|
நாம் எதுவாக இருக்கிறோமோ அதுவே கீதை. நண்பர்களை, உறவினர்களை, குருவானவர்களை கொன்று போரில் வென்றால் ‘என்னைப் பற்றி இந்த உலகம் எப்படி எடை போடும்; என் பெயர் கெட்டு விடும்’ என்ற குழப்பம் அர்ஜூனனுக்கு இருந்தது. இது எதார்த்தமானதே. ஒருவர் கீதையின் வழியை பின்பற்ற வேண்டும் என்றால் முதலில் மீற வேண்டிய தடை இது தான்! அர்ஜூனனுக்கு தன் எதிர்காலம் பற்றிய கவலை இருந்தது. ஆனால் கிருஷ்ணரோ ‘கர்மத்தை செய்; பலனை எதிர்பாராதே’ என்றார். காரணம் என்ன தெரியுமா. கர்மம் உடனடி நிகழ்வது. ஆனால் கர்ம பலனோ எப்போதோ எதிர்காலத்தில் கிடைப்பது. ஆனால் அர்ஜூனனை போல நாம், பலனை அதன் செயல்பாடுகளை உடன் எதிர்பார்க்கிறோம். இந்த நவீன உலகில், நம் வாழ்க்கை முறையில் எதிர்காலத்தில் நடப்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நம் எதிர்காலம் என்பது பல்வேறு காரண, காரியங்களின் கலவை. அவை நம் கட்டுப்பாட்டில் இல்லை. அதிலும் நமது அகங்காரமே காரணம். நிகழ்காலத்தில், கடந்த காலத்தால் கவரப்பட்டு வருங்காலத்தை முன்னிறுத்தி வாழ்கிறோம். இதுவே குழப்பத்திற்கு காரணம்.
விண்மீன்கள், கோள்கள், நட்சத்திரங்கள் அடங்கிய இந்த பிரபஞ்சத்தில் ஒரு நிலையான அச்சை மையமாக கொண்டு இவை சுழலுகின்றன. அச்சுக்கோடு அகலாமல் இருக்க ஒரு சக்கரம் போல மற்றவை சுற்றுகின்றன. அகலாமல் அச்சாணி இருக்கும் போது சக்கரம் மட்டும் சுற்றும். ஒவ்வொரு சுழற்காற்றிற்கும் ஒரு அமைதியான மையப்புள்ளி இருக்கும் இல்லையேல் அது சுழற்காற்றாகாது. மையப்புள்ளிக்கு துாரே அது இன்னும் வேகமாய் மாறி சூறாவளி ஆகிறது. நம்முள்ளும் ஒரு அமைதியான மையப்புள்ளி உள்ளது. அது நம் உள்மனம். அதில் இருந்து விலகி சஞ்சலமான மனநிலையில் வாழ்கிறோம். அர்ஜூனனின் தவிப்பிற்கு அவர் தன் பெயர் கெட்டு விடக்கூடாது என நினைத்தது காரணம். அவரைப் போலவே நாமும் நமது ‘இமேஜ்’(பிறர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம்)க்கு முக்கியத்துவம் தந்து பிறர் கண்கள் மூலம் நம்மை பார்க்கிறோம். ஆனால் நம் உள்மனதால் நம்மை பார்க்க தவறி விடுகிறோம். நாம் இருக்க வேண்டிய காலம் நிகழ்காலம்; இருக்க வேண்டிய இடம் நமது உள்மனமாகிய அகம் என்கிறது கீதை.
தமிழாக்கம்: ஜி.வி.ரமேஷ் குமார் |
|
|
|