Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவள் நிகழ்த்திய அற்புதம்
 
பக்தி கதைகள்
அவள் நிகழ்த்திய அற்புதம்

பூங்காவில் அமர்ந்திருந்தபோது உருவெளிப்பாடாகப் பச்சைப்புடவைக்காரி தோன்றினாள். .
“இன்னும் சில நொடிகளில் ஒரு பெரிய அற்புதம் நிகழப்போகிறது”
“தப்பாகப் பேசாதீர்க்ள், தாயே! ஒரு அற்புதத்தை நிகழ்த்தப்போகிறேன் எனச் சொல்லுங்கள்.”
“அப்படியே வைத்துக்கொள். அங்கே நடப்பதைப் பார்”
மணி என்ற அந்த மனிதரை எனக்கு ஓரளவு தெரியும். அரசியலில் செல்வாக்கு உள்ளவர். பெரிய தொழிலதிபர்கள்கூட மணியைக் கண்டு அஞ்சுவர். அவர் என்ன கேட்டாலும் செய்து தருவர்.
அதிகாரமும் செல்வாக்கும் உள்ள மணி பெரிய கோடீஸ்வரனாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் மணிக்கு எளிய வாழ்க்கைதான் பிடித்திருந்தது.
காட்சி விரிந்தபோது நள்ளிரவில் காரில் சென்று கொண்டிருந்தார் மணி. தெரு வெறிச்சோடியிருந்தது. சாலையில் யாரோ விழுந்து கிடந்ததைப் பார்த்த மணி காரை விட்டு இறங்கி அந்த மனிதனிடம் போனார்.
திடீரென அந்த மனிதன் மணியை இறுக்கிப் பிடித்தான். எங்கிருந்தோ நான்கைந்து பேர் முளைத்தார்கள். அதில் ஒருவன் கையில் துப்பாக்கி இருந்தது.
அந்த மனிதன் துப்பாக்கியால் மணியைக் குறி பார்த்தான். அவனுக்கும் மணிக்கும் பத்தடி துாரம்தான் இருந்தது. நான் பதறிக்கொண்டிருந்தேன்.
எங்கோ தொலைவில் ஒரு கோயில் மணியின் சத்தம் கேட்டது.  இன்னும் ஐந்து நொடிகளில் துப்பாக்கிக் குண்டு வெடித்திருக்க வேண்டும். சாலையில் யாரோ தடதட என ஓடிவரும் சத்தம் கேட்டது. தன்னிச்சையாகத் திரும்பினான் துப்பாக்கிக்காரன். பெரிய எருமை அவனை நோக்கி ஓடி வந்தது. அவனை முட்டித் துாக்கி எறிந்தது. அவனது ஆட்கள் சிதறிவிட்டார்கள்.
அதிர்ச்சியிலிருந்து மீண்ட மணி காரை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.
“நான் தப்பாகப் பேசுகிறேன் என்றாயே, நீதான் தப்புத் தப்பாகப் பேசுகிறாய்”
“என்ன தப்பு?”
“மணியின் உயிரைக் காத்த அற்புதத்தை நான் நிகழ்த்தவில்லை. அதை நிகழ்த்தியது மணியின் மனதில் இருந்த துாய அன்புதான். இதே போல் இன்னும் நுாறு முறை மணிக்கு ஆபத்து வந்தாலும் அது வெயிலைக் கண்டபனி போல விலகிவிடும்”
“மணி அரசியலில் இருப்பவர். கொஞ்சம் அதிகார போதை உள்ளவர் என்றும் எனக்குத் தெரியும். அவர் மனதில் துாய அன்பு இருப்பதாக...’’
“நாட்டில் பெருந்தொற்று இருந்த காலத்தில் நுாறு உயிர்களைக் காப்பாற்றியவன் மணி.  உயிர் காக்கும் பணி என்னுடையது. அதை என் சார்பில் செய்தவன் மணி. எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் பல உயிர்களைக் காப்பாற்றியவனின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு”
“என்ன சொல்கிறீர்கள் தாயே?”
பெருந்தொற்று கொத்துக் கொத்தாக உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருந்த காலம் அது. ஊரடங்கு அமுலில் இருந்தது. மணி தன் வீட்டில் இருந்தார். மாலை ஆறு மணி இருக்கும். அவரது அலைபேசி ஒலித்தது. பேசியது தமிழ்நாட்டின் ஒரு பெரிய மாவட்ட ஆட்சித் தலைவர். அவர் குரலில் அதீதப் பதற்றம்.
“மணி சார் நீங்கதான் காப்பாத்தணும். எங்களுக்கு வேற நாதியில்ல”
“பச்சைப்புடவைக்காரிதான் நம்ம எல்லாரையும் காப்பாத்தணும். ஆரம்பத்துலயே அச்சானியமாப் பேசாதீங்க. நீங்க கலெக்டர். உங்களுக்கு இல்லாத அதிகாரமா?”
“அதிகாரத்த வச்சி ஒண்ணும் செய்ய முடியாமத்தான் உங்ககிட்ட மடியேந்தி பிச்சை கேக்கறேன். ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல, மணி சார். நுாறு பேரு. அவங்க வாழறதும் சாகறதும் உங்க கையிலதான் இருக்கு”
“பதறாம என்ன விஷயம்னு சொல்லுங்க சார். என்னால ஏதாவது செய்யமுடிஞ்சா நிச்சயம் செய்றேன்”
“நான் இப்போ அரசு ஆஸ்பத்திரில இருக்கேன். என்கூடவே ஆஸ்பத்திரி டீன் இருக்காரு. ஆஸ்பத்திரில நுாறு கொரோனா நோயாளிங்க ஆபத்துல இருக்காங்க. எல்லாரும் அம்பது வயசுக்குள்ளதான் இருப்பாங்க மணி சார்.”
“பச்சைப்புடவைக்காரிய வேண்டிக்கிட்டு சிகிச்சையச் செய்யச் சொல்லுங்க, கலெக்டர் சார்.”
“அதுலதான் சிக்கல்.”
“என்ன சிக்கல்?”
“ஆஸ்பத்திரில இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாம் காலியாயிருச்சி. சுத்தி முத்தி நுாறு கிலோமீட்டர் வரைக்கும்கேட்டுப் பாத்துட்டோம் எங்கயுமே ஆக்சிஜன் கெடைக்கல. இன்னும் மூணு மணி நேரத்துல ஆக்சிஜன் கெடைக்கலேன்னா நுாறு பேரும் குளோஸ். நானும் டீனும் காலையிலிருந்து தண்ணிகூடச் சாப்பிடாம உக்காந்திருக்கோம். பயமா இருக்கு.”
“இதுல நான் எப்படி உதவி செய்ய முடியும்?”
“எங்க மாவட்ட எல்லையில ஒரு பெரிய மெட்டல் பேக்டரி இருக்கு. அவங்ககிட்ட ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கறதாச் சொல்றாங்க. ஆனா அவங்க யாரும் பிடிகொடுத்துப் பேச மாட்டேங்கறாங்க.”
“இந்தப் பெருந்தொற்று காலத்துல உங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருக்கு, கலெக்டர் சார். நீங்க போலீஸ் படைய அனுப்பி வம்படியா அந்த ஆக்சிஜனத் துாக்கிட்டு வந்திரலாம். அதையும் மீறி பிரச்னை வந்தா நான் பாத்துக்கறேன்.”
“அந்த பேக்டரி ஓனரு வடநாட்டுக்காரரு. அரசியல்ல செல்வாக்கு உள்ளவரு. ஏதாவது பிரச்னையாயிருமோன்னு பயமா இருக்கு. அவங்க மனசார ஒத்துழைப்புக் கொடுக்கலேன்னாலும் பிரச்னை. ஆக்சிஜன் சிலிண்டர் தரமில்லாம இருந்தா அவங்களக் குறை சொல்ல முடியாது. அதுவும் ஆபத்தா போயிரும்”
“அதனால...’’
“அந்த பேக்டரி ஓனர் உங்களுக்கு தெரிஞ்சவராமே! ஆறு மாசத்துக்கு முன்னால அவருக்கு கவர்மெண்ட்ல ஏதோ சிக்கல் வந்தபோது நீங்கதான் அதைத் தீர்த்து வச்சீங்களாமே!”
“அந்தாளுடைய பேரு, விபரங்களச் சொல்லுங்க”
ஆட்சித் தலைவர் சொன்னார்.
“என் உயிரக் கொடுத்தாவது அந்த நுாறு உயிர்களக் காப்பாத்தறேன் கலெக்டர் சார். பச்சைப்புடவைக்காரிமேல ஆணை”
அந்த தொழிற்சாலையின் தலைவரை அலைபேசியில் அழைத்தார் மணி. அழைப்பு போகவில்லை. மணி அசரவில்லை. அந்தத் தொழிற்சாலையின் மும்பை கார்ப்பரேட் அலுவலகத்தில் பணிபுரியும் தலைவரின் பி.ஏ., வை அழைத்தார்.
“பாஸ்கூட இப்போ பேச முடியாதே, சார். அவர் பாம்பேலருந்து டில்லிக்கு பிளைட்ல போயிக்கிட்டு இருக்காரு. இந்நேரம் பிளைட்ல இருப்பாரு. அலைபேசியை ஆப் பண்ணிருப்பாரு.”
மணியின் குரல் இடி முழக்கமாக இருந்தது.
“ஏர்போர்ட்டுக்குப் போன் செஞ்சி பிளைட்ட டேக் ஆப் பண்ண வேண்டாம்னு சொல்லுங்க. தலைவர இறங்கச் சொல்லுங்க. என்னோட பேசச் சொல்லுங்க. நான் சென்ட்ரல் மினிஸ்டர் ஆபீசுலருந்து ஏர்போர்ட்டக் கூப்பிடச் சொல்றேன்”
“ரொம்ப அவசரமான வேலையாப் போறதா பாஸ் சொன்னாரு’’
“யோவ், டில்லிக்கு ஆயிரம் பிளைட் இருக்குய்யா. இங்க நுாறு உயிரு ஊசலாடிக்கிட்டிருக்கு. நீ சொல்றியா, இல்ல, நான் சொல்லட்டுமா?”
“நானே சொல்றேன் சார்”
இருபதாவது நிமிடம் தொழிற்சாலைத் தலைவர் மணியை அலைபேசியில் அழைத்தார். தலைவரிடம் மென்மையாகப் பேசினார் மணி.
“நுாறு பேரின் உயிரைவிட உங்கள் பயணம் அப்படி முக்கியமானதாக இருக்க முடியாது என்ற என் அனுமானம் தவறென்றால் மன்னித்துவிடுங்கள்”
தலைவர் பதறினார். சூழலை விளக்கினார் மணி. தலைவரிடமிருந்து ஆணைகள் பறந்தன. ஏழு நிமிடம் கழித்து மணியை மீண்டும் அழைத்தார் தலைவர்.
“இன்னும் ஒன்றே முக்கால் மணிநேரத்தில் மருத்துவமனையில் நானுாறு ஆக்சிஜன் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படும்”
அவர் சொன்னது பலித்தது. அந்த நுாறில் ஒருவர் கூடச் சாகவில்லை. அவர்கள் பிழைத்துக்கொண்டது ஆக்சிஜனால் அல்ல. மணியின் மட்டற்ற அன்பால்.
“அந்த அன்பின் அற்புதம்தான் மணி உயிர் பிழைத்தது”
“நான் சொன்னதுதான் சரி, தாயே! அற்புதத்தை நிகழ்த்தியது நீங்கள்தான். அன்பு என்றால் என்ன நீங்கள் என்றால் என்ன?”


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar