|
சமீபத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்த போது நான் கண்ட காட்சி. காலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட நேரம். அறுபது மற்றும் எழுபதாம் திருமணங்கள் கோவிலைச் சுற்றிலும் தடபுடலாக நடந்து கொண்டிருக்க, கருவறைக்கு உள்ளும் வெளியும் நெட்டித்தள்ளும்படியாக கூட்டம் அலைமோதியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேறு வேறு இடத்திலிருந்து இறைவனை தரிசனம் செய்தார்கள். மணிக்கணக்கில் நின்றாலும் சரி, இறைவனை அருகாமையில் சென்று பார்த்து விட வேண்டும் என்று பெரியவர்களில் சிலரும், தூரத்தில் நின்று பார்த்தாலும் சரிதான் என்று ஆரத்தியை தொட்டு கும்பிட்டு உடனே நகர்ந்த சிலரையும் அங்கே பார்க்க முடிந்தது. இந்த இரண்டு முறையும் அல்லாமல் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனை ஒரு முறை கண்ணில் பார்த்தோமா, போதும் என்று நகர்ந்தவர்களும் உண்டு. இவர்கள் எல்லாம் ஒன்றாய் ஒரு குடும்பமாய் ஒரு வண்டியிலிருந்து இறங்கியவர்கள் தான்.
இன்றைய காலகட்டத்தில் இது அவரவருக்கான நேரம், பணம், சூழ்நிலை இவைகளை பொறுத்தது. இதில் யார் யாருக்கு எப்படி வசதியோ அப்படி தரிசித்தார்கள். கடவுளிடம் உடலளவில் நெருங்கிச் சென்று தரிசிப்பதை விட உள்ளத்தில் எந்த அளவு நெருங்கிச் சென்று வணங்குகிறோம் என்பது தானே முக்கியம்? கடவுளை நாம் பார்த்தால் போதும் என்ற நிலையில் அல்லாமல் அந்த கடவுள் நம்மை ஒரு நொடி நேரமாவது பார்த்தால் போதும், அவன் பேராற்றலும் பெரும் கருணையும் நம் மீது பட்டால் போதும் என்ற நிலையிலிருந்து பார்க்கப்படும் போது இதிலும் தவறொன்றும் இல்லை என தோன்றியது. இதில் அவரவருக்கான மனதிருப்தி என்று ஒன்று இருக்கிறது அல்லவா? அதுதான் அவரவரை வழிநடத்துகிறது.
சரி... இப்படி இறைவனை தரிசித்து விட்டு சென்றால் மட்டும் திருப்தி ஏற்பட்டு விடுமா? ஒரு கோயிலுக்கு சென்றால் வெறுமனே கருவறைக்குள் நுழைந்தோமா, கடவுளைப் பார்த்தோமா, கிளம்பினோமா என சுடுதண்ணீரை காலில் விட்டுக் கொண்டது போல் போவோர் ஒரு வகை. கருவறை மட்டுமல்லாது கோவிலின் உள்ளே இருக்கக்கூடிய ஒவ்வொரு கல்லையும் பார்வையிட்டு அப்படியே அந்த அனுபவத்தை உள்வாங்கிக் கொள்வோர் மற்றொரு வகை. அப்படி பார்க்கும்போது நம்
ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் உள்ள ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு கதை சொல்கிறது. மனித நாகரிகத்தையும் அதன் வளர்ச்சி கூறுகளையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பங்கள் இன்றியமையாததாக உள்ளது. கோயிலின் தொன்மை வரலாற்றை இந்த சிற்பங்கள் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில் ஸ்ரீவில்லிபுத்துார் கோயில் பிரகாரத்துக்கு முன்பு நிறைய சிற்பங்கள் வரிசையாக காணக் கிடைக்கிறது. தலைக்கு மேலே பெரிதாக வைத்திருக்கும் இந்த சிலைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்க வேண்டும் என்கிறார்கள். யோகா செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் நமக்கு கிடைக்கும். நிரந்தர நோய் இருப்பவர்கள் இப்படி தினமும் கோயிலில் குறப்பிபட்ட அந்த கோணத்தின் படி நின்று பார்க்கும்போது ஒருவரது நாள்பட்ட நோய்களும் குணமாகும். அங்கு இருக்கும் கலைமகள் சிலையை துப்பாக்கி வழி பார்வையாக மூக்கின் முனையை தலையை மேலே இருத்தி தலை துாக்கி பார்த்தோமேயானால் அந்த வளைவு நம் தண்டுவடத்தை சீராக்கி விடும். கருவறைக்கு முன்புள்ள ’யாளி’ சிலையை பார்த்துவிட்டு அதன் பிறகு இறைவனை தரிசிக்கும் போது சற்று நேரத்துக்கு முன் மிருகத்தைப் பார்த்த போது இருந்த ஒரு வித அச்சம் நீங்கி மகிழ்ச்சியும் பாதுகாப்பும் பெருகுவதாக ஒரு நம்பிக்கை. இறைவனை பார்த்தாலே நமக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படும். இந்த வழிமுறைப்படி பார்க்கும் போது அது ரெட்டிப்பு பலனைத் தரும் போல. இந்தக் கோவிலில் இருக்கும் பல சிற்பங்களில் அக்குபஞ்சர் அமைப்பு காணப்படுகிறது. நாம் அவற்றை தொடும்போது நம்மால் அதை உணர முடிகிறது.
இங்கு பிரதானமாக வீற்றிருக்கக்கூடிய கஜலட்சுமி சிற்பம் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஈகோ பிரச்னையை தீர்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. இதெல்லாம் கேட்க ஆச்சரியமாக இருந்தாலும் ஒவ்வொன்றிலும் சிறப்பான நுட்பத்தை முன்னோர்கள் கையாண்டிருக்கிறார்கள். அதிலும் கோயிலை நிர்மாணிக்கும் போது மனிதனை ஆன்மீக நெறியில் மட்டுமல்ல உள்ளார்ந்த அனுபவத்திலும் அவன் மேன்மை நிலையை அடைய வேண்டும் என மெனக்கெட்டிருக்கிறார்கள். அதுமட்டுமா, பாரம்பரியத்தையும் வரலாற்றையும் சொல்லி இருக்கிறார்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அறிவுறுத்தி, அரவணைத்து என நம்மை பண்படுத்தி இருக்கிறார்கள். இந்த கோவிலின் ஒவ்வொரு சிற்பத்திலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பார்க்க வேண்டிய முறையும் கோணமும் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் அது சரியான வழியில் கடத்தப்படாமல் போனதால் நமக்கு பல பெருமைகள் தெரியாமலேயே போய் விட்டன.
கோவிலில் வைத்திருக்கும் சில சிலைகள் ஆபாசமாக இருப்பது போல் தோன்றுகிறதே என அதை பார்த்து கிண்டல் அடிப்போர் உண்டு. இதற்கும் காரணம் உண்டு. நம் மனதை ஒருங்கிணைப்பது அவ்வளவு சுலபமல்ல. கண்ணை மூடி தியானம் என்று ஒரு ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்தால் தெரியும். ஆனால் இப்படிப்பட்ட சிலைகளும் சிற்பங்களும் நாம் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் நம்மை ஈர்த்து நம் மனதை அதிவிரைவில் ஒருங்கிணைத்து விடும். நம்மை ஒரே சிந்தனையின் கீழ் கொண்டு வந்து சமன் செய்ய வைக்கும். இப்படியான தருணங்கள் அமையும் போது நம் உடலில் வெள்ளை அணுக்கள் அதிகரித்து அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதாக நவீன விஞ்ஞானம் சொல்கிறது. அது மட்டுமல்ல, அந்தக் காலத்திலேயே எய்ட்ஸ் நோய் இருந்திருக்கிறது போலும். அந்த எயிட்ஸுக்கான மருந்து என்ன, அதை எப்படி குணப்படுத்தினார்கள் என்ற சூட்சுமம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் தூணில் செதுக்கப்பட்ட ஒரு சிற்பத்தில் காணக் கிடைக்கிறது. மலைப்பாக இருந்தது!
இங்கு இருக்கக்கூடிய மன்மதன் மற்றும் ரதியின் சிற்பங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வதில்லை. ஆனால், காதல் கைகூட எண்ணுபவர்கள் இவ்விரு சிலைகளையும் வணங்கிச் சென்றால் அவர்களின் காதல் கைகூடுகிறது. மன்மதனின் சிலை அருகே சென்று பார்த்தால் அச்சிலையின் கால் விரல்கள் மனிதனின் விரல்களைப் போன்றே அச்சு அசலாக இருக்கின்றன. அது மட்டுமல்ல, அவன் வில்லாக வளைத்து வைத்திருக்கும் கரும்பை தட்டிப் பார்த்தால் சிலையிலிருந்து வரும் சத்தம் போல இல்லை. நிஜ கரும்பை தொடுவது போன்ற உணர்வே உள்ளது. சிற்பக் கலையில் ஒரு அதிசயமாக பார்க்க முடிகிறது. இக்கோவிலில் உள்ள அனைத்து சிலைகளிலும் ஒரு உயிர்ப்பு உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயர் தனது வாலை தலைக்கு மேல் வைத்தபடி தான் காட்சி தருவார். இக்கோவிலில் உள்ள ஒரு தூணில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கியபடி, வாலை எடுத்து தன்னை வட்டமாக சுற்றி வைத்தவாறு வித்தியாசமான ஒரு கோலத்தில் இருக்கிறார். சிற்பக்கலைக்கு சான்றாக உள்ளது இந்த சிற்பம்! பார்த்து மகிழ வேண்டிய ஒன்று. கோவிலினுள்ளே சொர்க்கவாசலும் உண்டு.
அடுத்ததாக கண்ணாடி மாளிகை. நம் வீட்டு பெரியவர்கள் ஞாயிறானால் திருஷ்டி சுத்தி போடு என்பார்கள். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது சரியானதும் கூட. கண் திருஷ்டி பற்றி அவரவர்க்கு வரும்போதுதான் உணர முடியும். கண் திருஷ்டி கடவுளுக்கும் ஏற்படும். அதனாலேயே பெரியாழ்வாருடன் ஆண்டாளையும் பெருமாளையும் இந்த கண்ணாடி மாளிகைக்குள் கொண்டு வைத்து வழிபடுகிறார்கள். அங்கு போய் அவர்களை வழிபடும் நமக்கும் திருஷ்டி கழிகிறது. கண்ணாடி மாளிகைக்குள் இருக்கும் தூணின் அருகாமையில் சென்று அங்கே பொறிக்கப்பட்டிருக்கும் கண்ணாடியை பார்த்தால் நம்முடைய முழு உருவமும் தெரியும். அதே இரண்டு அடி தள்ளி நின்று பார்த்தால் நம் தலை, மார்பு, இடை, கால் என மூன்று நான்கு பிரிவுகளாக பிரித்து காண்பிக்கும். கண்ணாடி நம் மீது படும் போது நம்மிடம் படர்ந்து இருக்கும் எதிர்மறை சக்தியை உறிந்து எடுத்து விடும் ஆற்றல் கொண்டது. நமக்கு இது போன்ற எந்த விவரமும் தெரியாது போனாலும் கூட கண்ணாடி மாளிகையின் உள்ளே போய் வலம் வரும்போது நம் எதிர்மறை சக்திகள் உறிஞ்சப்பட்டு நேர்மறை சக்தி பெருகி நிற்கும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருளுகிறாள். பொதுவாகவே கிழக்கு நோக்கி இருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் புகழ் உண்டாகும் என்பர். எனவே நம் ஆண்டாளிடம் வேண்டிக் கொள்பவை அனைத்தும் நடக்கும் என்கிறார்கள். ஆண்டாள் இடது கையில் கல்கார புஷ்பத்தையும் கிளியையும் வைத்துக்கொண்டு வலக்கையை கீழே தொங்க விட்டு பூமியை காட்டியபடி இருக்கிறாள். இந்த கோலத்தை, ஆண்டாள் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வதை பற்றி சிந்தித்து கொண்டிருக்கும் கோலம் என்கிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் வடபத்ரசாயியிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது. என்ன தெரியுமா? நாம் எதை அவரிடம் கேட்டாலும் கொடுத்து விடுவாராம். ஆண்டாள் பக்கத்தில் இருப்பதால் எப்பொழுதும் அவர் காதல் மனநிலையுடனே இருக்கிறாராம். காதலிக்கும் பெண் பக்கத்தில் இருந்தால் எந்த ஆணாக இருந்தாலும் யாரையும் அந்த நேரத்தில் கடிந்து பேச மாட்டான் தானே! அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு உதவும் மனப்பான்மையும் வள்ளல் தன்மையும் இயல்பாகவே வந்துவிடும். எத்தனை தமிழ் சினிமாக்களில் நாம் பார்த்திருக்கிறோம்! தமிழ் சினிமா மட்டுமல்ல, உலக சினிமாக்கள் முதற்கொண்டு உலகத்துக்கே இதுதான் வழக்கம். நம் வடபத்திரசாயிக்கு மட்டும் இது பொருந்தாதா என்ன?! காதல் மனநிலையில் லயித்திருக்கும் அவர், பக்தர்கள் கேட்பதை எல்லாம் மனமுவந்து அருளாக தந்து கொண்டே இருக்கிறாராம். இங்கு ஆண்டாள், ரங்க மன்னார், பெரியாழ்வார்கள் சன்னதிகள் ’ஓம்’ எனும் பிரணவ மந்திர அடிப்படையில் அமைந்துள்ளது. இதில் ரங்க மன்னார் அகரமாகவும், ஆண்டாள் மகாரமாகவும், கருடாழ்வார் உகாரமாகவும் அமைந்து ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளாக திகழ்கின்றனர். இத்தனை சிறப்புப் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நாமும் வந்து ஆண்டாளையும் வடபத்திரசாயியையும் வழிபட்டு நமக்கு வேண்டுவனவெல்லாம் கேட்டு பெறுவோம்… வாருங்கள்!
|
|
|
|