|
சென்னையில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஒரு வாடிக்கையாளருடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஒரு அழகி திடீரென என்னை நோக்கி வந்தாள். அருகில் வந்ததும்தான் ஒரு முன்னணி நடிகை என்பது புரிந்தது. ஒரு பிளாஸ்டிக் அட்டையைக் கொடுத்தாள். ‘‘இது என் ரூமோட சாவி. சாப்பிட்டு முடிச்சதும் ரூமுக்கு வாங்க. உங்களோட பேசணும்’’ நான் பதில் சொல்வதற்குள் நடிகை சென்றுவிட்டாள். வாடிக்கையாளர் சென்றவுடன் ஓட்டல் ஊழியையிடம் நடிகை கொடுத்த அட்டையைக் கொடுத்தேன். ‘‘இது கீழ கிடந்தது’’ ‘‘என்னிடமே பொய் சொல்கிறாயா? அந்த நடிகைதானே உன்னிடம் கொடுத்தாள்?’’ பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன். ‘‘அவளைப் போன்ற அழகியுடன் ஒரு தனியறையில்...’’ ‘‘பயப்படுகிறாயா? நீ என் ஊழியனாகப் போகிறாயடா. உன்னைப் பாதை தவற விடமாட்டேன்.’’ தாயை வணங்கிவிட்டு நடிகையின் அறைக்குச் சென்றேன். அந்த அட்டையை சாவித் துவாரத்தில் காட்டியதும் கதவு திறந்தது. நடிகை வரவேற்றாள். அவளுடன் இரு பாதுகாப்பு வீரர்களும் ஒரு பெண் உதவியாளரும் இருந்தனர். அவர்களை அடுத்த அறைக்கு அனுப்பிவிட்டுப் பேசத் தொடங்கினாள். ‘‘எனக்கு ஏன் இப்படி கொடூரமான தனிமையைப் பச்சைப்புடவைக்காரி கொடுத்தான்னு புரியல. எனக்கு பெரிய ஆசை எதுவும் கெடையாது. படிச்சி முடிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு குழந்தைகளப் பெத்து அவங்கள வளர்த்து ஆளாக்கினாப் போதும்னுதான் நெனச்சேன். எங்கப்பா எக்குத்தப்பா கடன்ல மாட்டிக்கிட்டாரு. வேற வழியில்லாம நடிக்க வந்தேன். கடன அடைச்சேன். நல்லா சம்பாதிச்சேன். வளர்ந்து வர ஒரு நடிகரக் காதலிச்சிக் கல்யாணமும் பண்ணினேன். அதுக்கப்பறம்தான் அந்த ஆளோட நிஜமுகம் தெரிஞ்சது. என்னை மனுஷியாவே மதிக்கல. டைவர்ஸ் வாங்கிட்டு வந்துட்டேன். நுாறு கோடி ரூபாய் ஜீவானாம்சம் கேளுன்னு வக்கீல் சொன்னாரு. அந்த ஆளோட காசே வேண்டாம்னு எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு வந்துட்டேன். ‘‘எனக்கு நல்ல பேரு. கோடிக்கணக்குல சம்பாதிக்கறேன். ஆனா தனிமை என்ன வாட்டுது. அர்த்தமுள்ள உறவுன்னு யாரும் கெடையாது. என்னச் சுத்தி எல்லாம் போலி உறவுகள்தான். அவங்களுக்குத் தேவை என் அழகும், பணமும்தான். நான் ஒழுங்கானவ கெடையாது. இந்த பீல்டுல யாரையும் ஒழுங்கா வாழ விடமாட்டாங்க. மது, ஆண் நண்பர்கள்னு எல்லாக் கெட்ட பழக்கமும் இருக்கும். ஆனா என் மனசுல ஒரு பிரம்மாண்டமான வெறுமை. கொடூரமான தனிமை. எதுலயுமே பிடிப்பில்ல. எல்லாத்தையும் விட்டுட்டு எங்கயாவது கண்காணாத இடத்துக்கு ஓடிரலாமான்னு தோணுது. தாய்கிட்ட தினமும் அழுதுக்கிட்டிருக்கேன். அவஏன் இன்னும் மனசு இரங்கல?’’ மனம் இரங்காமலா என்னை வற்புறுத்தி இவளிடம் அனுப்பி வைத்தாளாக்கும்? நடிகைக்காகப் பிரார்த்தித்தேன். தாயே என்னுள் எண்ணங்களாகவும் வார்த்தைகளாவும் மலர்ந்தாள். ‘‘உங்கப்பாவோட கடன்பிரச்னையால நீங்க நடிகையாகல. நீங்க பெரிய நடிகையாகிப் பேரும் புகழும் சம்பாதிக்கணுங்கறது உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கை. ‘‘உங்களோட ஏழெட்டுப் பேரு நடிக்க வந்தாங்க. அதுல ரெண்டு மூணு பேரு உங்களவிட அழகாவே இருந்தாங்க. நல்லாவும் நடிச்சாங்க. அவங்க எல்லாரும் ஒண்ணு ரெண்டு படத்தோடப் காணாமப் போயிட்டாங்க. நீங்க பத்து வருஷமா நெலச்சி நிக்கறீங்க. உங்க அழகையும் நடிப்பையும் தாண்டி உங்ககிட்ட ஒரு அபூர்வமான கவர்ச்சி, ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு. நீங்க நடிச்ச படம் எல்லாம் பிரமாதமா ஓடுது. அது பச்சைப்புடவைக்காரி உங்களுக்குக் கொடுத்த வரம்.‘‘ ‘‘கூடவே இந்த வெறுமை. இந்தத் தனிமை.. ‘‘ ‘‘ அது உங்க பேரு, புகழ், பணத்தோட சம்பந்தப்பட்டது. ஒரு பிரபலமான நடிகையா இருக்கறதோட பக்க விளைவுகள்.’’ ‘‘நான் என்ன செய்யட்டும்?‘‘ ‘‘அதிகபட்சம் நீங்க இன்னும் நாலஞ்சு வருஷம் நடிக்கலாம். அதுக்குள்ள நெறைய பணத்த சேருங்க. நம்ம நாட்டுல நெறையப் பெண்கள் தப்பான வாழ்க்கையில மாட்டிக்கிட்டுத் தவிக்கறாங்க. அவங்களுக்கு வழிகாட்டறதுக்கும் வாழ்வாதாரத்த ஏற்படுத்திக்கொடுக்கறதுக்கும் ஒரு பெரிய அறக்கட்டளைய ஆரம்பிங்க. கொஞ்சம் கொஞ்சமா அதுல கவனத்தச் செலுத்துங்க. மது, ஆண் தொடர்புன்னு நடிகையா வாழ்ந்துக்கிட்டிருந்தா நீங்க தப்பான ஆசாமிகளத்தான் உங்க பக்கம் இழுப்பீங்க. உங்களுடைய மாஜி கண்வரும் அந்த ரகம்தான். ஆனா உங்ககிட்ட இருக்கற ஆழம் அந்த மனுஷன்கிட்ட இல்ல. அதனாலதான் உங்களால அவர்கூட வாழ முடியல. நாலு வருஷம் கழிச்சி நீங்க அறக்கட்டளை வேலைகள ஆரம்பிச்சி நடிப்ப விட்டவுடன தன்னைப் போல ஒழுக்கம் வந்திரும். நல்லவங்க உங்களத் தேடி வருவாங்க. நல்ல வாழ்க்கைத்துணையோட அமோகமா வாழ்வீங்க. இத நான் சொல்லல. பச்சைப்புடவைக்காரி சொல்லச் சொன்னா.’’ சில நிமிடங்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் நடிகை. ‘‘இன்னும் நாலஞ்சு வருஷம் இந்தத் தனிமையையும் வெறுமையையும் சமாளிக்க முடியுமான்னு தெரியலையே! தற்கொலைவரைக்கும் போயிருவேனோன்னு பயமா இருக்கு’’ ‘‘உங்களோட ஸ்கூல்ல படிச்சாளே சந்தியா அவ இப்போ புருஷன இழந்து தனிமரமா இருக்கா. பணத்துக்குக் கஷ்டப்படறா. அந்தக் காலத்துல நீங்க ரெண்டு பேரும் உயிர்த்தோழிகளா இருந்தீங்க. சந்தியாவ கண்டுபிடிச்சி உங்க மேனேஜரா வச்சிக்கங்க. உங்க வீட்டுலயே தங்க வச்சிக்கங்க. அவ வாழ்க்கைக்கு வழி காட்டின மாதிரியும் இருக்கும். உங்களுக்கு நல்ல துணை கெடைச்ச மாதிரியும் இருக்கும்’’ திடீரென நடிகை எழுந்து என் காலைத் தொட்டு வணங்கினாள். ‘‘என்ன இதெல்லாம்?’’ - நான் கத்தினேன். ‘‘இதெல்லாம் நான் சொல்லல. பச்சைப்புடவைக்காரிதான் சொல்றான்னு சொன்னீங்கல்ல? நான் உங்கள வணங்கல. உங்க மூலமா தாயை வணங்கறேன்.’’ நான் நடிகையிடம் விடைபெற்ற போது இரவு மணி 11. வரவேற்புப் பகுதியில் இருந்த பச்சைப்புடவைக்காரி என்னைப் பார்த்து முறுவலித்தாள். ‘‘நடிகையின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லிவிட்டாயே?’’ ‘‘உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ளாதீர்கள், தாயே!’’ ‘‘அவளை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும்?’’ ‘‘நடிகையைப் போல் நிறைய பணம், புகழ் சம்பாதித்தவர்கள் எல்லோர் வாழ்க்கையிலும் தனிமையும் வெறுமையும் இருக்கத்தான் செய்கின்றன. மற்றவர்களை விட்டுவிட்டு இந்த நடிகையிடம் மட்டும் என்னை ஏன் அனுப்பினீர்கள்?’’ ‘‘செல்வத்திலும் புகழிலும் புலனின்பங்களிலும் உண்மையான நிறைவு கிடைக்காது என்பதை உணர்ந்தவள் இவள் மட்டும்தான். மற்றவர்கள் மதுவிலும் உடல்சுகத்திலும் நிறைவைத் தேடியலைகிறார்கள். இவளிடம்தான் நிறைவைக் குறித்த தீவிரமான தேடல் இருக்கிறது. அதனால்தான் தனிமையும் வெறுமையும் இவளை அதிகமாக வாட்டுகிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வேண்டும்தான். ஆனால் பசி பொறுக்காமல் சத்தமாக அழும் குழந்தைக்குத்தான் முதலில் பால் கிடைக்கும்’’ ‘‘எனக்கு ஒரு வரம் வேண்டும், தாயே! இந்தப் பிறவியிலோ, இல்லை, இன்னும் ஆயிரம் பிறவிகள் கழித்தோ நான் உங்களுடன் ஒன்றிவிடுவேன். எந்த நதியும் கடலில் கலக்கத்தானே வேண்டும்! அதுவரை நான் புகழின் உச்சியின் இருந்தாலும், துன்பத்தில் துவண்டாலும், நரகத்தில் உழன்றாலும் மனதில் தீவிரமான தேடல் இருக்கட்டும். நிறைவு, மகிழ்ச்சி, அன்பு ஆகியவற்றைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.’’ ‘‘நான் வேண்டாமா?’’ ‘‘அன்பு, நிறைவு, மகிழ்ச்சி – இவை எல்லாம் நீங்கள்தானே! உங்களை நினைத்து ஏங்குவதுதானே அந்தத் தேடலின் சாரம்? அந்தத் தேடலையே வரமாகக் கொடுங்கள்’’ அன்னையின் சிரிப்பொலி வெகுநேரம்வரை என் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.
|
|
|
|