|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » கசந்த தாய்ப்பால் |
|
பக்தி கதைகள்
|
|
என் முன்னால் அமர்ந்திருந்த பெண் நகரின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கவுரி. வயது நாற்பது. பார்க்க அழகாக இருந்தாள். “எத்தனையோ உயிரக் காப்பாத்தியிருக்கேன். இப்போ என் உயிருக்கே ஆபத்து வந்திருச்சி” “சொல்லுங்க” “இருபது வருஷமா ஆஸ்பத்திரி நடத்தறேன். பத்து ரூம். எல்லா வசதிகளும் உள்ள ஆப்பரேஷன் தியேட்டர். லேப், ஓபி வசதி எல்லாம் இருக்கு. வெளி டாக்டருங்க எப்பவாவது வருவாங்க. நான் கல்யாணம் பண்ணிக்கல. தனியாத்தான் வாழறேன். நந்தினின்னு ஒரு பொண்ணுதான் ஆஸ்பத்திரி மேனேஜர். பேஷண்ட பாக்கறது, பில் போடறது, பேங்க் கணக்கு, ஆடிட்டர், இன்கம்டாக்ஸ் எல்லாம் அவ பொறுப்பு” “நந்தினி உங்களுக்குச் சொந்தமா?” “அதுக்கும் மேல. ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சவ. உயிர்த்தோழி. ஏழைக்குடும்பம். காலேஜ் படிக்க வசதியில்ல. அவகிட்ட எல்லாப் பொறுப்பையும் ஒப்படைச்சது பெரிய தப்பாப் போச்சி சார்” “என்னாச்சு?” “திடீர்னு ஒருநாள் வேலைக்கு வரல. போன் பண்ணா எடுக்கல. நெலகுலஞ்சிப் போயிட்டேன். பத்து நாளைக்கு முன்னால ஆடிட்டர் பெரிய குண்டத் துாக்கிப் போட்டாரு” “என்ன?” “நந்தினி கோடிக்கணக்குல என் பணத்தச் சுருட்டிட்டா சார். ஆஸ்பத்திரி கணக்க மாத்தி மாத்தி எழுதி, பேங்க்ல போடாத பணத்தப் போட்டதா கணக்குக் காமிச்சி என்னைச் சுத்தமா மொட்டையடிச்சிட்டா சார்’’ “போலீஸ்ல புகார்..” “கொடுத்திருக்கேன். சிக்கலான கேஸ்ன்னு சொல்றாங்க” என்ன சொல்வது? “இப்போ புதுசா இன்னொரு சிக்கல் வந்திருக்கு சார்” “என்ன?” “என் ஆஸ்பத்திரி இருக்கறது வாடகைக் கட்டடம். இருபது வருஷமா இருக்கேன். திடீர்னு கட்டடத்தோட சொந்தக்காரரு, “இடத்த வித்துட்டேன். ஆறு மாசத்துக்குள்ள காலி பண்ணுங்க” ன்னு சொல்லிட்டாரு” “நீங்களே ஒரு இடத்த வாங்கிக் கட்டிருங்க. உங்களுக்கு பேங்க்ல லோன் கெடைக்கும்ல?” “கையில இருந்த காசப் பூரா நந்தினி எடுத்துக்கிட்டுப் போய்ட்டாளே! எப்படி லோன் வாங்கறது? “மருத்துவம் செஞ்சிக் கிழிச்சதெல்லாம் போதும். பிச்சைக்காரியாச் செத்துப்போடின்னு பச்சைப்புடவைக்காரி சொல்லிட்டாளே! பச்சைப்புடவைக்காரிய நம்பினதுக்குப் பாழுங்கிணத்துல விழுந்திருக்கலாம்” “பிரார்த்தனை பண்ணிக்கறேன். ஏதாவது வழி தெரிஞ்சா கூப்பிடறேன்” கவுரிக்கு எழுந்திருக்க மனமில்லை. “கொரியர்” என்ற குரல் கேட்டு அறையைவிட்டு வெளியே ஓடினேன். ஒரு அழகான நடுத்தர வயதுப் பெண் நின்றுகொண்டிருந்தாள். கையில் ஒன்றும் இல்லை. “கொரியர்னு சொன்னீங்க?” “ஆமா. ஆனால் அது காகித வடிவில் இல்லை. அன்பின் வடிவில் இருக்கிறது. அவளிடம் போய்ப் பேசு. நம்பிக்கை கொடு. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்” பச்சைப்புடவைக்காரியை இனம் கண்டுகொண்டு விழுந்து வணங்கிவிட்டு உள்ளே ஓடினேன். இப்போது என்ன பேசவேண்டும் என்று புரிந்தது. “உங்க சோதனைக் காலம் இன்னும் முடியல, டாக்டர் கவுரி” “அது முடியறதுக்குள்ள என் கதையே முடிஞ்சிரும் போலயே!” “இப்படி வெறுத்துப் போய்ப் பேசாதீங்க. வேலைப்பளு காரணமா உங்க நோயாளிகள்கிட்ட காரணமில்லாம எரிஞ்சி விழுந்திருக்கீங்க. ஏற்கனவே இதய நோயோட வந்தவங்க இதயங்கள உங்க வார்த்தைகளாலக் குத்திக் கீறியிருக்கீங்க. அதனாலதான் இந்த சோதனை” “இப்ப நான் என்ன செய்யணும்?” “உங்க பணம் மொத்தமும் போனாலும் நீங்க தொழில் செய்யக் கட்டடம் இல்லேன்னாலும் உங்க படிப்பும் திறமையும் அனுபவமும் இன்னும் அப்படியேதான இருக்கு? அத நல்லபடியா பயன்படுத்திக்கங்க. உங்க நோயாளிங்ககிட்ட அன்பாப் பேசுங்க. யாருக்கும் வைத்தியம் செய்ய மறுக்காதீங்க. வாய்ப்புக் கெடைக்கும் போது காசில்லாதவங்களுக்கு இலவசமா மருத்துவம் செய்யுங்க” “அப்படியெல்லாம் செஞ்சா நந்தினி கொள்ளையடிச்ச பணம் திரும்பி வந்துரவா போகுது?” விரக்தியில் சிரித்தேன். “கொஞ்ச நாள் பணத்த மறந்துட்டு மன நிறைவுக்காக வேலை பாருங்க. எல்லார்கிட்டயும் அன்பு காட்டுங்க. நல்லதே நடக்கும்.” கவுரியின் முகத்தில் நம்பிக்கையின் ஒளி தெரியவில்லை. ஒரு வாரம் கழித்து கவுரிக்காகப் பிரார்த்தனை செய்தபடியே கோயிலுக்கு நடந்து கொண்டிருந்தேன். “கொய்யாப்பழம் வாங்கிக்கங்கய்யா. இன்னும் போணியே ஆகல” கொய்யாப்பழக்காரி அழகாக இருந்தாள். ஐம்பது ரூபாயை அவளிடம் நீட்டினேன். “பழம் வேண்டாம்மா. இத வச்சி ஏதாவது சாப்ட்டுக்கங்க.” “உலகத்திற்குப் படியளப்பவளுக்கே படியளக்கிறாயா?” தாயே என்று அரற்றியபடி காலில் விழுந்து வணங்கினேன். “இந்தப் பழத்தைச் சாப்பிடு. கவுரிக்கு என்ன நடக்கப்போகிறதென்று சொல்கிறேன்.” காட்சி விரிந்தபோது கவுரியின் மருத்துவமனை பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. நந்தினியின் இடத்தில் ஒரு புது நர்ஸ் சேர்ந்திருந்தாள். கவுரி தன் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுகிறாள். அவளுடைய நிதி நிலைமை இடம் கொடுக்காத போதிலும் பல ஏழை நோயாளிகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை செய்துகொண்டிருக்கிறாள். கட்டடத்தின் சொந்தக்காரர் காலி செய்யக் கொடுத்த கெடு முடிய இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது. அன்று காலை அவரே நேரில் வந்து அதை நினைவுபடுத்திவிட்டுப் போனார். கவுரி பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்தாள். “என்னைப் பிச்சைக்காரியாக்கிப் பார்க்கவேண்டும் என்பதுதான் உன் எண்ணமென்றால் அப்படியே நடக்கட்டும்” கவுரியின் கண்களில் கண்ணீர் பெருகியது. திடீரென மருத்துவமனை வாசலில் பரபரப்பு. ஒரு நோயாளியை ஆம்புலன்சிலிருந்து அவசரம் அவசரமாக இறக்கிக் கொண்டிருந்தார்கள். கவுரி வெளியே ஓடினாள். ஒரு முதியவர் அவள் காலில் விழுந்தார். “என் மக உயிர நீங்கதான் டாக்டரம்மா காப்பாத்தணும்” நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருந்த நோயாளியைப் பார்த்த கவுரிக்குப் பெரிய அதிர்ச்சி. நந்தினி. துரோகி. முதலில் வந்த கோபம் அடங்கியபின் நந்தினியை ஒரு நோயாளியாக மட்டுமே பார்த்தாள் கவுரி. அவளுக்கு மாரடைப்பு வந்திருக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டு ஒரு சக்தி வாய்ந்த ஊசியைப் போட்டாள். நந்தினிக்கு நெஞ்சு வலி குறைந்தது. ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தாள் நந்தினி. அவளுக்கு ராஜ வைத்தியம் செய்தாள் கவுரி. இரண்டாவது நாளே ஆஞ்சியோ செய்து ஸ்டெண்ட் வைக்கப்பட்டது. அன்று நந்தினியை வீட்டுக்கு அனுப்பப் போகிறார்கள். கவுரியைப் பார்க்கவேண்டும் என்று அடம் பிடித்தாள் நந்தினி. “கவுரி உன் பீஸ நேர்லய கொடுக்கலாம்னு...’’ “நந்தினி, நீ என் ஸ்டாப். உனக்கு பீஸ் கெடையாது” “நான் கொடுக்கவேண்டியது ஒண்ணு இருக்கு.” தலையணைக்கு அடியில் இருந்து ஒரு பெரிய காகித உறையை எடுத்துக் கொடுத்தாள் நந்தினி. “கவுரி, உனக்குத் துரோகம் பண்ணிச் சேத்த பணத்த வச்சித்தான் இந்தக் கட்டடத்த நான் என் தம்பி பேர்ல வாங்கினேன். இப்போ இத உன் பேர்ல மாத்திக் கொடுத்துட்டேன். ஒரு நாள் நாம ரெண்டு பேரும் நேர பத்திர ஆபீசுக்குப் போனா எல்லாத்தையும் முடிச்சிரலாம். இது உன் சொந்தக் கட்டடம் ஆயிரும். அதுபோக நான் திருடினதுல மிச்சம் இருந்த பணம் இருபது லட்சத்த உன் கணக்குக்கு மாத்திருக்கேன்” இப்பவாவது என்னை மன்னிப்பியா, கவுரி?” தோழிகள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு அழுதார்கள். “தப்பு செய்தவர்களை எப்படி தண்டித்தேன் பார்த்தாயா? நோயாளிகளிடம் எரிந்து விழுந்தவளை வறுமையில் துடிக்க வைத்தேன். துரோகம் செய்தவளை வலியில் துடிக்க வைத்தேன்” “யாரிடம் கதை அளக்கிறீர்கள்? கவுரியிடம் பணத்தை எடுப்பது போல் எடுத்து அப்படியே திருப்பித் தந்து விட்டீர்கள். நந்தினி செய்த துரோகத்திற்கு சரியான பிராயச்சித்தம் செய்ய வைத்து அவளுடைய அடுத்த பிறப்பு நன்றாக இருக்கும்படி பார்த்துக்கொண்டீர்கள். எங்களுக்குத் தொடர்ந்து அன்பென்னும் தாய்ப்பாலைப் புகட்டிக் கொண்டேயிருக்கிறீர்கள். ஆசையிலும் புலனின்பங்களிலும் அகப்பட்டுக் கொண்டிருக்கும் எங்களுக்குச் சில சமயம் அந்தத் தாய்ப்பாலே கசக்கிறது. நீங்கள் காட்டும் அன்பே தண்டனையாகத் தெரிகிறது” கலகலவென சிரித்துவிட்டு காற்றில் கரைந்தாள் காளீஸ்வரி.
|
|
|
|
|