|
ஹாதிராம் பாவாஜி என்ற வடநாட்டுத்துறவி திருப்பதி மலையில் தங்கியிருந்தார். திருப்பதி சீனிவாசப் பெருமாள் மீது பக்தி கொண்டு, கோவிந்தநாமஜெபத்தில் ஈடுபட்டார். அவருடைய பக்தியை மெச்சிய பெருமாள், நேரில் சந்திக்க எண்ணம் கொண்டார். ஒருமுறை அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நடை சாத்தப்பட்டது. கோயிலில் இருந்து கிளம்பிய பெருமாள், காட்டுப்பகுதியில் உள்ள பாவாஜியின் குடிலை அடைந்தார். பெருமாளை நேரில் பார்த்ததும் பாவாஜி சந்தோஷத்தில் ‘வாங்க பாலாஜி’ என்று வரவேற்றார். அவரை ஆசனத்தில் அமரச் செய்து பழவகை கொடுத்து உபசரித்தார். பெருமாள் அவரிடம், “எப்போதும் கூட்டம், பூஜை, புனஸ்காரம் என்றே என் அன்றாடப்பொழுது போகிறது. விளையாட்டாகப் பொழுதைப் போக்க எண்ணியே உன்னை நாடி வந்திருக்கிறேன். பகடை விளையாடுவோமா?” என்று அழைத்தார். பாவாஜிக்கு பேச்சே எழவில்லை. ஒரு கணம் திக்குமுக்காடிப் போனார். இறைவனே என்னுடன் விளையாடப் போகிறார் என்றால், அதை விட வேறென்ன கொடுப்பினை வேண்டும்! பகடைகளை எடுத்து வந்தார். சிரித்துப் பேசியபடியே அவர்கள் விளையாடினர். பொழுது போனதே தெரியவில்லை. பொழுது புலரும் வேளை வந்தது. சுப்ரபாத நேரமானதால் சீனிவாசப் பெருமாளைப் பள்ளியெழுப்ப அர்ச்சகர்கள் கோயிலில் ஆயத்தமாயினர். “ஆகா! நேரமாகிவிட்டது. இப்போது கிளம்புகிறேன், இரவில் வருவேன், மீண்டும் விளையாடலாம்,” என்று சொல்லிவிட்டு பாலாஜி மறைந்து விட்டார். பகலில் கோயிலில் இருப்பதும், இரவானால் பாவாஜியைத் தேடிச் செல்வதும் பாலாஜியின் அன்றாடக் கடமையானது. பாவாஜியின் பக்தியை உலகறியச் செய்ய பெருமாள் திருவுள்ளம் கொண்டார். அவருக்கு தெரியாமல் தன்னுடைய ரத்தின ஹாரத்தை(மாலை) குடிலில் வைத்துவிட்டுச் சென்றார். சுப்ரபாதபூஜைக்கு வந்த அர்ச்சகர்கள் பெருமாளின் கழுத்தில் ஆபரணம் இல்லாதது கண்டு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு செய்தி சென்றது. திருடனைக் கண்டுபிடிக்க உத்தர விட்டார். ரத்தினஹாரத்தைக் குடிலில் கண்ட பாவாஜி, அதனைக் கோயிலில் ஒப்படைப்பதற்காக புறப்பட்டார். ஆபரணத்துடன் வந்த பாவாஜியைக் கண்ட காவலர்கள் மன்னரிடம் அழைத்துச் சென்றனர். பாவாஜி, தினமும் இரவு பெருமாள் தன்னைத் தேடிவரும் விஷயத்தைக் கூறினார். மன்னருக்கு பாவாஜி மீது நம்பிக்கை வரவில்லை. அவரிடம், “ இப்போது சோதனை ஒன்றை வைக்கிறேன். ஒரு கட்டு கரும்பு உம்மிடம் தருவேன். இன்றிரவுக்குள் பெருமாள் அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, நாங்கள் அனைவரும் உமது பேச்சை நம்புவோம்,” என்றார். அதன்படி ஒரு அறையில் ஒரு கட்டு கரும்பு வைக்கப்பட்டு பாவாஜியும் சிறை வைக்கப் பட்டார். பெருமாளை தியானித்த படியே ஒரு மூலையில் பாவாஜி அமர்ந்து விட்டார். சீனிவாசப் பெருமாளின் அருளால் யானை ஒன்று அங்கு வந்து கரும்புகளைத் தின்று முடித்தது. காவலர்கள் அதிசயித்து மன்னரிடம் தெரிவித்தனர். பாவாஜியின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்த மன்னர் விடுதலை செய்தார். இதன்பின் நீண்ட காலம் புகழுடன் வாழ்ந்த பாவாஜி, சீனிவாசப் பெருமாளின் திருவடியில் கலந்தார். கன்னடத்து பெரி கன்னட மொழியில் உ<ள்ள வசவபுராணத்தில், சிவனுக்கு தாயாகும் பாக்கியம் பெற்ற பெச்சம்மா கதை கூறப்பட்டுள்ளது. வீரசைவ மரபில் பிறந்த பெச்சமதேவி சிவனின் தீவிர பக்தை. அவளுக்கு குழந்தை கிடையாது. சிவனையே குழந்தையாக எண்ணி வாழ்ந்திருந்தாள். “அட சிவனே! உன்னைப் பெற்ற தாய் ஒருத்தி இருந்திருந்தால், இப்படி பாம்பையும், புலித்தோலையும் கட்டிக் கொண்டு உன்னைத் திரிய விட்டிருப்பாளா! நீ எனக்குப் பிள்ளையாகு, உன்னைக் கண்போல் பார்த்துக் கொள்கிறேன்,” என கண்ணீர் வடிப்பாள். சிவனும் ஒரு சிசுவாக மாறி, அவள் வீட்டின் முன் கிடந்து அழத் தொடங்கினார். அனாதையாய் கிடந்த பிள்ளையை, பெச்சம்மதேவி, கண்ணும் கருத்துமாக வளர்த்தாள். ஒருநாள் குழந்தைக்கு காய்ச்சல்... உஷ்ணம் ஏறிக்கொண்டேபோனது. வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. குழந்தை படுத்த படுக்கையானது. பிள்ளையைக் காண வந்த பெண் ஒருத்தி, “அடியே! நீ பெற்ற பிள்ளையாய் இருந்தால் இப்படி காய்ச்சல் வரும்படி அசட்டையாய் இருந்திருப்பாயா? பெரிய வைத்தியர்களிடம் காட்டி இருக்க வேண்டியது தானே!” என்று ஏளனமாகப் பேசி விட்டாள். மனம் நொந்த பெச்சமதேவி தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள அரிவாளை கழுத்தருகே கொண்டு வந்தாள். ‘அம்மா அவசரப்படாதே’ என்று வாய் திறந்தது குழந்தை. தன் சுயரூபத்தையும் காட்டி, அவளுக்கு முக்தி அளித்தார். ஈசனே அம்மா என்று அழைத்ததால், ‘பெச்சம்மா’ (அன்னையருக்கெல்லாம் அன்னை)என்று பெயர் பெற்றாள்.
|
|
|
|