|
அது ஒரு பண்ணையார் வீடு. அங்கு வசித்த எலி ஒன்று இரை தேடப் புறப்பட்டது. அப்போது பண்ணையாரின் மனைவி பார்சல் ஒன்றை பிரித்துக் கொண்டிருந்தாள். தனக்கு விருந்து வேட்டை தான் என உற்றுப் பார்த்தது எலி. ஆனால் அதில் இருந்ததோ எலிப்பொறி. ஒரு கணம் மூச்சே நின்று விடும் போலிருந்தது எலிக்கு. கிலியுடன்,‘‘ கோழியக்கா... என் நிலையை கொஞ்சம் பாருங்க? என்னைப் பிடிக்க பொறி வாங்கிட்டாங்க’’ என அழுதது. ‘‘அதனால எனக்கென்ன வந்துச்சு’’ என்றது கோழி அலட்சியத்துடன். வருத்தமுடன் அங்கிருந்த ஆட்டுக்குட்டியிடம் சென்று சொல்ல அதுவும், ‘‘சரிதான்... எலிப்பொறியைக் கண்டு என்னையும் பயப்படச் சொல்றியா’’ எனக் கேட்டது. சற்று நேரத்தில் பொரித்த மீன் துண்டு ஒன்றை பொறியில் வைத்து விட்டு பண்ணையாரின் மனைவி உறங்கச் சென்றாள். அடுத்த பத்தாவது நிமிடம் ‘டமால்’ என்ற சத்தம் கேட்டது. மாட்டிக் கொண்டது எலி என்ற ஆவலில் பண்ணையாரின் மனைவி பொறியைத் துாக்கினாள். ஆனால் எலி அகப்படவில்லை. பொறியில் சிக்கியும் சிக்காமலும் இருந்த பாம்பு ஒன்று, பண்ணையாரின் மனைவியைத் தீண்டியது. உடனடியாக மருத்துவமனைக்கு ஓடினர். அன்றிரவில் பண்ணையாரின் மனைவிக்கு பயத்தில் காய்ச்சல் வந்தது. விஷத்தை முறிக்க ஊசி மருந்து ஏற்றினர். ஆனால் காய்ச்சல் குறையவில்லை. மருத்துவமனைக்கு பார்க்க வந்த ஒரு மூதாட்டி, ‘‘பாம்பை பார்த்த பயத்தில வந்த காய்ச்சல் இது. கோழிச்சாறு குடிச்ச போயிடும்’’ என்று யோசனை தெரிவித்தாள். கோழிக்கு வந்தது வினை... மறுநாளே கோழியை அடித்து சாறு வைத்தனர். அதைக் குடித்தபின் அவளும் பயத்தில் இருந்து விடுபட்டாள். இரண்டே நாளில் குணமடைந்த அவள் வீட்டுக்குத் திரும்பினாள். அவளது உறவினர்கள் பலர் பார்க்க வந்தனர். மனைவி பிழைத்ததைக் கொண்டாட எண்ணிய பண்ணையார் விருந்தளிக்க விரும்பினார். ஆடும் வெட்டப்பட்டு உணவு சமைக்கப்பட்டது. பண்ணையார் தன் மனைவியிடம், ‘‘பாம்புக்கடிச்சதுக்கு இந்த எலிப்பொறியே காரணம் என்று சொல்லி அதைப் பரணில் துாக்கிப் போட்டார். நடந்ததை கவனித்த எலிக்கு ஒரு உண்மை புரிந்தது. தனக்கு பிரச்னை என்று யாராவது சொன்னா காது கொடுத்துக் கேட்கணும். ஏனென்றால் யாருக்கு, எப்போது, என்ன பிரச்னை வரும் என்று யாருக்கும் தெரியாது.
|
|
|
|