|
ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலங்களை திவ்யதேசம் என்பர். அவற்றுள் நம்மாழ்வாரால் பாடல்பெற்றதும், வைணவ ஆச்சாரியர்களில் ஒருவரான மணவாளமாமுனிகளின் பாதுகைகளை வைத்து பூஜிக்கப்படும் தலம் பல சிறப்புகளை உடையது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வானமாமலை என்னும் நாங்குநேரி தலம் தான் அது. இதன் மற்றொரு பெயர் ஸ்ரீவரமங்கை. சுவாமியின் திருநாமம் தோத்தாத்திரி நாதர், தாயார் திருநாமம் ஸ்ரீதேவி,பூதேவி, தீர்த்தம் சேற்றுத்தாமரை இதன் பெருமையை குசானன் முனிவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி மூலம் அறியலாம். மகாவிஷ்ணுவின் பக்தர்களில் ஒருவரானவர் குசானன் முனிவர். இவர் நாள்தோறும் தான் கைப்பட திருவமுது செய்து வழிபடும் பெருமாளுக்கு சமர்ப்பித்து பூஜை முடிந்தவுடன் உண்பது அவரது வழக்கம். இதனை சுயம்பாகம் என சொல்வர். ஒரு நாள் இவரது ஆசிரமம் வழியாக வேட்டைக்கு வந்த அரசர் ஒருவர் களைப்பு ஏற்பட்டு முனிவரின் இருப்பிடம் வந்தார். பசி ஏற்படவே அரசர், பெருமாளுக்கு செய்து வைத்திருந்த திருவமுதை எடுத்து சாப்பிட்டார். பூக்களை பறிக்க சென்ற முனிவர் வந்து இவரது செய்கையால் கோபம் அடைந்தார். பூஜைக்கு வைத்திருந்த திருவமுதை எடுத்து சாப்பிட்ட அரசனை யார் என்று கூட விசாரிக்காமல் ‘நாயாக திரிந்து அலைவாய்’ என சாபம் இட்டார் முனிவர். தவறை உணர்ந்து சாபவிமோசனம் கேட்ட அவருக்கு பாற்கடலுக்கு சமமான தீ்ர்த்த தண்ணீர் உன் மீதுபடும் போது மீண்டும் அரசனாக மாறுவாய் என சொன்னார். நாயாக அலையும் அரசன் முடிவில் பொதிகை மலை காட்டிற்கு வந்து சேர்ந்தான். அப்போது அங்கு வேட்டைக்கு வந்த ஒரு வேடன் தன் நாய்களுடன் சாபம் பெற்ற நாயினையும் சேர்த்துக் கொண்டான். ஆண்டுகள் பல கடந்தன. ஒருநாள் குடும்பத்துடன் வானமாமலை தலத்திற்கு பெருமாளை தரிசிக்க வந்தான் வேடன். அங்குள்ள பாற்கடலுக்கு சமமான சேற்றுத்தாமரை குளத்தில் அவனும் நீராடி வேட்டை நாய்களோடு சாபம் பெற்ற நாயையும் சேர்த்து குளிப்பாட்டிய போது அது அரசனாக மாறியது. உருமாறிய அரசன் விபரம் அனைத்தையும் சொன்னான். நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகுற் கின்றிலேன் அரவின் அணை அம்மானே சேற்று தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர் வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே. மேற்கண்ட பாடலை பாடிக்கொண்டே பெருமாளை தரிசிக்க அனைவரும் சன்னதிக்கு சென்றனர்.
|
|
|
|