Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பெரியாரைத் துணைக் கொள்
 
பக்தி கதைகள்
பெரியாரைத் துணைக் கொள்


வாழ்வின் பயணத்தில் துணை என்பது அவசியமாகிறது. எல்லாச் சூழலிலும் ஏதாவது ஒரு வகையில் மனிதனுக்குத் துணை தேவைப்படுகிறது. அந்தத் துணையே அவனது செயலின் வெற்றிக்கும், தோல்விக்கும் அடிப்படையாக அமைகிறது. செயல்களை நிறைவேற்றவே துணை தேவையெனில் வாழ்வின் முன்னேற்றத்திற்கு துணை அவசியமல்லவா? எனவே தான் அவ்வையாரும் அறிவு சான்ற ஒழுக்கசீலர்களை வாழ்வில் துணையாகக் கொள்வாயாக என்றார்.
    வாழ்க்கையை நமது சனாதன தர்மம் என்னும் ஹிந்து மதம் நான்கு பிரிவுகளாக பிரிக்கின்றது. முதலில் கல்வி கற்கும் பருவம் (பிரம்மச்சரியம்), இரண்டாவது திருமண வாழ்க்கைப் பருவம் (கிரகதஸ்தாச்ரமம்), மூன்றாவது துறவு நிலைக்குத் தயாராகும் பருவம் (வானப்பிரஸ்தம்), நான்காவது துறவு நிலை (சந்நியாசம்) ஆகும்.
    கல்வி கற்கும் பருவத்தில் பழகும் நண்பர்கள்தான் பெரும்பாலும் வாழ்க்கைப் பாதையையே நிர்ணயம் செய்கின்றனர். ஒழுக்கமுள்ள, படிப்பில் மட்டுமே கவனமுள்ள, குடும்பத்தின் சூழ்நிலையை அறிந்த நண்பர்கள் வாய்த்துவிட்டால் நிச்சயமாக எதிர்காலம் சிறப்பானதாக அமைந்து விடும். அதுவும் கடவுளின் திருவருளே. ஆயினும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் அறிவியல் வளர்ச்சி, கல்வி கற்பதற்குள்ளேயே புகுந்துவிட்ட ஸ்மார்ட் போன் போன்றவை சென்ற தலைமுறை மாணவர்களை விட இந்தத் தலைமுறை மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால் ஏற்படும் கவனச் சிதறல்கள் இன்றைய இளம் தலைமுறையை வெகுவாக பாதிக்கிறது எனச் சொல்லலாம். இந்தத் சூழலிலே அவற்றிலேயே வாழ்ந்து கொண்டு நல்லவற்றைத் தேர்ந்தெடுக்கும் நல்ல நண்பர்களுடைய துணை வரமாகவே அமைகிறது. இதில் பெற்றோருக்கும் பெரும் பங்கு இருக்கிறது. அவர்களுடன் நேரங்களைச் செலவு செய்து வழிநடத்த வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
    இத்தனைக்கிடையிலும் பொறுப்புமிக்க, சாதிக்க வேண்டும் என்ற எண்ணமுடைய பலகோடி இளைஞர்களையும் நாம் பார்க்க முடிகிறது என்பதே மகிழ்வான செய்தி. திருமண வாழ்க்கைப் பகுதியை திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை நலம் என்றே கூறுகிறார். துணை, நலமாக அமைந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி தான். இதிலும் கூட நிறைய சவால்களை இன்றைக்குச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கணவன், மனைவி என இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் வீட்டில் இருக்கின்ற நேரம் குறைவாகத் தான் இருக்கிறது. அதிலும் கணவன் ஒரு ஊரிலும், மனைவி ஒரு ஊரிலும் பணிபுரிந்தால் வார இறுதி நாட்கள் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. அந்த நேரத்தையும் கூட ‘டிவி’யும், செல்போனும் திருடிக் கொள்கின்றன. ஒருவர் நொந்து போய் சொன்னார் என் மனைவி வெளியில் இருந்தாலும் நாட் ரீச்சபிள், வீட்டில் இருந்தாலும் நாட் ரீச்சபிள் என்று.
    இத்தகைய சூழலில் நல்லோர் இணக்கம் மிக அவசியமாகிறது. வேலைப் பளுவில் ஏற்படுகின்ற மன அழுத்தம், உடற்சோர்வு, மனத்தாங்கல்களைப் போக்கி நேர்மறையிலே நம்மை வழி நடத்திட நல்லோர் இணக்கம் பெரிதும் உதவும். கோயிலில் நடைபெறும் கூட்டு வழிபாடு, மாதம் ஒருமுறை கோயில்களைத் துாய்மை செய்யும் உழவாரப் பணி, வசதி குறைந்தவர்களுக்கு ஓய்வு நேரத்தில் கல்வி கற்றுக் கொடுக்கும் பணி, முதியோர்களுக்கு சேவை செய்யும் பணி என நம்மை இது போன்ற குழுக்களின் மூலம் மனமாற்றம் செய்து கொண்டால் மீண்டும் திங்கட்கிழமை வரும் போது உடலும், மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
    அதிக நேர உறக்கம், அழுது வடியும் சீரியல்கள், மனதை கீழே தள்ளும் சினிமாக்களோடு வார இறுதி நாட்கள் கழியுமானால் திங்கட்கிழமை யாரைக் கண்டாலும் எரிந்து விழுகின்ற மனோபாவம் மேலோங்கும். நல்லோர் இணக்கத்துடன் செய்கின்ற அறப்பணிகள் நமக்கு நம்பிக்கை, ஆசீர்வாதங்களை பெற்றுத் தரும். பின்னர் சொன்ன வாழ்க்கை முறை சமுதாய அச்சத்தையும், மன அழுத்தங்களையுமே பரிசாகத் தரும். நாம் மட்டுமின்றி நம் குழந்தைகளையும் கூட நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூட்டு வழிபாடு, அறப்பணிகள் என ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் எதிர்காலத்திற்கும் பெரிய வழிகாட்டுதல்களாக அமையும்.
    மூன்றாவது நிலை வானப்பிரஸ்தம் என்றும் துறவுக்குத் தயாராகும் நிலை. ஆத்தாடி துறவா.... என அலறுவது கேட்கிறது. துறவு என்றவுடன் காவி உடை மட்டுமே நினைவிற்கு வருகிறது. இந்த ஐம்புலன்களின் ஆசைகளில் இருந்து, தேவைகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளுதல் சுலபமா என்ன? இன்றைய சூழல் என்ன? பொருளாதாரத் துரத்தலுக்காக ரிடையர் ஆன பின்பும் மீண்டும் பணியில் சேர்ந்து ஓடுகிறோம். நகரங்களில் அவசியமாகிவிட்ட ஒன்றாகவும் ஆகிவிட்டது. ஆயினும் குடும்பப் பொறுப்புகள் நிறைவேறிவிட்டால் ஓரளவு வாழ்க்கை அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ள வழி தேட வேண்டும். முதலில் பேசுவதைக் குறைக்க வேண்டும்.
    குறிப்பாக பிறர் பற்றிப் பேசுவதைக் குறைக்க வேண்டும். அதிலேயே தொண்ணுாறு சதவீத சிக்கல்கள் குறைந்து விடும். எதிலும் நிறைகளையே பார்த்துப் பழக வேண்டும். ஒரு அறிஞரிடம் நண்பர் ஒருவர் மற்றொரு நண்பரைப் பற்றிக் குறை சொல்ல வந்தார். அறிஞர் கேட்டார் இதனால் நமக்கு ஏதாவது நன்மை உண்டா? இல்லை என்றார். இதனால் யாரைப் பற்றிக் குறை சொல்கிறோமா அவருக்கும் ஏதாவது நன்மை கிடைக்குமா? எனக் கேட்டார் அதற்கு இல்லை என்றார். அடுத்ததாக இதனால் சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை உண்டா? என்றும் கேட்டார். அதற்கும் இல்லை என்றார். அறிஞர் கேட்டார் பிறகு ஏன் இந்தப் பேச்சை விடுங்கள். நன்மை தரும் பேச்சையே பேசுங்கள் என்றார்.
    இதுதான் பெரியோர்களை துணை கொள்வதால் ஏற்படும் நன்மை ஆகும். பொறுப்புக்களை உரிய காலத்தில் அடுத்த தலைமுறையிடத்தில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை எளிமையாக வாழக் கற்றுக் கொண்டால் வயதான காலத்தில் வாழ்க்கை சுகமாக இருக்கும். எல்லாம் என்னைக் கேட்டுத் தான் செய்ய வேண்டும் என்ற நிலையிலிருந்து விலகி, வேலை நல்ல விதமாக நடந்து முடிந்தால் சரி என்ற மனோநிலைக்கு வந்துவிட்டால் வாழ்க்கை இனிமையானதாக மலரும். எல்லோருக்கும் எல்லாம் தெரியும். அப்படித் தெரியாவிட்டாலும், சூழ்நிலை வந்தால் பழகிக் கொள்வார்கள் என்னும் உன்னத தத்துவத்தை உணர்ந்தால் தேவையின்றி அட்வைஸ் செய்யும் பழக்கத்திலிருந்து விடுபடுவோம். அதுவே அமைதியான, நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
    கோடியில் ஒருவரே முறைப்படி ஐம்புலன்களை வென்று உலகியல் விஷயங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு துறவு நிலைக்குச் செல்கிறார். அத்தகையவர்களின் வார்த்தைகளே, உலக விஷயங்கள் என்னும் வழுக்குதல் நிறைந்த பாதையிலே ஊன்றுகோலாக நம்மைக் காப்பாற்றி வருகின்றன என்பது வள்ளுவம்.
    பெரியவர்களிடம் பேசினாலே ராமாயணம், மகாபாரதம், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என ஆரம்பித்து விடுகிறார்கள் எனப் புலம்புவது காதில் விழுகிறது. எதற்காக நாம் அவற்றை எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். கேட்கிறோம். ஸ்ரீராமர் சக்கரவர்த்தியாக இருந்தாலும் எத்தனை எளியவராக, பண்பாளராக, பணிவு நிறைந்தவராக, அன்பாளராக, எதிரியே வியந்து பாராட்டுபவராக இருந்தார் என்பதை உணர்ந்து அத்தகைய உயர்ந்த குணங்களை நம் வாழ்விலும் கடைப்பிடித்து முன்னேற வேண்டும் என்பதற்காகவே. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எப்படி எல்லாம் வாழ்வியல் நுணுக்கங்களை கற்றுத் தந்து வாழச் செய்கிறான் என்பதை மகாபாரதம் அனுதினமும் நமக்கு அள்ளி வழங்குகிறது. அறுபத்து மூவர் போல ஆழ்வார்கள் போல பக்தியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும். பிறர்க்கு உதவும், குணத்தையும், தர்மம் செய்யும் குணத்தையும்  பெற வேண்டும் என்பது வாழ்வியல் பாடங்கள். பிறரது அனுபவங்களைப் படித்துக் கேட்டு புரிந்து கொண்டு தம் வாழ்வைச் செம்மையாக்கிக் கொள்பவர்களே சிறந்த வாழ்வியலாளர்கள். தமது வாழ்வில் தாமே பணத்தையும், காலத்தையும் செலவு செய்து அனுபவங்களைப் பெறுவோம் எனச் சொல்பவர்கள் அனுபவங்களைப் பெறும் போது கிழவர்களாகி இருப்பார்கள். வழுக்கை விழுந்த பின்னர் கையிலே சீப்புக் கிடைத்தால் என்ன பிரயோஜனம் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
    நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள், அப்பர் சுவாமிகளின் திருவடிகள் ஒன்றிலேயே பக்தி செய்து, அவர் பெயரால் தொண்டுகள் பல செய்து சிவபெருமானின் பரிபூரணமான அருளுக்கு பாத்திரமானார் என்பது ஆன்மிக உலகம் அறிந்த செய்தி.
    ஒருநாள்  ராமானுஜர் திருப்பதியின் அடிவாரத்தில் தனது சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். நல்ல வெயில் காலம். அந்தப் பக்கம் ஒரு மோர் விற்கும் கிழவி வந்தாள். அவள் கொஞ்சம் கூட்டத்தோடு இருக்கும் இந்த சூழலைப் பார்த்து தனது மோரை முழுவதுமாக இங்கேயே விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்து அங்கேயே நின்று மோர் வேண்டுமா... மோர் எனக் கூவத் தொடங்கினாள். மாணவர்களின் கவனம் சிதறியது. மேலும் அவர்கள் முகத்திலும் மோர் குடித்தால் தேவலை என்ற மனநிலை உருவானது. மகானுக்குத் தெரியாதா என்ன? அவர் உடனே மோர் விற்கும் கிழவியை அழைத்து ஆளுக்கு ஒரு குவளை மோரைக் கொடுக்கும்படி சொன்னார். மோரைக் கொடுக்கும் போதே ராமானுஜரின் திருமுகத்தை நோக்கினாள். இவர் சாதாரணமானவர் அல்ல என்பதைப் புரிந்தது. மோர் முழுவதும் கொடுத்தாகிவிட்டது. மகான் கேட்டார் எவ்வளவு அம்மா காசு தர வேண்டும் என்று. அவள் உடனே அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி, சாமீ! பணமெல்லாம் வேண்டாம்! இந்தக் ஏழுமலையாணிடம் சொல்லி வைகுந்தம் வாங்கித் தாங்க என்றாள். மகான் அதிர்ச்சியுடன் அவளை நோக்கினாள். இரண்டு விஷயங்கள். இவளுக்கும் வைகுண்ட ருசி இருக்கிறதே மேலும் அது தான் நாம் அடைய வேண்டிய உயர்நிலை  என்பதை அறிந்திருக்கிறாளே என்று வியந்தார். மகிழ்ந்தார். ஆயினும் அம்மா! நான் சொன்னால் பெருமாள் தந்து விடுவாரா என்ன? அவர்தான் அருளிட வேண்டும் என்றார். மேலும் மோருக்குரிய பணம் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள் என்றார். கிழவியோ சாமீ நீங்க ஒரு சீட்டு எனக்கு சிபாரிசு பண்ணி எழுதிக்குடுங்க போதும் என்றாள். மகான் இவளின் பிடிவாதத்தையும், பக்தியையும் புரிந்து கொண்டு ஒரு ஓலை எடுத்து கிழவிக்கு வைகுந்தப் பிராப்தம் வழங்கிடப் பெருமாள் திருவருள் புரிய வேண்டும் எனப் பிரார்த்தித்து எழுதிக் கொடுத்தார். பலமுறை வணங்கிய கிழவி அதனைப் பெற்றுக் கொண்டு விறுவிறுவென மலை ஏறி அங்கிருக்கும் அர்ச்சகரிடம் கொடுத்தாள். அவர்கள் வாங்கிப் பார்த்தார்கள். ராமானுஜரே அவர் தம் கைகளால் எழுதிய ஓலைச் சீட்டு வணங்கிப் பெருமாள் பாதத்தில் சமர்ப்பித்தார்கள். என்ன அதியசம் உடனே வைகுண்டத்திலிருந்து ஒரு விமானம் இறங்கி வந்து கிழவியை அழைத்துக் கொண்டு சென்றது. கண்டவர்கள் குருவருளையும், திருவருளையும் எண்ணி வியந்தார்கள்.
    பெரியோரைத் துணையாகக் கொண்டால் வாழ்வில் எல்லாமே கிடைக்கும் என்பதற்கு இதை விடச் சான்று வேண்டுமா என்ன? இகபர சுகங்கள் அனைத்தும் பெற்றிட பெரியோர்களை என்றும் துணையாகக் கொள்வோம். எல்லா நலன்களையும் பெறுவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar