Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அகத்தியர் அளித்த ஆறுதல்
 
பக்தி கதைகள்
அகத்தியர் அளித்த ஆறுதல்


முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். பிரம்மா, சிவன் முதலான கடவுளர்களும் அதே மனநிலையில்தான் இருந்தனர். இந்திரலோகம், கயிலாயம், வைகுந்தம் எல்லாம் காலியாக இருந்தன. ஆமாம், அந்தந்த உலகங்களிலிருந்து தேவர்கள் எல்லோரும் வந்து குழுமிவிட்டார்கள்.
எங்கே?
யுத்த களத்தின் நேர் மேலாக வானத்தில்! ராவணனுக்கும், ராமனுக்கும் இடையே நடந்த போர் அது. பூலோகத்தில் நடக்கும் போரில் வெற்றிமாலை ராமன் கழுத்தில் விழவேண்டுமே என்ற ஆதங்கம் எல்லோர் முகங்களிலும் பரவியிருந்தது.
அவன் வெற்றியடையும் தருணத்தில் பூமாரி பொழிய வானுலகமே காத்திருந்தது.  ஆனால், இதென்ன, ராமனுடைய தாமரை வதனம் லேசாக இருண்டது போலத் தெரிகிறதே... ஏதோ இயலாமையால் ஆட்கொண்டது போல...
ராமன், மகாவிஷ்ணுவின் அவதாரம்தான். ஆனால் மனித குணங்களுடன், தர்மத்தை நிலைநாட்ட வந்தவன் அவன். இயல்பான மனித நடவடிக்கைகளை மேற்கொண்டவன். அதர்மத்தைக் கண்ணுறும்போது மட்டும் தெய்வ பலத்துடன் எதிர்க்கத் தயங்காதவன். அவனுக்கும் சோதனைகள் ஏற்பட, அவற்றை மனிதாபிமானத்தோடு எதிர்கொண்டவன். எந்த சந்தர்ப்பத்திலும் அனாவசியமாகப் பிறரைத் துன்புறுத்த விரும்பாதவன். அந்த மனிதப் பிரயத்தனமாக இந்தப் போரில் அவன் இறங்கியிருக்கிறான்.
எந்த சந்தர்ப்பத்திலும் சலனப்படாதவன்தான் ராமன். உயர்வோ தாழ்வோ, புகழோ பழியோ, சந்தோஷமோ துக்கமோ எப்படிப்பட்ட சூழலானாலும் அவன் மனம் தடுமாற்றம் கண்டதில்லை.
இப்போது அவன் தயங்குகிறான். காரணம், அவன் மனதுக்குள் நிழலாடும் பழைய நினைவுகள்தான்....
 ‘தாடகையைக் கொன்றது முறையில்லையோ; என் உள்மனதில் அந்த ‘அதர்மம்’ - ஒரு பெண்ணைக் கொன்ற பாவம் - அப்படியே தங்கியிருக்கிறதோ, அதுதான் இப்போது முக்கியமான கட்டத்தில் என்னை தளர்வடைய வைக்கிறதோ!’
அடுத்தது, விஸ்வாமித்திரரின் யாகத்தைக் குலைத்த இரு அரக்கரில் சுபாகுவை வதைத்து மாரீசனை கடலாழத்தில் அமிழ்த்தியது.. எண்ணி எண்ணியே மாய்ந்துபோனான் ராமன். இந்த எண்ணக் குழப்பமும் அவனை பலவீனப்படுத்தியிருந்தது.
மிதிலாபுரியில் ஜனகரின் சிவதனுசை முறித்த தன் பராக்கிரமம் எங்கே போயிற்று? வெறும் கால் துாசாலேயே கல்லாகிக் கிடந்த அகலிகைக்கு உயிர் கொடுக்க முடிந்திருக்கிறதே. அந்த கால் துாசுக்கு இருந்த மகிமையெல்லாம் இப்போது வடிந்துபோய் விட்டதே, ஏன்?
அவனுடைய உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்த இன்னொரு விஷயம் - வாலிவதம். ஒரு கோழையாக, நேருக்கு நேர் நில்லாமல், மறைந்திருந்து, அதுவும் அவன் சுக்ரீவனுடன் போர் புரிந்து கொண்டிருந்தபோது நேர்மையற்ற முறையில் கொன்றதுதான் எவ்வளவு அநியாயமானது!
தன் ஒரே அம்பால் வெவ்வேறு தொலைவுகளில் இருந்த ஏழு மராமரங்களைத் துளைத்து வீழ்த்திய தன் ஆற்றல் இப்போது எங்கே போயிற்று?
தனக்காகப் போரிடும் நல்லவர்களும் அநியாயமாகக் காயப்படவோ, இறந்துபோகவோ நேருகிறதே என்ற ஆழ்ந்த வருத்தம்தான் இந்த அயர்ச்சிக்குக் காரணமா?
அவனுக்காகத் தன்னை வருத்திக் கொண்டவர்கள்தான் எத்தனை பேர்!
தன்னுடைய விமானத்தில் சீதையைக் கடத்திச் சென்றான் ராவணன். அப்போது இந்த அநீதியைப் பார்த்து கழுகுகளின் அரசனான ஜடாயு பதைபதைத்தபடி பறந்து வந்தான். தன் கூரிய அலகால், நகங்களால் ராவணனைப் பிறாண்டினான். சீதையை அவன் விடுவிக்க போராடினான். ஆனால், ராவணனின் நீண்ட வாளால் சிறகுகள் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக வீழ்ந்தானே ஜடாயு!
சீதையின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ள போன அனுமனுக்கு வாலில் தீ வைக்கப்பட்டதே; எத்தனை வானரப் படைகள் தம் இன்னுயிரை இழந்தன! சேது பாலம் அமைக்க கடலரசனையும் கோபிக்க வேண்டியிருந்ததே....
சோர்ந்துபோய் உட்கார்ந்துவிட்ட ராமனைப் பார்த்து மற்றவர்கள் பதைபதைத்தனர். லட்சுமணன் அனலில் இட்ட புழுவாகத் துடித்தான். விபீஷணன், சுக்ரீவன், அனுமன் எல்லோரும் குழம்பினர். ஏன், ஏன் இப்படி? ராமனுக்கு என்னாயிற்று?
அப்போது அங்கே வந்தார் அகத்திய முனிவர். சூழ்நிலையைப் புரிந்துகொண்டார். ராமனை நெருங்கினார். அமர்ந்திருந்த அவனது தோளை ஆதுாரத்துடன் பற்றினார். ‘‘உன் வருத்தம் புரிகிறது ராமா. உன் மனஓட்டத்தில் அணிவகுக்கும் சம்பவங்கள் எல்லாம் அந்தந்த சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மேற்கொண்ட நியாயமான நடவடிக்கைகள்தான். அதில் அதர்மம் என்று சொல்லி வருத்தப்பட எதுவுமில்லை. அதனால் நடந்த விஷயங்களை சிந்தித்துக் கொண்டு, நடக்கவேண்டிய மிகப் பெரிய, காலத்தின் கட்டாயமான நிகழ்ச்சியில் ஈடுபட முடியாதவனாக இருக்கிறாய். உடல் பலவீனம் என்றால் ஊட்டச்சத்து அளித்து பலமாக்கலாம். உள்ளம் பலவீனம் என்றால் வீரியமிக்க ஸ்லோகங்களால்தான் மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று அவனுக்கு ஆதரவு தெரிவித்தார்.
ராமன் நிமிர்ந்தான். என்ன ஸ்லோகம் அது?
ஏற்கனவே தன்னையும் தம்பி லட்சுமணனையும் விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றபோது, ராஜகுலத் தோன்றல்களான தங்களுக்கு பசியோ, சுக இழப்போ
தோன்றாதிருக்கவும், முகப் பொலிவோ, உடல் நலமோ, இயல்பான பராக்கிரமோ எதுவும் குறையாதிருக்கவும் ஒரு மந்திரத்தை உபதேசித்திருந்தார். ‘பலா, அதிபலா’ என்ற அந்த மந்திரத்தை உச்சரித்து, புல்வெளியையும், கட்டாந்தரையையும் மலரனைய மிருதுவான மஞ்சமாக பாவித்த அனுபவம் நினைவுக்கு வந்தது. அதேபோல பசியோ, களைப்போ தோன்றாதவகையில் அந்த மந்திரம் உடலுக்கும், உள்ளத்துக்கும் வலுவேற்றியதும் மனத்திரையில் தோன்றியது.
இப்போது அகத்தியர் ஆறுதலளிக்க வந்திருக்கிறார்.  ‘ராமா, நீ சூர்யகுலத் தோன்றல். ரவிகுல திலகன். உன் வம்சத்தைத் தழைக்கச் செய்வதே ஆதவன்தான். அவன் புகழ்பாடும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தை  சொல்கிறேன். அதை உளமாற செவிமடுத்து, மனதில் இருத்திக் கொள். முதலில் உன் மனப்போரில் நீ வெற்றியடைவாய். அதன் பிறகு ராவண வதம், துாசியை ஊதி நீக்குவது போல எளிதாகிவிடும்’’ என்ற அகத்தியர் அந்த ஸ்லோகத் தொகுப்பை ராமனுக்குக் கற்பித்தார்.
‘ராம ராம மஹாபாஹோ ஸ்ருணு குஹ்யம் ஸனாதனம்
யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி’
என்று ராமனை அழைத்து, ‘இந்த யுத்தத்தில் அனைத்து எதிரிகளையும் எந்த மந்திரத்தால் அழிப்பாயோ அப்படிப்பட்ட ரகசியமானதும், வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதுமான ஸ்லோகங்களைச் சொல்கிறேன், கேட்பாயாக’ என்று ஆரம்பித்தார்.
பிறகு, ‘ஆதித்ய  ஹ்ருதயம் புண்யம் ஸர்வஸத்ரு வினாஸனம்
ஜயாவஹம் ஜபேன் நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்’
என்று தொடங்கி,     
‘அத ரவிரவதன்நிரீக்ஷ்ய ராமம்
முதிதமனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண: மி
நிஸிசரபதிஸம்க்ஷயம் விதித்வா
ஸுரகணமத்யகதோ வசஸ்த்வரேதி மிமி’
என்று முடியும் 31 ஸ்லோகங்களில் சூரியனின் பேராற்றலை ராமனின் மனதிற்குள் விதைத்தார் அகத்தியர்.  
அதைக் கேட்கும்போதே ராமனுக்கு மனசு கழுவிவிட்டாற்போலிருந்தது. ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை உளமாற உச்சரித்தான். அந்த ரவிகுல திலகனின் அகத்துக்குள் ஆதித்யன் புகுந்தான். அவனுக்குள் புதைந்திருந்த ஆற்றலை பிரகாசிக்கச் செய்தான். எழுந்து நிமிர்ந்து நின்ற ராமனின் கண்களிலிருந்து புறப்பட்ட ஒளியில் மனதை வருத்திய சம்பவங்கள் பனியாக உருகி மறைந்தன. அவனது கரத்தில் தோன்றிய புதிய வலிமையை அவனது வில் உணர்ந்துகொண்டு, அதுவும் நிமிர்ந்து உறுதியோடு நின்றது.
அதோ எதிரே அகம்பாவத்துடன் நின்றிருக்கிறான் ராவணன். அவனை எதிர்க்கத் தயாரானான் ராமன். அதே சமயம் விண்ணிலிருந்து இந்தப் போரை கவனித்துக் கொண்டிருந்த இந்திரன் தன் தேர்ப்பாகனான மாதலியை அழைத்து தன் தேரை எடுத்துச் செல்லும்படியும், அதில் ராமனை இருத்தி, ராவணனுக்கு எதிரான போரில் உதவுமாறும் ஆணையிட்டான்.
அதேபோல வந்த மாதலி விபரம் சொல்ல, அவன் பெரிதும் மகிழ்ந்து அத்தேரில் ஏறி ராவணனை எதிர்த்தான் ராமன். கடுமையான போர். தான் ஏவும் அஸ்திரங்கள் எல்லாம் பலனளிக்காது போவதோடு ராவணனின் ஒரு தலையை கொய்தால் அது மீண்டும் முளைத்துவிடும் அதிசயம் கண்டு வியந்தான் ராமன். இந்த மாய வஞ்சகனை நிரந்தரமாக வீழ்த்தும் வழி எது என்று யோசித்தான். உடனே தண்டகாரண்யத்தில் தனக்கு அகத்தியர் வழங்கிய பிரம்மாஸ்திரம் நினைவுக்கு வந்தது.
இப்போது தனக்கு ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்து மனதை உறுதியாக்கிய அந்தக் குறுமுனி தனக்கு எப்போதேனும் தேவைப்படும் என்று தீர்க்கதரிசனமாகக் கருதி கொடுத்து வைத்திருந்தது அது! அதை எடுத்து வீச, ராவணன் நெஞ்சை அது ஊடுருவி, அவனை சின்னா பின்னமாக்கி உயிரை பிரித்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar