|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » வாழ்க்கையே சலித்துவிட்டது |
|
பக்தி கதைகள்
|
|
“அங்கிள், இதுதான் கல்யாண இன்விடேஷன். ஒவ்வொண்ணும் ரெண்டாயிரம் ரூபாய்” சொன்னவள் சுனிதா. 28 வயது. கோடீஸ்வரனின் ஒரே மகள். நாங்கள் இருந்தது அரண்மனை போன்ற அவள் வீட்டில். “இந்த ரெண்டு பீரோவுல இருக்கற புடவை, சுடிதார் எல்லாம் எனக்குத்தான். இது முகூர்த்தப் புடவை. முப்பது லட்ச ரூபாய். இதுபோக நுாற்றுக்கணக்கான டிரஸ்.” “இதெல்லாம் நகை. தங்கம் மட்டுமே நுாறு கிலோ. மூணு கோடிக்கு வைரங்கள்” இவள் ஏன் இதையெல்லாம் என்னிடம் காட்டிக் கொண்டிருக்கிறாள்? விரைவிலேயே காரணம் தெரிந்தது. “வெறுப்பா இருக்கு அங்கிள். ஏழைப் பொண்ணாப் பிறந்திருக்கலாமோன்னு தோணுது. இந்த ஆடம்பரமும் பகட்டும் கொஞ்சமும் பிடிக்கல” “புடவை, நகையெல்லாம் இருக்கட்டும் மாப்பிள்ளைய பிடிச்சிருக்காம்மா?” “சரியாச் சொல்ல முடியல, அங்கிள். அவங்க அப்பாவவிட பெரிய பணக்காரங்களாம். வசதியான வாழ்க்கை. ஆனா அதுவும் தங்கக் கூண்டாத்தான் இருக்கும். எல்லாத்தையும் விட்டுட்டு எங்கயாவது ஓடலாம்முன்னு தோணுது. தற்கொலை பண்ணிக்கவும் தோணுது.” சுனிதா எதற்கோ உள்ளே போனதும் விளக்குமாற்றுடன் ஒரு வேலைக்காரி வந்தாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். “உன் மனதிற்குத் தோன்றுவதை சொல்லு. உன் வார்த்தைகள் பூகம்பத்தையே உண்டாக்கப் போகின்றன” பச்சைப்புடவைக்காரியை வணங்கினேன். சில நிமிடங்கள் கழித்து மலர்ந்த முகத்துடன் சுனிதா வந்தாள். ஏதோ பேச வந்தவளைத் தடுத்து நிறுத்தினேன். “கல்யாண வேலை இருக்கட்டும். முதல்ல ஒரு நல்ல டாக்டரா பாரும்மா” “என்ன உளறுறீங்க அங்கிள்?” “உன் தலைய நல்லா ஸ்கேன் பண்ணச் சொல்லு.” சுனிதா அதிர்ச்சியில் உறைந்தாள். நான் சைகையில் விடைபெற்றுக் கிளம்பினேன். பத்து நாள் கழித்து… அலைபேசி ஒலித்தது. “நான் நடராஜன். சுனிதாவோட அப்பா. அவளுக்கு மூளையில கட்டி இருக்காம். கேன்சர்னு சந்தேகப்படறாங்க. முடிவு ராத்திரிதான் தெரியும். அப்போ... நீங்க இங்க இருக்கணும்’’ என்ன நடக்கிறது என்று புரியவில்லை. என்றாலும் அழைப்பை ஏற்றேன். மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவர் என்னை வரவேற்றாள். “சுனிதாவின் தந்தையிடம் பேசு. அனுதாபம் காட்டாதே. ஆத்திரத்தைக் கொட்டு” பச்சைப்புடவைக்காரி மறைந்தவுடன் நடராஜன் வந்தார். “முடிவு தப்பா இருந்துச்சின்னா நானும் செத்துருவேன்” “நல்லா சாகுங்க. ஆனா அதுக்கு முன்பு சுனிதாகிட்ட எல்லாத்தையும் சொல்லிருங்க” “எதைச் சொல்லணும்” “சுனிதா உங்க மக இல்ல. உங்களுக்குப் பிறந்த மகள என்ன செஞ்சீங்கன்னு சுனிதாகிட்ட சொல்லுங்க. உண்மை தெரிஞ்சா அவ பிழைக்க வாய்ப்பு இருக்கு. அப்புறம் உங்க இஷ்டம்” “இந்த சமயத்தில அவளுக்கு இப்படி ஒரு அதிர்ச்சி’’ “அவளுக்கு வந்த வியாதிக்கு அதிர்ச்சி வைத்தியம்தான் செய்ய முடியும்” “நீங்களும் வாங்க” “உங்க மனைவியையும் கூப்பிடுங்க” என்னைப் பார்த்து சுனிதா பலவீனமாகச் சிரித்தாள். அங்கிருந்த நர்சை வெளியே போகச் சொன்னேன். தயங்கித் தயங்கி அழுதபடியே நடராஜனும் அவர் மனைவியும் சொன்னதன் சாரம் இதுதான். திருமணமான ஒரே வருடத்தில் ஒரு மகள் பிறந்தாள். குழந்தைக்கு ஒன்றரை வயதான போது அதற்கு ஆட்டிசம் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் வளர்ச்சி இயற்கையாக இருக்காது, இயல்பாகப் பேசமுடியாது, மற்றவர்களுடன் உறவாட முடியாது என தெரிந்ததும் குறுக்குவழியில் யோசித்தார் நடராஜன். குழந்தையை யாரிடமோ கொடுத்து வளர்க்கச் சொல்லி விட்டு அதே வயதுடைய இன்னொரு குழந்தையை வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டார். அப்படி வந்தவள்தான் சுனிதா. “அப்பா” என அலறினாள் சுனிதா. நான் அவள் நெற்றியில் அன்புடன் கைவைத்தேன். அவள் மயங்கி விட்டாள். சத்தம் கேட்டு நர்ஸ் வந்தாள். ஒரு டாக்டர் பட்டாளமே கூடிவிட்டது. தொய்வான நடையுடன் நான் வெளியேறினேன். மருத்துவமனை வாசலில் வழிமறித்தாள் பச்சைப்புடவைக்காரி. “பயப்படாதே. என் கதை எல்லாமே சுபமாத்தான் முடியும்.” “சுனிதாவின் கதையைப் போல் சோகமாக முடிந்தால்...’’ “கதை இன்னும் முடியவில்லை; தொடரும் என்று பொருள். அடுத்து நடப்பதைப் பார்” காட்சி விரிந்த போது சுனிதா மயக்கம் தெளிந்திருந்தாள். பயாப்சி முடிவுகள் வந்துவிட்டன. அவள் மூளையில் இருந்த கட்டி புற்று நோய் இல்லை என சொல்லிவிட்டார்கள். அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்தார்கள். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. சுனிதா வேகமாகத் தேறி வந்தாள். புற்று நோய், அறுவை சிகிச்சை எனக் கேள்விப்பட்ட மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். அந்த மட்டில் மகள் பிழைத்துக்கொண்டாளே என நடராஜன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஒருநாள் சுனிதா தன் தந்தையின் கையைப் பிடித்தபடி சொன்னாள். “என்னிக்கும் எனக்கு நீங்கதான் அப்பா அம்மா. நான் செத்துப் பிழைச்சிருக்கேன். ஒரு வரம் கேட்டாத் தருவீங்களாப்பா?” கண்ணீர் மல்கத் தலையசைத்தார் நடராஜன். “உங்களுக்குப் பிறந்த அந்தக் குழந்தையக் கண்டுபிடிச்சி கூட்டிக்கிட்டு வரப் போறேன். எங்கேயோ குப்பைமேட்டுல பொறந்தவ செல்வச் செழிப்பா வாழும் போது அதுக்கு உரிமை உள்ளவ ஏன் கஷ்டப்படணும்? ஆட்டிசம் நோய் வந்த குழந்தைங்கள நல்லபடியா வளர்த்து ஆளாக்க ஒரு பெரிய அமைப்ப ஆரம்பிக்கப் போறேன். என் கல்யாணத்துக்குச் செலவு பண்றதுக்காக வச்சிருந்த பணம்தான் அந்த அமைப்போட மூலதனம். ஆட்டிசம் பத்தி விழிப்புணர்வ ஏற்படுத்தப் போறேன். இனிமே எந்த பெற்றோரும் ஆட்டிசத்தக் காரணம் காட்டி குழந்தைகள அனாதையாக்க கூடாதுப்பா” நடராஜன் சுனிதாவின் கையில் முகம் புதைத்து அழுதார். “இது நீ எங்களுக்குக் கொடுக்கற வரம் தாயி. இதுவரை நாங்க பெத்த மகளா நெனச்சித்தான் பாசத்தக் கொட்டி வளத்தோம். ஆனா அது தப்புன்னு இப்போதாம்மா தெரியுது. நீ எங்களப் பெத்த ஆத்தா. இந்த உலகத்துக்கே தாயான பச்சைப்புடவைக்காரி. அவ மனசுலதான் இப்படி ஒரு கருணை இருக்கும்மா. நான் சம்பாதிச்ச கோடிக்கணக்கான சொத்துக்கள உன் காலடியில கொட்டிடறோம், தாயி. நீ என்ன செய்யணுமோ செஞ்சிக்கம்மா” பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்தேன். “சுனிதா அபரிமிதமான செல்வத்தை அனுபவிக்கவேண்டும் என்பது அவள் கர்மக்கணக்கு. அதே சமயம் மானுட இனத்தின் மீது அன்பைப் பொழியும் ஒரு வாழ்க்கை வேண்டும் என என்னிடம் சென்ற பிறவி முடியும் போது வரம் கேட்டாள். கர்மக்கணக்கின்படி அளப்பரிய செல்வத்தில் திளைக்க வைத்து, உரிய காலம் வந்ததும் அதில் சலிப்பை உண்டாக்கி, பின் நோயைத் தந்து அவள் வாழ்வின் நோக்கத்தை தெளிவாகக் காட்டிவிட்டேன். அவளை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும், சொல். உன் வாழ்வின் நோக்கம் என்னவென்று உணர்த்தட்டுமா?” அன்னையின் முகத்தில் குறும்புச் சிரிப்பு. “எனக்கு ஏற்கனவே தெரிந்ததை நீங்கள் ஏன் உணர்த்தவேண்டும்” “என்ன அகம்பாவம்” “இல்லை, தாயே. அடிமைத்தனம். என் வாழ்வின் நோக்கம் காலமெல்லாம் ஒரு கோலக்கிளியின் கொத்தடிமையாக இருப்பதுதான். கவிதை புனைவதோ கழிப்பறையைக் கழுவுவதோ உங்கள் கட்டளையை நிறைவேற்றுவது ஒன்றே என் வாழ்வின் நோக்கம். காவியம் புனைவதோ ஆவியாய் அலைவதோ நீங்கள் விரும்புவதைச் செய்வதுதான் இந்த அடிமையின் மொத்த வாழ்க்கையும். பெரிய நோக்கத்தைப் பற்றிப் பேச வந்துவிட்டார்கள்” என்னை அழவிட்டு விட்டு மறைந்தாள் அகிலாண்டேஸ்வரி.
|
|
|
|
|