|
துறவி ஒருவரிடம் இளைஞன் ஒருவன், ‘காலம் காலமாக நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள். ஆனால் அதை யாரும் பின்பற்றுவது இல்லையே... உங்களைப் போன்றவர்களால் யாருக்கும் பயனில்லை என்பது தானே உண்மை’’ எனக் கேட்டான். ‘‘ ஒரு வாரம் நான் இங்கு இருப்பேன். நான் செல்வதற்குள் உன் சந்தேகம் தீரும். எனக்காக ஒரு வேலை செய். இங்குள்ள சத்திரத்தில் குதிரை ஒன்றை கட்டி வை. அதற்கு உணவளிப்பது உன்னுடைய பணி’’ என்றார். இளைஞனும் சம்மதித்தான்.
மறுநாள் துறவி சத்திரத்திற்கு வந்த போது, குதிரையை சுற்றிக் கிடந்த குப்பையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான் இளைஞன். ‘‘தினமும் நீ சுத்தப்படுத்தினாலும் குதிரை மீ்ண்டும் அசுத்தப்படுத்தத் தான் செய்யும்... பிறகு ஏன் இதைச் செய்கிறாய்’’ என கேட்டார் துறவி. அதற்கு அவன், ‘‘ அசுத்தம் ஆகுதேன்னு சுத்தப்படுத்தாமல் இருந்தால் எப்படி? ’’ எனக் கேட்டான். அதற்கு துறவி, ‘‘உன் சந்தேகத்திற்கு இது தான் பதில். நீ செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன். அசுத்தமான இடத்தை சுத்தம் செய்வது போல மன அழுக்குகளைப் போக்கும் பணியை ஆன்மிகவாதிகள் செய்கிறார்கள். இளைஞன், ‘‘இதற்கு முடிவு தான் என்ன’’ என்று கேட்டான். ‘‘சத்திரத்தில் இருந்து குதிரையை அப்புறப்படுத்தினால் அதன் பின் அந்த இடம் அசுத்தமாகுமா? ’’ எனக் கேட்டார். ‘‘ஆகாது சாமி’’ என்றான் வேகமாக.
‘‘தீய எண்ணம் என்னும் குதிரையை வாழ்வில் இருந்து அப்புறப்படுத்தினால் ஒருவரின் மனம் சுத்தமாகி விடும். அதுவரை நல்வழிப்படுத்தும் ‘கடமை’ என்னும் மூன்றெழுத்தில் தான் என் மூச்சிருக்கும்’’ என்றார் துறவி.
|
|
|
|