|
ராமானுஜரின் முதன்மை சீடர்களில் ஒருவர் கூரத்தாழ்வார். கூரத்தாழ்வாரின் மூத்த மகன்கள் தான் பராசர பட்டர். வைணவத்தில் சிறந்த நுால்களை இயற்றிய இவரின் வாழ்க்கை அருள் நிறைந்தவையாகும். அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி நமக்கு சரணாகதி தத்துவத்தை எடுத்து காட்டுகிறது என்பதை தெரிந்து கொள்வோமா... பராசர பட்டர் ஒரு முறை காட்டுப்பாதை வழியாக தனது இருப்பிடம் வந்தார். வழியில் அவர் கண்ட காட்சி அவரை மயக்கம் அடையச்செய்தது. நீண்டநேரமாகியும் வெளியே சென்ற பட்டர் ஆசிரமம் திரும்பாததால் அவரைக் தேடி சீடர்கள் காட்டிற்கு வந்தனர். மயங்கி இருந்த அவரை மெதுவாக ஆசிரமத்திற்கு அழைத்து வந்து மயக்கத்தை தெளிய செய்து என்ன நடந்தது என கேட்டார்கள்.
அதற்கு அவரோ
நான் கண்ட காட்சி என்னையே பிரமிக்க வைத்தது என சொல்லி சீடர்களிடம் அதை விவரிக்க ஆரம்பித்தார். வேடன் ஒருவன் புதர் அருகே இரை தேடி கொண்டிருந்த ஒரு முயல் குட்டியை பிடித்து ஒரு சாக்குப்பையில் மூட்டைக் கட்டி எடுத்துச் சென்றான்.
இதைக் கண்ட தாய் முயல் அந்த வேடனைத் துரத்திச் சென்றது. அவன் கால்களை பிடித்து மன்றாடி குட்டியை விட்டு விடும் படிக் கெஞ்சியது. தாய்முயலின் இச்செயலை கண்ட வேடனின் மனம் இரக்கப்பட்டு முயல்குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான்.
இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கினேன் என்றார் பட்டர்.
இதில் மயங்கி விழ என்ன இருக்கிறது என கேட்டனர் சீடர்கள். பகவானிடம் பக்தி செலுத்தி ஒருவர் உய்வடைய வேண்டிய உயர்ந்த தத்துவங்களில் ஒன்றான சரணாகதியை எப்படிச் செய்ய வேண்டும் என அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?
இல்லை சரணாகதியை கடைப்பிடிக்கும் ஒருவரை காப்பாற்றியே தீர வேண்டும் என்கிற நீதியை அந்த வேடனுக்கு யாரேனும் சொல்லிக் கொடுத்தார்களா? அதற்கும் வாய்ப்பில்லை.
ஆனாலும், அந்த முயல் செய்த சரணாகதியை அந்த வேடன் அங்கீகரித்து,
சரணாகதியே அறியாத ஒரு முயலுக்கு, ஒரு சாமானிய வேடன் இப்படி கருணைக் காட்டுகிறான் என்றால்,
இந்த உலகை காத்து ரட்சிக்கும் தயாபரனாகிய பெருமாளிடம், அவனே கதி என அவன் திருவடிகளைச் சரணடைந்தால் நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வான். பெருமாளும் நம்மை கைவிட மாட்டான், காப்பாற்றியே தீருவான் என்கிற மனஉறுதி, இன்னும் இந்த இழிந்தபிறவியின் மனத்தில் உதிக்க வில்லையே என நினைத்தேன். அப்படியே மயங்கிவிழுந்து விட்டேன் என சொன்னார் பராசர பட்டர்.
|
|
|
|