்றாள் நாராயணனும் கொஞ்சமும் தயங்காமல்,‘‘அம்மா நான் ஆகாசராஜனின் மகள் பத்மாவதியை பூங்காவில் கண்டேன். எனக்கு அவளை திருமணம் செய்ய விருப்பம். அவளுடைய நினைவிலேயே இருக்கிறேன். நீ அரண்மனைக்கு சென்று அந்த பெண்ணின் தாயாரைக் கண்டு, பேசி, அவளை எனக்கு மண முடித்து வைக்கவேண்டும்’’ என்றான். திடுக்கிட்ட வகுளமாலிகா, ‘‘அப்பா, இது எப்படி சாத்தியம். நீ எங்கிருந்தோ இங்கு வந்து சேர்ந்தவன். நானும் அப்படிதான். ஆதிவராகர் உன்னை இந்த இடத்தை விட்டு போக சொல்லிவிட்டால் உனக்கு தங்க இடம் கூட கிடையாது. அவளோ அரசகுமாரி. பரம ஏழையான உனக்கு அவர்கள் பெண் கொடுப்பார்களா? கொஞ்சம் யோசித்துப் பார்’’ என்றாள். பெருமான், ‘‘நீ அதுபற்றி யோசிக்க வேண்டாம். நீ போய் மகாராணியைக் கண்டு பேசி எப்படியாவது பத்மாவதியை எனக்கு மண முடித்து வை’’ என்றான். சிறிது நேரம் யோசித்தாள் வகுளமாலிகா. ‘‘சரி. நீ இவ்வளவு துாரம் ஆசைப்படுகிறாய். நான் போய் பேசிப் பார்க்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள். வகுளமாலிகாவை அனுப்பி விட்டு, நாராயணன் கொஞ்சம் சிந்தனையில் ஆழ்ந்தான். ‘நாம் இவளை அனுப்பியிருக்கிறோம். இவள் சரியாக பேச வேண்டும். அவர்களும் இவளை நம்பி பெண்ணைத் தர சம்மதிக்க வேண்டும். அப்படி சம்மதிக்காவிட்டால் என்ன செய்வது? எதற்கும் நாம் சென்று ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி வைப்போம்’ என்று நினைத்து தன்னை ஒரு குறி சொல்லும் குறத்திப்பெண்ணாக மாற்றிக் கொண்டு, வகுளமாலிகா போய் சேருவதற்கு முன் அங்கே போய்விட்டான். குறத்தி வேடத்தில், ஒரு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, பரமாத்மா வருகிறான். குறவர்கள் என்றால் தாழ்மையாக நினைக்கக் கூடாது என்பதற்காகவே, பெருமாள் குறத்தி வேடத்தில் வந்து அந்த சமுதாயத்திற்கு ஒரு அந்தஸ்தை கொடுத்து விட்டான். அரண்மனைக்குச் சென்ற குறத்தியாகிய நாராயணன், மகாராணி தாருணி தேவியை அணுகி, ‘‘அம்மா பசியாய் இருக்கிறது. ஏதாவது கொஞ்சம் ஆகாரம் தாருங்கள். குழந்தைக்கு கொஞ்சம் பால் தாருங்கோ’’ என்றான். ‘‘தருகிறேன். உன்னைப் பார்த்தால் குறி சொல்பவள் போல தெரிகிறதே’’ என்றாள். ‘‘ஆமாம் தாயே நான் குறி சொல்லும் குறத்திதான். நான் சொல்வது அப்படியே நடக்கும்’’ ‘‘நீ எங்கிருந்து வருகிறாய்? உங்கள் தேசம் எது?’’ ‘‘எங்கள் நாடு மிக்க வளமான நாடு. எங்கள் நாட்டில் பலா மரம் மேற்கில் காய்க்கும். வாழை கிழக்கு பக்கம் குலை தள்ளும். கீரியும் பாம்பும் ஒரே கிண்ணத்தில் பால் குடிக்கும். ஒரு நெல் கதிரை உதிர்த்தால் மரக்கால் நெல் கிடைக்கும். நாங்கள் எல்லோரும் நட்போடும், மகிழ்ச்சியோடும் வாழ்கிறோம்’’ ‘‘என் மகள் பத்மாவதி கொஞ்சநாளாக மனம் சரியில்லாமல், சரியாக சாப்பிடாமல், விளையாடாமல் எதோ ஏக்கத்திலேயே இருக்கிறாள். நீ அவள் கையைப் பார்த்து அவளுக்கு என்ன கவலை என்று கண்டறிந்து சொல்லவேண்டும். உனக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன்’’என்று மகாராணி கேட்டுக் கொண்டாள். பழம் நழுவி பாலில் விழுந்தது போலாயிற்று பெருமாளுக்கு. அவன் வந்ததே அதற்குத் தானே! ‘‘நிச்சயமாக சொல்கிறேன் அம்மா. நான் சொல்லும் குறி இதுவரை தவறியதே கிடையாது. அவளை அழைத்து வாருங்கள்’’ பத்மாவதி தோழிகளுடன் வந்தாள். அவளை தாருணிதேவி அமரச் செய்து, குறத்தியிடம் கையைக் காட்டச் சொன்னாள். பத்மாவதி கையை குறத்தியிடம் நீட்டினாள். குறத்தியாக வந்திருந்த ஸ்ரீநிவாசன் அவள் கையைப் பற்றினான். இருவருக்கும் உடல் சிலிர்த்தது. அங்கேயே பாணிக்கிரகணம் நடந்து விட்டது. உடனே சுதாரித்துக் கொண்டு,‘ஓ... நாம் பற்றியிருப்பது வலக்கையை அல்லவா’ என்று உணர்ந்து, ‘‘குழந்தாய்! உன் இடக்கையை காட்டும்மா’’ என்றாள். கையைப் பார்த்துவிட்டு குறத்தி சொல்லத்தொடங்கினாள்.‘‘அம்மா தாயே! இது மிகவும் அதிர்ஷ்டமான கை. இவளுக்கு திருமண நேரம் வந்துவிட்டது. இவள் மனத்தில் ஒருவனை நினைத்திருக்கிறாள். அவன் சாமான்யமான ஆள் இல்லை. மிகவும் உயர்ந்த இடம். எதிர்காலத்தில் நல்ல உயர்ந்த அந்தஸ்துக்கு வரக்கூடியவன். நல்ல குணசாலி. நல்ல தோற்றம் உடையவன். அவனுக்கும் இதே ஊர்தான். அதனால், உங்கள் பெண் திருமணத்திற்குப் பிறகும் இங்கேயே இருப்பாள். கவலையே வேண்டாம்’’ என்று குறத்தி சொல்லக் சொல்ல தாருணிதேவிக்கு ஆவல் மேலிட்டு ‘‘இன்னும் சொல், இன்னும் சொல்’’ என்று கேட்டுக்கொண்டிருந்தாள். ‘‘சொல்கிறேன். ஆனால் நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். இவளை பெண் கேட்டுக் கொண்டு ஒரு பெண்மணி வருவாள். அவளை நீங்கள் அலட்சியம் செய்யக்கூடாது. அவள் சொல்கிற பையனுக்கு நீங்கள் இவளை மண முடிக்க வேண்டும். அப்போதுதான் நான் சொன்னதெல்லாம் நடக்கும்’’ அதற்கு மகாராணி,‘‘அப்படியா? பெண் கேட்டு வருவாளா? அவள் சொல்லும் பையன் நல்ல இடமா?’’ என்று கேட்டாள். ‘‘ஆம் தாயே! நீங்கள் மட்டும் மறுக்காமல் அவள் சொல்லும் பையனுக்கே பத்மாவதியை கொடுக்கவேண்டும்’’ என்று சொல்லிவிட்டு குறத்தி விடை பெற்றுக் கொண்டாள். குறத்தி வேடத்தில் இருந்த ஸ்ரீநிவாஸன், உருமாறி பழையபடி நாராயணனாக தன் இடத்திற்கு போய் அமர்ந்து விட்டான். அதற்குள், வகுளமாலிகா மெதுவாக நடந்து சென்று அரண்மனையை அடைந்து, தாருணிதேவியை கண்டாள். தன்னை திருமலையில் வசிக்கும் ஒரு பெண் என்றும் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவனுக்கு பெண் கேட்டு வந்திருப்பதாக சொன்னாள். தாருணி தேவி,‘‘அப்படியா! வாருங்கள் இப்படி உட்காருங்கள்’’ என்று உபசரித்து அமரச் செய்து, ‘‘பையன் யாரம்மா? என்ன செய்கிறான்? நன்றாக படித்திருக்கிறானா? யாரிடத்தில் குருகுல வாசம்? ஏதாவது சொத்துண்டா?’’ ‘‘பையன் பார்க்க வெகு நன்றாயிருப்பான். திருமலையில்தான் வாசம் செய்கிறான். நல்ல ஞானம் உள்ளவன். அவன் உங்கள் பெண்ணை ஏற்கனவே பார்த்து அவள் மீது விருப்பமாக இருக்கிறான். அதனால்தான் நான் பெண் கேட்டு வந்திருக்கிறேன்’’ என்றாள் வகுளமாலிகா. ஏற்கனவே குறத்தி இவள் வருகையை பற்றி சொல்லி, மறுக்காமல் சம்மதிக்கச் சொல்லியிருப்பதால் தாரிணிதேவி மேற்கொண்டு அதிகமாக கேள்விகள் கேட்கவில்லை. ‘‘சரி. மிக்க மகிழ்ச்சி. நான் அரசரை கலந்து பேசிவிட்டு உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன்’’ வகுளமாலிகா விடை பெற்றாள். தாரிணி தேவி கணவன் ஆகாசராஜனிடம், குறத்தி வந்தது, அவள் சொன்னது, பிறகு வகுளாதேவி வந்தது எல்லாவற்றையும் விவரமாக சொன்னாள். ஆகாசராஜன் மனைவி சொன்னதைக் கேட்டு, ‘‘எதற்கும் நாம் நம் குலகுரு சுகாசார்யாரிடம் விவரங்கள் சொல்லி அவர் என்ன சொல்கிறார் என்று கேட்போம்’’ என்று சொல்லிவிட்டு, அரசன் குருவிடம் சென்று வணங்கி நடந்த விஷயங்களை சொன்னான். சுகாசார்யார் சற்று கண்களை மூடி சிந்தித்தார். அவருக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும் தெரிந்தன. பிறகு ஆகாசராஜனிடம்,‘‘மன்னவா! உன் மகள் பத்மாவதி மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள். அவள் அவனுக்காகவே பிறந்தவள். ஆகையால் அவனைத்தான் அவள் மணக்க வேண்டும். அவர்களின் செல்வாக்கும் புகழும் உச்சத்தை எட்டும். உலகமே அவர்களை தேடி வந்து வணங்கும். திருமணத்திற்கு பிறகு அவர்கள் ராஜபோகத்தை அனுபவிப்பார்கள். ஆகவே கொஞ்சம்கூட யோசனை செய்யாமல் அந்த ஸ்ரீனிவாசனுக்கே பத்மாவதியை கொடுத்து திருமணம் செய்து வை. காலம் கடத்த வேண்டாம்’’ என்றார். இதைக் கேட்டதும், அரசனும் அரசியும் மகிழ்ச்சியில் பரவசமுற்று குருவின் பாதத்தை பணிந்து ‘தாங்கள் சொன்னபடியே செய்கிறோம்’ என்று சொல்லி விடை பெற்றார்கள். அரண்மனைக்கு வந்ததும் பத்மாவதியை அழைத்து நடந்த சம்பவங்களை கூறி, அவளை ஸ்ரீனிவாசனுக்கே திருமணம் செய்து கொடுக்க செய்திருக்கும் முடிவை சொன்னார்கள். மகிழ்ச்சியில் திளைத்தாள் பத்மாவதி. மேற்கொண்டு எதையும் தாமதப்படுத்தாமல், உடனே ஆகாசராஜன் பத்மாவதியை ஸ்ரீனிவாசனுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புவதாக கடிதம் எழுதி மாப்பிள்ளை வீட்டுக்கு கொடுத்தனுப்பினான். கடிதம் பெற்ற வகுளமாலிகா, அரசனின் முடிவை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்பதாகவும், உடனே திருமண ஏற்பாடு செய்யும் படியும் பதில் ஓலை அனுப்பினாள்.
|
|
|
|