Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்புக் கணக்கு
 
பக்தி கதைகள்
அன்புக் கணக்கு


“நான் மூர்த்தி. இவ என் மனைவி ஜெயா. எங்களுக்கு ரெண்டு பசங்க. வெளிநாட்டுல கொழிச்சிக்கிட்டு இருக்காங்க. பேரன் பேத்தியெல்லாம் எடுத்தாச்சு”
இந்த மூத்த குடிமக்களுக்கு என்னதான் பிரச்னை?
“நான் பிரைவேட் கம்பெனில வேலை பார்த்தேன். பென்ஷன் கிடையாது. இவளுக்கு கொஞ்சம் பேங்க் வட்டி வருது. அத வச்சி அரை வயிறு கால் வயிறு சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்”
“உங்க பசங்க?”
“எங்களுக்குப் பூர்வீகச் சொத்தா ஒரு வீடு இருந்துச்சி. அது இருக்கறவரைக்கும் பிள்ளைங்க மாசா மாசம் பணம் அனுப்பிக்கிட்டிருந்தாங்க. வீட்ட வித்து காசக் கொடுங்கப்பான்னு கெஞ்சினாங்க. ஏதோ அவசரச் செலவாம். நானும் செஞ்சேன். ஒரு வருஷத்துல திருப்பித் தரதாச் சொன்னாங்க. தரல. மாசாமாசம் பணம் அனுப்பறதையும் நிறுத்திட்டாங்க. போன எடுக்கமாட்டேங்கறாங்க”
என்ன கொடுமை!
“அப்படியே காலத்த ஓட்டிரலாம்னு நெனச்ச்சா அதுக்கும் சோதனை வந்திருச்சி”
“என்னாச்சு?”
“இவளுக்கு இதயத்துல ஏதோ பிரச்னையாம். ஒரு ஆப்பரேஷன் பண்ணனுமாம். மூணு லட்ச ரூபாய் ஆகுமாம். இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அதப் பண்ணலேன்னா...’’
ஒரு முதியவர் விம்மி விம்மி அழுவதைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.
“நெனவு தெரிஞ்ச நாள்லருந்து எங்களுக்குப் பச்சைப்புடவைக்காரிதான் எல்லாம்னு வாழ்ந்தவங்கய்யா நாங்க. இப்பக்கூட இவ சாகறதுக்குள்ள பச்சைப்புடவைக்காரியப் பாக்கணும்னு சொன்னதாலதான் மதுரை வந்தோம். நாளைக்கு காலையில ரயில்ல சென்னைக்குப் போயிருவோம். ரெண்டு நாளுக்குள்ள நானும் இவளும் தற்கொலை செஞ்சிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்யா. முடிஞ்சா பச்சைப்புடவைக்காரிகிட்ட சொல்லிருங்கய்யா”
பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல் அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.
நானும் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு அவள் கோயிலை நோக்கிப் புறப்பட்டேன். சிறிது துாரம் செல்வதற்குள் என் காரை ஒரு பெண் வழிமறித்தாள். நான் சுதாரிப்பதற்குள் அவள் முன் கதவைத் திறந்து அமர்ந்துகொண்டாள்.
“முகத்தை மூன்று முழத்துக்கு நீட்டி வைத்துக்கொண்டு இப்படிக் கண்ணீரும் கம்பலையுமாக நீ ஏன் கோயிலுக்குச் செல்கிறாய்?”
வந்தவள் யாரென்று தெரிந்ததும் அழுகை இன்னும் அதிகமாக வந்தது. ஆள் அரவமில்லாத இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி சுற்றிவந்து பச்சைப்புடவைக்காரியின் காலடியில் அமர்ந்து கொண்டேன்.
“உங்களிடம் மடியேந்தி பிச்சை கேட்கிறேன் தாயே! நன்றிகெட்ட நாய்களை மகன்களாகப் பெற்றதற்காக மூர்த்தி, ஜெயா தம்பதியைச் சாகவிட்டு விடாதீர்கள்”
அன்னை என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“புரிந்துவிட்டது, தாயே! இதில் ஏதோ கர்மக்கணக்கின் சூட்சமம் இருக்கிறது. இந்த மூர்த்தி தன் தந்தையின் கடைசிக்காலத்தில் அவரைச் சரியாகக் கவனித்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அவர் மகன்கள்...’’
அன்னையின் புன்னகை மாறவில்லை.
“இல்லை, அந்த ஜெயா தன் மாமியாரைக் கடைசிக்காலத்தில் மிகவும் துன்புறுத்தியிருக்க வேண்டும். அதற்கு மூர்த்தியும் உடந்தையாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான்...’’
“நான் என்ன உன்னைப் போல் கதை எழுதுபவளா?”
நான் தலைகுனிந்தேன்.
“அவர்கள் கர்மக்கணக்கு பிரமாதமாக இருக்கிறது”
“இன்னும் இரண்டு நாளில் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்கள். கர்மக்கணக்கு பிரமாதமாம். யாரிடம் கதை அளக்கிறீர்கள்?”
“முட்டாளே! அது அவர்கள் சொன்னது. அது அப்படியே நடந்துவிடுமா என்ன?”
“அவர்களை யார் காப்பாற்றுவார்கள்? எப்படி காப்பாற்றுவார்கள்? என்ன கணக்கு...’’
“மூர்த்தியும், ஜெயாவும் தங்கள் பெற்றோரை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். மூர்த்தியின்  ஒன்றுவிட்ட அத்தையைக்கூட  கடைசிவரை வீட்டில் வைத்துப் பார்த்துக்கொண்டனர். தங்கள் மகன்களின் மீது அன்பைக் கொட்டி வளர்த்தார்கள். சுற்றி இருந்தவர்கள் கூட வாழ்ந்தவர்கள் அனைவரிடமும் அன்பைக் காட்டினார்கள்”
“அதற்குத்தான் சரியான தண்டனை கிடைத்துவிட்டதே”
கர்மக்கணக்கையாவது மனிதர்கள் ஓரளவு புரிந்துகொள்ள முடியும். ஆனால் அன்பின் கணக்கை யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது. அன்பின் வழிகள் விசித்தரமானவை”
“அன்பு என்றால் நீங்கள்தானே! அடுத்து நடக்கப்போவது என்னவென்று...’’
“மூர்த்தியும் ஜெயாவும் நிறைய அன்பைக் கொடுத்துவிட்டார்கள். அந்தளவிற்கு அவர்கள் அன்பைப் பெறவில்லை. இப்படியே தொடர்ந்தால் அவர்கள் இன்னும் பல பிறவிகள் எடுத்து அன்பைப் பெற வேண்டும். அவர்கள் கணக்கில் இருக்கும் மொத்த அன்பையும் இந்தப் பிறவியிலேயே பெற நான் ஏற்பாடு செய்திருக்கிறேன்”
“என்ன ஏற்பாடு?”
“நானை அவர்கள் பயணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்று பார்.
காட்சி விரிந்தபோது முதிய தம்பதிகள் ஒரு ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிர் இருக்கையில் ஒரு இளம் தம்பதியர் இருந்தனர். அவர்கள் மூர்த்தி, ஜெயாவின் மீது அன்பைப் பொழிந்தனர். காபி, பலகாரம், சாப்பாடு என்று எல்லாம் வாங்கித் தந்தனர். வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்டவண்ணம் இருந்தார்கள்.
ஜெயா தன் கணவரின் காதில் கிசுகிசுத்தாள்.
“நமக்கு இவள மாதிரி ஒரு மக இருந்திருந்தா நாம நாதியில்லாமத் தற்கொலை செஞ்சிக்கவேண்டாம்ல...’’
சொல்லும்போதே ஜெயா உடைந்துபோய் அழத் தொடங்கினாள். மூர்த்தியாலும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இளம்தம்பதியர் திடுக்கிட்டனர்.
“என்னாச்சு அங்கிள்? ஏன் அழறீங்க? உடம்பு சரியில்லையா? உங்களுக்கு என்னம்மா ஆச்சு?”
அந்தப் பெண் திரும்பித் திரும்பி கேட்டாள். மூர்த்தி மணியைப் பார்த்தார். ரயில் சென்னையை அடைய  ஒரு மணி நேரமாவது ஆகும்.
தன்னுடைய மகன்களின் போக்கிலிருந்து தொடங்கி, ஜெயாவிற்கு வந்த இதய நோய், அதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தது என மனதில் இருந்ததையெல்லாம் கொட்டினார் மூர்த்தி.
இளம் தம்பதியர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மனைவி கணவனிடம் ஏதோ கிசுகிசுத்தாள். கணவன் தலையாட்டினான்.
ஜெயாவின் கைகளை இறுகப்பற்றியபடி அந்த இளம்பெண் பேசினாள்.
“நான் சாரதா. இது என் கணவர் சேது. இவர் சென்னையில பெரிய இதய நோய் சிகிச்சை நிபுணர். இந்த நொடியில நாங்க உங்கள எங்கப்பா அம்மாவாத் தத்தெடுத்துக்கறோம். ரயில விட்டு இறங்கினவுடன நம்ம வீட்டுக்குப் போறோம். சாயங்காலமே ஆஸ்பத்திரிக்குப் போறோம். உங்களுக்கு ராஜ வைத்தியம் பாக்கறோம். நீங்க கடைசிவரைக்கும்  எங்க அப்பா அம்மாவா எங்களோடயே வாழணும். நானும் இவரும் உங்கள அப்பாஅம்மான்னுதான் கூப்பிடுவோம். உங்களத் தாத்தா பாட்டின்னு கூப்பிட ரெண்டு பேரப் பசங்களும் இருக்காங்க. என்ன சம்மதமா?”
மூர்த்தியும் ஜெயாவும் அழுதார்கள். சேது பேச ஆரம்பித்தான்.
“எங்கப்பா இறந்து நாலு மாசம் ஆகுது. இவளோட அப்பா போனமாசம்தான் இறந்தாரு. எங்க ரெண்டு பேருக்கும் அம்மா இல்ல. நேத்துதான் மதுரைக் கோயில்ல பச்சைப்புடவைக்காரிகிட்ட மனசார வேண்டிக்கிட்டோம். எங்க பாசத்தக் காட்ட எங்க அன்பு மழையில நனைய ஒரு அப்பா, அம்மா வேணும்ணு பிரார்த்திச்சோம். இவ்வளவு சீக்கிரம் எங்க பிரார்த்தனைய அவ நிறைவேத்தி வைப்பான்னு நாங்க நெனக்கவேயில்லப்பா. என்னம்மா சொல்றீங்க?”
மூர்த்தியும் ஜெயாவும் இன்னும் பெரிதாக அழுதார்கள்.
“அன்பின் கணக்கைப் பார்த்தாயல்லவா? அது, சரி நீ ஏனப்பா இப்படி அழுகிறாய்?”
“மூர்த்தியும், ஜெயாவும் அன்பை எல்லோருக்கும் வாரி வழங்கினார்கள். ஆனால் அதே அளவு அன்பைப் பெறவில்லை என்பதால் இந்த ஏற்பாடைச் செய்து அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி விளக்கை ஏற்றி வைத்துவிடீர்கள். என்னுடைய அன்புக் கணக்குத் தலைகீழாக அல்லவா இருக்கிறது?”
“எப்படி?”
“கையில் கிளி தாங்கிய ஒரு கோலக்கிளி எந்தக் கணக்கும் பார்க்காமல் என்மீது அன்பைப் பொழிகிறாள். அந்த அளவு அன்பை நான் என் சக மனிதர்களிடம் காட்டவில்லையே! என் அன்புக் கணக்கை நேர் செய்ய இன்னும் எத்தனை ஆயிரம் பிறவிகள் எடுக்கவேண்டுமோ?”
“யாருக்குத் தெரியும்?” என்று சொல்லிச் சிரித்துவிட்டு மறைந்தாள் பச்சைப்புடவைக்காரி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar