|
கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் துாய்மைப்பணியாளராக பணிபுரிந்தார் ஒரு நபர். அந்த நிறுவனத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்குள்ள பணியாளர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய உத்தரவிட்டார். கம்ப்யூட்டர் பற்றி ஏதும் அறியாத துாய்மைப்பணியாளர், ‘தனக்கு கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாது’ என தெரிவித்தார். ‘‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்ப்போருக்கு மின்னஞ்சல் இல்லை என்றால் எப்படி?’’ என கோபித்த மேலாளர் உடனடியாக அவரை பணிநீக்கம் செய்து வெளியேற்றினார். வேலையை இழந்த அவர் செய்வதறியாமல் வருத்தமுடன் வீட்டுக்குப் புறப்பட்டார். சேமிப்பாக ரூபாய் ஐந்தாயிரம் மட்டுமே அவரிடம் இருந்தது. அதைக் கொண்டு மறுநாள் காலையில் சந்தைக்குச் சென்றார். கமிஷன் மண்டியில் வெங்காயத்தை வாங்கினார். கூடையைத் தலையில் சுமந்தபடி வீடு வீடாக அலைந்து விற்றார். ஓரளவு லாபம் கிடைத்தது. விடாமுயற்சியுடன் செயல்பட்டு மூன்றே ஆண்டுகளில் பெரிய வெங்காய வியாபாரியாக உருவெடுத்தார் அவர். இந்த சூழலில் ஒருநாள் வங்கி ஒன்றில் கணக்கு தொடங்குவது தொடர்பாக வங்கி ஊழியர் வியாபாரியைச் சந்தித்தார். விண்ணப்பத்தை பூர்த்தி செய்த ஊழியர், மின்னஞ்சல் முகவரியைச் சொல்லுமாறு வியாபாரியிடம் கேட்டார். அவரோ, ‘கம்ப்யூட்டர் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது; எனக்கு மின்னஞ்சல் முகவரி கிடையாது’ என பதிலளித்தார். ‘‘இமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு துாரம் நீங்க முன்னேறி இருக்கீங்களே... உங்களுக்கு கம்ப்யூட்டர், இமெயில் இன்டர்நெட் தெரிந்திருந்தால் எந்தளவுக்கு முன்னேறி இருப்பீங்க’ என்றார் ஊழியர். அதற்கு வியாபாரி, ‘அது தெரிஞ்சிருந்தா கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக இப்போதும் தரையை துடைத்துக் கொண்டிருப்பேன்’’ என்று சொல்லி சிரித்தார். வாய்ப்புகள் நம்மை விட்டு விலகிச் செல்லும் போது யாரும் வருத்தப்படத் தேவையில்லை. ஒருவேளை அதை விட நல்ல வாய்ப்பு நமக்காக காத்திருக்கலாம். ஏனென்றால் வாழ்க்கையே ஒரு புரியாத புதிர் தானே!
|
|
|
|