|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » துர்வாசருக்கு வரவேற்பு |
|
பக்தி கதைகள்
|
|
சொர்க்க வாசத்தை மறுத்த முத்கலரின் மன உறுதியையும், அழியாத நித்ய இன்பமே தன் இலக்கு என்று வாழ்ந்த அவரின் உயர்ந்த நோக்கும் பாண்டவர்களை சிலிர்க்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்து விட்டது. வியாசரும் முத்கலர் பற்றி கூறி முடித்த நிலையில் பாண்டவர்களிடம் விடை பெற்றுக் கொள்ள முற்பட்டார். ‘‘பாண்டு புத்திரர்களே! இந்த வனத்தில் உங்களைச் சந்தித்ததோடு முத்கலர் பற்றி சிந்திக்கவும் எனக்கு வாய்ப்பளித்தீர்கள். உங்களுக்கு என் நன்றி. நமக்கெல்லாம் முத்கலர் ஒரு மிகச் சிறந்த உதாரணம் – நாமும் அவரைப் போல அழிந்து விடும் இன்பங்களுக்கு ஆசைப்படாமல், நித்ய இன்பத்திற்கு முயல வேண்டும்’’ என்று கூறியவர் அவர்களுக்கெல்லாம் ஆசி கூறி விட்டு புறப்பட்டுச் சென்றார். இப்படி பாண்டவர்களின் வனவாசமானது ரிஷிகளின் சந்திப்பு, அவர்கள் மூலமாக பலரது வரலாறுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. இந்த வனவாச காலத்தில் குறிப்பாக காம்யக வனத்தில் துரியோதனனால் ஒரு பெரும் சோதனையும் பாண்டவர்களுக்கு உண்டானது. அந்த சோதனையால் பாண்டவர்கள் குறிப்பாக திரவுபதி கிருஷ்ணரின் பெரும் கருணைக்கு பாத்திரமானாள். அப்படி என்ன தான் நிகழ்ந்தது? அந்த சம்பவம்.... .................. ஹஸ்தினாபுரம் திரும்பிய துரியோதனன் எப்போதும் பாண்டவர்கள் நினைப்பாகவே இருந்தான். குறிப்பாக தான் தற்கொலைக்கே முயன்றும் அது கைகூடாமல் போனதையும், அதை பீமன் கேலி செய்ததும் அவன் கவனத்திற்கு வந்து அவன் மனம் பீமனை எண்ணி குமுறிக் கொண்டே தான் இருந்தது. அதை உணர்ந்த சகுனியும் அது பற்றி கேட்கலானான். ‘‘என்ன துரியோதனா... உன் மனம் குமுறுவதை முகம் நன்றாக எதிரொலிக்கிறது. காரணம் நான் அறியலாமா?’’ ‘‘உங்களிடம் கூறாமல் நான் யாரிடம் மாமா கூறுவேன்? நான் எவ்வளவு முயன்றும் பாண்டவர்கள் என் மனக்கண்ணில் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். அதிலும் பீமன் என்னை வதைக்கிறான். நான் ‘பிராயோபவேசம்’ செய்யத் தவறியதை அவன் இழிவாக விமர்சித்துள்ளான்’’ ‘‘போகட்டும் விடு. நமக்கு அதனால் அல்லவா தைத்யர்கள் சகாயம் உண்டானது. அதை எண்ணி சந்தோஷப்படு’’ ‘‘முடியவில்லை மாமா... வனத்திலேயே அவர்கள் கதை முடிந்து விட வேண்டும். அவர்களை எதிர்த்து நாம் போர் புரிவது என்பது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றது’’ ‘‘அவர்கள் வனவாசம் முடிந்து திரும்ப வந்து விடக் கூடாது அதுதானே உன் விருப்பம்’’ ‘‘ஏன் உங்களுக்கு அப்படி ஒரு விருப்பம் இல்லையா’’ ‘‘உனக்கு இருப்பது விருப்பம் என்றால் எனக்கு இருப்பது வெறி. அதை முதலில் புரிந்து கொள்’’ ‘‘கோபிக்காதீர்கள் மாமா... நான் சாதாரணமாகவே கேட்டேன்’’ இருவரும் பேசிக் கொண்ட அத்தருணத்தில் அரண்மனை பிராமணரும் வேத போஷகருமான உபாத்யாயர் அவர்களை சந்திக்க வந்திருக்கும் தகவலை காவலன் கூறி நின்றான். ‘‘அவரை வரச் சொல்’’ எனவும் அவரும் வணங்கியபடியே வந்தார். ‘‘என்ன விஷயம் உபாத்யாயரே’’ ‘‘ஒரு முக்கிய சங்கதி’’ ‘‘என்ன அது’’ ‘‘ரிஷிகளில் நிகரில்லாத துர்வாச மகரிஷி நம் ஹஸ்தினாபுரம் வந்துள்ளார். அவரை நம் அரண்மனைக்கு வரவேற்று உபசரிக்க வேண்டும்’’ ‘‘அதற்கென்ன... வரவேற்க ஏற்பாடுகளை செய்து விடுங்கள்’’ ‘‘அவர் மட்டுமின்றி அவரோடு அவரது சீடர்களும் வந்துள்ளனர்’’ ‘‘அவர்களையும் வரவேற்போம்’’ ‘‘ தாங்களே முன் நின்று வரவேற்று விருந்துபசாரமும் செய்ய வேண்டும். நான் உடன் இருக்கலாம்’’ ‘‘புரிகிறது. நானே முன் வந்து பூர்ண கும்பமுடன் வரவேற்கிறேன் போதுமா?’’ ‘‘ மகிழ்ச்சி. மேலும் ஒரு விண்ணப்பம்’’ ‘‘என்ன’’ ‘‘துர்வாச மகரிஷி கோபக்காரர். சிறு தவறைக்கூட சகிக்க மாட்டார். சபித்து விடுவார்’’ ‘‘எச்சரிக்கிறீர்களா இல்லை பயமுறுத்துகிறீர்களா?’’ ‘‘எச்சரிக்கிறேன் அரசே. அவரை ஒரு குறைவுமின்றி வரவேற்று சிறப்பித்தால் கேளாமலே நமக்கு வரங்களை அருள்வார்’’ ‘‘நல்லது. ஒரு குறைவுமின்றி வரவேற்போம். அவர் உச்சி குளிரும் வண்ணம் நடப்போம். பூர்ண கும்ப மரியாதை முதல் சகலத்துக்கும் ஏற்பாடு செய்யுங்கள்’’ ‘‘மகிழ்ச்சி அரசே! இந்த நாள் நிச்சயம் மகத்தான நாளாக திகழ்ந்திடும். நான் வருகிறேன்’’ உபாத்யாயர் விடைபெற்றுக் கொண்டார். அதே வேளை சகுனியோ பெரும் சிந்தனையில்... ‘‘என்ன மாமா யோசனை’’ ‘‘துர்வாசர் வருகிறார் அல்லவா... அது குறித்து தான்’’ ‘‘அவர் கோபக்காரர் என்பது தான் தெரியுமே... அவர் குறித்து யோசிக்க மேற்கொண்டு என்ன உள்ளது?’’ ‘‘எதையும் மேலோட்டமாக பார்ப்பதே உன் இயல்பாகி விட்டது’’ ‘‘அப்படியென்றால்...’’ துரியோதனன் இழுத்தான். ‘‘இந்த துர்வாசர் தான் இப்போது உன் மனக்குறையை தீர்க்கப் போகிறார்’’ ‘‘எப்படி’’ ‘‘ சிறப்பாக வரவேற்று இவரிடம் நீ அடிமை போல் நடக்க வேண்டும்’’ ‘‘நானா... அடிமை போலா?’’ ‘‘ஆம்... உன் பணிவு துர்வாசரை உருக்கி விட வேண்டும்’’ ‘‘அதனால் என் குறை எப்படி நீங்கும்’’ ‘‘அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். துர்வாசர் உன் முன் உருகி உனக்கு வரம் தர முன் வரும் போது சொல்கிறேன்’’ ‘‘புரிகிறது. பாண்டவர்களை வெல்லும் ஆற்றல் மிக்க அஸ்திரங்கள் எதையாவது அப்போது அவரிடம் கேட்டுப் பெற்று விட வேண்டும். அதுதானே’’ ‘‘பீஷ்மரை விடவும், துரேணரை விடவும் பெரிய உயரிய வலிமையான சாஸ்திரங்ரகள் அந்த ஈசனிடம் கூட இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள். அவர்களே நம்மிடம் இருக்கும் போது அஸ்திரமெல்லாம் இனி நமக்கு எதற்கு’’ ‘‘வேறு என்ன வரத்தை நான் கேட்க முடியும்?’’ ‘‘அதை நான் அப்போது சொல்கிறேன். அதுவரை பொறுமையாக இரு. இப்போது நீ துர்வாசரை வரவேற்றிடும் வேலையைப் பார்’’ – சகுனி இறுதிவரை பிடிகொடுக்காமல் பேசி தானும் துர்வாசரை வரவேற்கத் தயாரானான். துர்வாசரும் ஹஸ்தினாபுரத்து எல்லையில் தன் ஐயாயிரம் சீடர் குழாமுடன் வந்து சேர்ந்தார். பட்டத்துயானை மாலையோடு காத்திருந்தது. பூர்ண கும்பமுடன் வேதியர்கள் மந்திர முழக்கமிட்டபடி இருந்தனர். தெருவெங்கும் மலர் துாவப்பட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு, பல வண்ணங்களின் கொடிகள் அசைந்து கொண்டிருந்தன. ஹஸ்தினாபுரத்து மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் கோலமிட்டு விளக்கேற்றி வைத்தனர். மாடமாளிகையில் உப்பரிகையில் நின்றபடியே மலர்களைத் துாவ பலரும் காத்திருந்தனர். வாத்யக்காரர்கள் இசைத்தபடி நின்றனர். ஆட்டக்கராரர்கள் அதற்கேற்ப ஆடிக் கொண்டிமிருந்தனர். களரி, வாள்போர், மல்யுத்தம், சிலம்பம் என்னும் வீரப்பயிற்சிகளில் பலரும் ஈடுபட்டிருக்க, துர்வாசருக்கு பட்டத்து யானையும் மாலை அணிவித்து வரவேற்றது. அவரை முன்னால் நடக்கச் செய்து அவர்களுக்கு மலர்களை துாவிக் கொண்டே நடந்தான் துரியோதனன். வலதுபுறம் நின்று அவனும், இடதுபுறம் அவனது மனைவி பானுமதியும் துர்வாசரை மலர் துாவி வரவேற்க துர்வாசர் பூரித்துப் போனார். நடப்பதெல்லாம் கனவா... இல்லை நிஜமா... என்றும் அவருக்குள் கேள்விகள் எழும்பின. அவர் மட்டுமின்றி அவரது ஐந்தாயிரம் சீடர்களும் கூட பிரமிப்பில் ஆழ்ந்தனர். ஒரு சன்யாசிக்கு பேரரசனைப் போல வரவேற்பா... விண்ணகத்தில் இருந்து இந்திரன் கூட இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். திரிலோக சஞ்சாரியான நாரதர் அப்போது இந்திரன் அருகில் தான் இருந்தார். ‘‘இந்திரா... துரியோதனன் துர்வாசரை வரவேற்கும் விதத்தை பார்த்தாயா... அவன் ஏதோ திட்டத்தோடு தான் இப்படி நடந்து கொள்கிறான்’’ என்றார். ‘‘ஆம் நாரதரே... அது என்ன திட்டமாக இருக்கும்’’ ‘‘இந்திரனுக்குள்ளும் அது தான் கேள்வி. துரியோதனனுக்கே அது தெரியாதே... அத்திட்டத்தை தன்னுள் சுமந்தபடி இருந்த சகுனியின் முகத்தில் மட்டும் வெற்றிப் புன்னகை’’
|
|
|
|
|