|
நேர்மையான வழியில் நடந்து கொள்ள வேண்டும் என்பது அவ்வையின் வாக்கு. எல்லாக் காலத்திலேயுமே நேர்மையாக நடப்பவர்களை பரிகசிக்கும் போக்கு உண்டு. அது மகாபாரத காலத்திலே இருந்தது உண்டு. ஒருநாள் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தர்மரைக் கூப்பிட்டு இன்று மாலைக்குள் உன் கண்ணில் அகப்படுகின்ற பொல்லாதவர்களை, அதர்மக்காரர்களை அழைத்துக் கொண்டு வா என்றார். தர்மரும் காலையிலிருந்து மாலை வரை நகர் முழுதும் வலம் வந்தார். பின்னர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கி பகவானே! என் கண்ணுக்கு ஒரு அதர்மக்காரர் கூட கிடைக்கவில்லை என்று பணிவுடன் கூறினார். மறுநாள் பகவான் துரியோதனனைக் கூப்பிட்டு துரியோதனா இன்று மாலைக்குள் உன் கண்ணில்படும் நல்லவர்களை எல்லாம் கண்டறிந்து அழைத்து வா! என்றார். துரியோதனனும் மாலை வரை நகர் வலம் வந்துவிட்டு பகவானே என் கண்ணுக்கு ஒரு நல்லவனைக் கூட காலையிலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லையே என்றான். பகவான் சிரித்தார். இது தான் உலகம். இதயம் துாய்மையாக உள்ளவர்கள் எல்லாவற்றிலும் நல்லதையே காண்கின்றார்கள். இதெல்லாம் கலி காலமப்பா! காலம் கெட்டுப் போய்க் கிடக்கு. நல்லவனா நடந்தா கதைக்கு ஆகாது என்று புலம்புவர்களைப் பார்க்கிறோம். ஆனால் எந்தக்காலமாக இருந்தாலும் நல்ல வழியல் நடப்பவர்களுக்கு கடவுள் நிச்சயம் துணையாக இருப்பார். சமீபத்திலே இணையத்தில் வெளிவந்த, அதிகமாகப் பகிரப்பட்ட செய்தி இது. பச்சத்தண்ணி பத்மநாபன், ஆம், இது ஒரு அரசு ஊழியரின் பெயர். இவர் யாரிடமும் ஒரு டம்ளர் தண்ணீர் கூட வாங்கிக் குடிக்க மாட்டார். சிறந்த பணியாளர் என்று பெயர். இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். வரும் சம்பளத்தில் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். ஆடம்பர வசதி ஏதும் கிடையாது. இதனால் குழந்தைகளுக்கு வருத்தம் உண்டு. அப்பா உன்னைப் போல் ஆபீசில் வேலை பார்க்குற வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு வசதியாக இருக்கிறார்கள். நாம் மட்டும் இப்படி சாதாரணமாக உடுத்திக்கொண்டு வாடகை வீட்டில் இருக்கிறோமே! என்பார்கள். அதற்கு பத்மநாபன் சிரித்துக் கொண்டே கண்ணுகளா! நேர்மையா வாழ்ந்தா இப்படித் தான் இருக்க முடியும் என்று சொல்லுவார். காலங்கள் கரைந்தது. ஓய்வும் பெற்றுவிட்டார். கிடைத்த பென்ஷனில் சாப்பிடத்தான் முடிந்தது. மூத்த பெண் நல்ல கல்வி கற்று இருந்தாள். ஒரு பெரிய கம்பெனியிலே இண்டர்வியூ நடந்தது. வேலை கிடைத்தால் தான் நிச்சயம் நல்லது. நிறைய பேர் வந்திருந்தார்கள். நம்பிக்கை குறைந்தது இவளுக்கு. ஆயினும் தன் வரிசைக்காகக் காத்திருந்தாள். உள்ளே நுழைந்து சர்டிபிகேட்களை சமர்ப்பித்தாள். தந்தை பெயர் பத்மநாபனா? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் முதலாளி. இவளோ, வேண்டா வெறுப்பாக ஆமாம் என்றாள். உடனே அவர் எழுந்து நின்று பச்சத்தண்ணி பத்மநாபன் போன்றோரைப் பார்ப்பது என்பது மிகவும் கடினம். இந்தக் கம்பெனி உருவாக அவரே முக்கிய காரணம். அரசாங்கத்தின் அனுமதியைப் பெற நான் அலைந்த போது, போதிய உதவிகளைப் செய்து, பைசா கூடப் பெற்றுக் கொள்ளாமல் அனுமதி பெற்றுத் தந்தார். அதே சீட்டில் வேறொருவர் இருந்திருந்தால் எத்தனையோ லட்சங்களைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள். வேலை முடியவும் வருடக் கணக்கு ஆயிருக்கும். ஆனால் உங்கள் தந்தையோ ஏதும் பெறாமல் பெரிய உதவி செய்தார். இந்த வேலைக்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறது. ஆயினும் உங்கள் தந்தைக்கு நான் ஏதும் செய்ய முடியவில்லையே எனப் பலநாள் வருந்தி இருக்கிறேன். எனவே இப்போதே நீங்கள் இந்த வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள் என்றார். இந்தப் பெண்ணிற்கு அப்போது தான் நேர்மையின் மதிப்பும், அதனை உயிராகக் கடைப்பிடித்த தந்தையின் மதிப்பும் இமயம் போல் உயர்ந்தது. அவளை அறியாமல் கண்ணீர் பெருகியது. நேர்மை எப்போதும் வீணாகாது என்பதை உணர்ந்தாள். இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் நேர்மையான வழி தான் வெற்றி பெறும். நிலைத்து நிற்கும். ஒரு பலே திருடன் இருந்தான். அவன் திருடுவதை யாராலும் கண்டுபிடிக்க இயலாது. ஆயினும், அவன் மனம் நிம்மதியாக இல்லை. ஒருநாள் தற்செயலாக ஒரு சாதுவை சந்தித்தான். ஐயா! நான் ஒரு திருடன். நான் திருடுவதை யாராலும் கண்டுபிடிக்க இயலாது. அதனால் பிழைத்து, வாழ்ந்து வருகிறேன். இருப்பினும் என் மனம் அமைதியாக இல்லை. எனவே தாங்கள் தான் மனம் அமைதி பெற எனக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினான். அவரும் புன்னகைத்தவாறே அப்பா! உன்னால் உன் திருட்டுத் தொழிலை விட முடியுமா? எனக் கேட்டார். அப்பொழுது அவன் பதறிக் கொண்டே என்னால் முடியாது ஐயா! வேற பிழைப்பு தெரியாது. தெரிந்தாலும் இனி மேல் உடல் வளையாது. பொண்டாட்டி, புள்ள, குட்டியைக் காப்பாத்தணும், நானும் நிம்மதியா இருக்கணும். அதுக்கு வழிசொல்லுங்க என்றான். சாது அவனைப் பார்த்துச் சொன்னார். அப்பா உன்னிடம் உண்மையைச் சொல்லுகிற நல்ல குணம் இருக்கு. எனவே கவலைப்படாதே! மனம் அமைதி வேண்டுமானால் ஏதேனும் ஒரு நல்ல குணத்தை நீ பின்பற்ற வேண்டும் என்றார். சரி ஐயா! என்ன செய்ய வேண்டும் என்றான் ஆர்வத்துடன். உடனே சாது உன்னால் பொய் சொல்லாமல் இருக்க முடியுமா? என்று கேட்டார். அதற்குத் திருடனோ, ஐயா திருடாமல் தான் இருக்க முடியாது. பொய் சொல்லாமல் இருக்கலாம் ஐயா! என்றான். வணங்கி விடைபெற்றான். மறுநாள் அரண்மனைக்குத் திருடப்போனான். மன்னர் மாறுவேடத்தில் அரண்மனையிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்தார். இவனைப் பாத்ததும் நீ யார்? என்று கேட்டான். இவன் தான் பொய் சொல்லக் கூடாது என்ற உறுதியோடு இருக்கிறானே! மேலும் மாறு வேடத்தில் இருப்பவனை யார் என்றும் தெரியாது. உடனே நான் ஒரு திருடன் என்றான். மன்னருக்கு ஆச்சர்யம். பரவாயில்லையே உண்மையைப் பேசுகிறானே என மன்னரைப் பார்த்து நீ யாரெனக் கேட்டான். அதற்கு மன்னரோ நானும் ஒரு திருடன் தான் என்றான். அப்படியானால் வா! இரண்டு பேரும் சேர்ந்து திருடுவோம் என்றான் திருடன். மன்னரும் ஒப்புக்கொண்டார். மெல்ல மெல்ல அரண்மனையின் கஜானாப் பகுதிக்குள் நுழைந்தார்கள். மன்னர் சொன்னார் எனக்கு ஏற்கனவே பரிச்சயம் இருக்கிறது என்றார். எனவே பெட்டகத்தை உடைப்போம் என்றார். உடனே திருடனும் பின்னால் போனான். மன்னர் தானே பெட்டகத்தை திறந்தார். அதில் விலை மதிப்பில்லாத மூன்று வைரங்கள் இருந்தன. திருடன் சொன்னான், தொழிலிலும் நியாயம் வேண்டும். எனவே உனக்கு ஒன்று, எனக்கு ஒன்று அரண்மனைப் பெட்டகத்திலேயே ஒன்றை வைத்துவிடுவோம் என்றான். மன்னரும் சரி எனத் தலையாட்டினார். பாதுகாப்பாக வெளியே வந்தார்கள். மன்னர் உன் வீடு எங்கே இருக்கிறது எனக் கேட்க திருடனும் உண்மையான முகவரியைச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். மறுநாள் அரச சபை கூடியது. அரண்மனை கஜானாவில் பாதுகாப்புடன் இருந்த வைரங்களைக் காணவில்லை. யார் எடுத்தது என கண்டறிய பிரபல திருடர்களை எல்லாம் பிடித்து வந்திருந்தனர். மன்னர் அப்போது மந்திரியை அழைத்து, நீங்கள் போய் எத்தனை வைரங்கள் காணாமல் போய் இருக்கிறது எனப் பார்த்து வாருங்கள் என்றார். மந்திரியும் போய் பெட்டகத்தைத் திறந்து பார்த்தார். அதில் ஒரு வைரம் மட்டும் இருந்தது. அவருக்கு விலை மதிப்பற்ற அந்த வைரத்தின் மீது ஆசை வந்தது. இருந்த ஒரு வைரத்தை எடுத்து தனது பையில் போட்டுக் கொண்டு, மன்னரிடம் வந்து மன்னா பெட்டகத்தில் ஒரு வைரம் கூட இல்லை. காலியாக உள்ளது. திருடன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான் எனக் கூறினார். மன்னரும் சிரித்துக் கொண்டே திருடன் வீட்டிற்கு ஆள் அனுப்பி அவனைக் கூட்டி வரச் சொன்னார். திருடன் இழுத்து வரப்பட்டான். மன்னரின் முன் நின்றான். இரவு திருடியதை ஒப்புக் கொண்டான். பெட்டகத்தில் இருந்து தான் ஒன்றும், தன்னோடு வந்த மற்றொரு திருடனுக்கு ஒன்றும், கொடுத்துவிட்டு மீதம் ஒன்றை பெட்டகத்திலேயே வைத்துவிட்டேன் என்றான். உடனே மந்திரி பதறிப்போய், இவன் பொய் சொல்லுகிறான். பெட்டகத்தில் ஒன்றும் இல்லை. இவனைத் துாக்கில் இடுங்கள் என்றார். திருடன் திகைத்தான். உடனே அரசரோ! மந்திரியாரே! நேற்று இரவு இவனுடன் திருடிய மற்றொரு திருடன் நான் தான். அவன் திருடனாக இருந்தாலும், நேர்மையாகவும், உண்மை பேசுபவனாகவும் இருக்கிறான். மூன்றாவது வைரத்தைத் திருடியது நீங்களே! எனவே உண்மையான குற்றவாளி நீங்கள் தான் என்று மன்னர் கூற, மந்திரி தலைகுனிய, பின் சிறையில் அடைக்கப்பட்டார். திருடனைப் பார்த்து அன்பனே! உனது உண்மை பேசும் குணம் எனக்குப் பிடித்து இருக்கிறது. எனவே நீ அரண்மனையிலேயே என்னுடன் இரு! என வைத்துக் கொண்டார். தனக்கு நல்வழி காட்டிய சாதுவை மனதால் வணங்கினான் திருடன். பொய்யாமை எனும் அறத்தைப் பின்பற்றினால் வேறு அறம் தேவையில்லை என்கிறார் வள்ளுவர். இன்றும் உலகம் கெட்டுப் போய்விட்டது எனப் புலம்பினாலும், ஒவ்வொரும் கூட தனக்கு நேர்மையானவர்களே தேவை எனத் தேடிக் கொண்டிருக்கின்றனர். காரணம் நேர்மையின் மதிப்பு என்றுமே பெரிது தான். மகாபாரதப் போர் களத்தில் அச்வத்தாமா என்ற யானையைக் கொன்றுவிட்டு அச்வத்தாமாவைக் கொன்று விட்டோம் எனச் சொல்லுங்கள் என தர்மரிடம் கிருஷ்ணர் சொல்லச் சொன்னார். ஆனால் தர்மரோ உயிர் போவதாக இருந்தாலும், போரில் தோல்வியே ஏற்பட்டாலும் சரி நான் பொய் சொல்லமாட்டேன் என தர்மர் உறுதியுடன் இருந்தார். ராமாயணத்தில் ராவணனுடன் போர் தொடங்குவதற்கு முன்னர் முறைப்படி அங்கதனைத் துாது அனுப்புகின்றார் ஸ்ரீராமர். போர்க்களத்தில் ஆயுதம் ஏதுமின்றி வெறும் ஆளாக நின்ற ராவணனை ஆயுதமில்லாதவனுடன் போர் புரியமாட்டேன். எனவே இன்று போய்விட்டு ஆயுதங்களுடன் நாளை போருக்கு வருவாயாக என ஸ்ரீராமர் உறுதியுடன் கூறுகின்றார். ஆயுதமின்றி நிற்கும் ராவணனை அழிக்க வாய்ப்பு ஏற்பட்டும் கூட தர்மத்தில் இருந்து ஒரு நுால் கூட விலகாமல் நமக்கு வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். எனவே தான் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் நம் இரு கண்களாகப் போற்றி வருகிறோம். காலம் எவ்வளவு வேண்டுமானாலும் கெட்டுப் போகலாம். நாம் நேர்மையானவர்களாகவே இருக்க வேண்டும். அதற்கான பயன் எப்போதும் உண்டு. உண்மையைச் சொல்வதற்குப் படிப்பு எதற்கு, எல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பு எதற்கு, கண்கண்ட காட்சிக்கு விளக்கு எதற்கு, நெஞ்சில் கள்ளமில்லாதவர்க்கு பயம் எதற்கு என்பார் கவியரசர் கண்ணதாசன். கிராமங்களிலே கூட மடியிலே கனம் இருந்தால் தானே வழியிலே பயம் இருக்கும் என்பார்கள். நேர்மையாக வாழ்பவர்கள் ஏழ்மையாக வாழலாம். ஆனால் அவர்கள் நெஞ்சிலே எப்போதும் அமைதியும், ஆனந்தமும் குடிகொண்டிருக்கும். நம் தலைமுறைக்கு நேர்மையின் பெருமையை எடுத்துச் சொல்வோம். போலியாக அலங்கார விளக்குகளை விட பூஜை அறையில் இருக்கும் அழகான அகல் விளக்கிற்கு மதிப்பு என்றுமே உண்டு. காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். ஆனால் நாம் என்றும் நேர்மையின் தடத்தில் இருந்து மாறக் கூடாது. நேர்மையே நன்மை என்பதை ஒவ்வொருவர் மனமும் சொல்லும். வாருங்கள் என்றும் நேர்மையின் பாதையிலே பயணிப்போம்.
|
|
|
|