|
மக்களின் அறிவுக்கு ஏற்ப வெவ்வேறு விதமான பாதையை பகவத்கீதை தருகிறது. கீதை காட்டும் பாதைகள் மூன்று. அவை கர்ம யோகம், சாங்கிய யோகம், பக்தி யோகம். மனம் சார்ந்த விஷயங்களை கர்ம யோகமும், ஞானம் சார்ந்த விஷயங்களை சாங்கிய யோகமும், அன்பு சார்ந்த விஷயங்களை பக்தி யோகமும் விளக்குகிறது. இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் மனம் சார்ந்த கர்ம யோகத்தின் படியே இயங்குகிறார்கள். வாழ்வின் தளைகளால் நாம் கட்டப்பட்டிருக்கிறோம். தளைகளான அந்த தடைகளை தகர்த்தெறிந்து நமக்கு நாமே விடுதலை பெற கடினமாக உழைக்க வேண்டும் என நம்புகிறோம். எனவே இது செயல் சார்ந்தது. இந்த மனநிலையில் உள்ளவர்களிடம் பேசினால் நிறைவாக ‛நான் இப்போது என்ன செய்ய வேண்டும்’ என்றே அவர்கள் கேட்பார்கள். இந்த பாதை நம்மை ‛நிஷ்காம்ய கர்மா’வுக்கு (தன்னலமற்ற செயல்) கொண்டு செல்லும்.
சாங்கிய யோகம் இன்றைய விஞ்ஞானத்திற்கு ஏற்புடையதாக உள்ளது. ஞான யோகம் என்றும் இதைச் சொல்வர். இது விழிப்புணர்வு அல்லது அறிதல் பற்றியது. அறிவு பற்றியதல்ல. இதன் ஆரம்ப நிலையை எளிய நிகழ்வின் மூலம் விளக்கலாம். ஒரு இருட்டறையில் நாம் இருக்கிறோம். இருட்டை விலக்க விளக்கு ஏற்றினால் போதும். மற்றபடி நமது எந்த செயலும், முயற்சியும் இருட்டைப் போக்காது என்ற புரிதலையும் கொண்டிருக்கிறோம். இது மற்றொரு தேர்வை சிந்திக்காத விழிப்புணர்வு பாதை.
பக்தி யோகம் என்பது சரணடைவது. இதை பின்பற்றுபவர்கள் தங்களை கடல் அலைகளாகவும், முழு முதல் கடவுளான பரமாத்மாவை பெருங்கடலாகவும் உணர்கிறார்கள். அலைகள் எழும்பி கடலின் இருப்பை தெரிவித்துக் கொண்டே இருக்கிறது.
ஆரம்பத்தில் மூன்று பாதைகள் சொல்லும் கருத்தும் வழியும் வேறுபட்டதாக தோன்றும். ஆனால் இவை மூன்றும் அப்படியொன்றும் நீர் புகாதது போன்ற பாதை அல்ல. இவற்றின் பிணைப்பை தான் மனிதன் உணர வேண்டும். கர்ம, சாங்கிய, பக்தி பாதைகள் சந்திக்கும் போது நாம் போதிய விழிப்புணர்வு பெறுகிறோம். எல்லா கர்மங்களின் இறுதி விதியும் மாயத்தோற்றம் என்பதால் அதை ஒரு நாடகம் போல் நிகழ்த்தும் போது அது கர்மாவில் சேராது.
இந்த பிரபஞ்சவெளியில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்களால் இணைந்திருப்பததாக விஞ்ஞானம் சொல்கிறது. இது போலவே மெய்ஞ்ஞான உலகம் இந்த மூன்று யோக தத்துவங்களால் இணைந்திருக்கிறது. ‛இந்த மூன்று பாதைகளும் ஒரே இடத்திற்கு சென்றடைகிறது. அது நம்மை நாமே உணரும் அகங்காரமற்ற நிலை’ என்கிறார் கீதையில் கிருஷ்ணர்.
- கே.சிவபிரசாத் ஐ.ஏ.எஸ்., - தமிழாக்கம்: ஜி.வி.ரமேஷ் குமார்
|
|
|
|