|
“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’’ என்றார் மகாகவி பாரதியார். அவர் விருப்பத்திற்கு ஏற்ப திருப்பாவை பாடல்கள் நம் நாட்டைத் தாண்டி வெளிநாடுகளிலும் ஒலிக்கின்றன. வெளிநாடுகளுக்குச் செல்லும் போது யாராவது தமிழ் பேசுவதைக் கேட்டால் நம் காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கும். மொழி சார்ந்து ஏற்படும் பாசப்பிணைப்பு அது. அப்படியிருக்க நம் பாசுரங்களும், பாடல்களும் வெளிநாட்டில் கொண்டாடப்பட்டால் இன்னும் மகிழ்ச்சி தானே. தமிழ் நாகரிகமும் பண்பாடும் தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா போன்ற நாடுகளில் பரவி இருந்தன என்பதற்கு சான்றுகள் உள்ளன. குறிப்பாக தாய்லாந்தில் இன்றும் திருப்பாவை பாடப்படுவது ஆச்சரியம் தருகிறது. தாய்லாந்து அரசு பல நுாற்றாண்டாக ‘த்ரியெம்பாவ த்ரிபாவ’ விழாவைக் கொண்டாடுகிறது. உண்மையில் அது ‘திருவெம்பாவை திருப்பாவை’ விழா. அப்பாடல்களை சொற்களின் உருவம் சிதைந்து மந்திரமாக அவர்கள் பாடுகிறார்கள்.
கிழக்கு ஆசியாவில் மன்னராட்சி நடக்கும் நாடு தாய்லாந்து. அங்கு நடக்கும் முடிசூட்டு விழாவிற்கும் நம் பண்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கடவுளின் அவதாரமாக தாய்லாந்தில் மன்னர் கருதப்படுகிறார். இங்குள்ள மக்கள் புத்த மதத்தை பின்பற்றினாலும் அங்கு நம் தமிழக பண்பாடு நீடிக்கிறது. பல்லவர், சோழர்கள் காலத்தில் இந்த மரபு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். தமிழக மன்னர்களின் முடிசூட்டும் வழக்கத்தை பின்பற்றியே தாய்லாந்து மன்னர்களும் முடிசூட்டுகின்றனர்.
தாய்லாந்து பிரதமர், ராணுவ தளபதி, நீதிபதிகள் என அனைவரும் அங்கு மன்னரின் முன் மண்டியிட்டே பேசுவர். மன்னரை விமர்சிப்பது அங்கு தண்டனைக்குரிய குற்றம். மன்னருக்கு அப்படியொரு தனி மதிப்பு! அவ்வளவு ஏன்? தாய்லாந்தின் முதன்மையான இதிகாசம் ‘ராமாகியான்’. இது கம்ப ராமாயணத்தைப் போல தாய்லாந்தின் ராமாயணம். அந்நாட்டின் முன்னாள் தலைநகரம் அயோத்தியா. இப்போதைய தலைநகரமான பாங்காங்கின் உண்மை பெயர் ‘குரங்கு தீபம்’ என்பது. மன்னர்கள் தங்களை ‘ராமன்’ என்றே கூறிக் கொள்கின்றனர். உதாரணமாக பழங்கால மன்னர் ஒருவரின் பெயர் ஸ்ரீசூரியவம்ச ராமன் மஹாதர்ம ராஜாதி ராஜன்.
தாய்லாந்து இளவரசரை கடவுளின் அவதாரமாக மாற்றும் விதமாக முடிசூட்டு விழாவில் நடராஜர் சிலையின் முன்பாக ஹோமம் நடத்தப்படும். மந்திரங்கள் ஓதி, புனித நீரால் இளவரசருக்கு மகா அபிஷேகம் செய்வர். பின்னர் ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மன்னரின் காதில் திருவெம்பாவை திருப்பாவை பாடல்கள் ஓதப்படும். அந்நாட்டு அரண்மனையில் தமிழ் கிரந்த எழுத்துகளில் தேவாரம், திருவாசகம், திருப்பாவை பாசுரங்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மன்னர்கள் சிதம்பரம் கோயிலில் முடி சூட்டிக் கொண்ட முறைக்கு இணையாக தாய்லாந்து மன்னர்களும் முடிசூட்டுகின்றனர். திருப்பாவை, திருவெம்பாவை, தேவாரப்பாடல்கள் காதில் விழுந்த பின்பே மனிதராக இருக்கும் மன்னர் கடவுளாக மாறுவதாக அங்கு மக்கள் கருதுகின்றனர்.
முடிசூட்டும் விழாவைப் போல திருவெம்பாவை திருப்பாவை திருவிழாவில் பாசுரங்கள் அங்கு ஒலிக்கின்றன. சிவன், மகாவிஷ்ணுவை ஊஞ்சலாட்டும் விழா அது. ஜனவரி மாதத்தில் பத்து நாட்கள் நடத்தப்படும் விழாவுக்காக பெரிய ஊஞ்சல் பாங்காக் நகரில் உள்ளது. அந்நாட்டின் பாரம்பரிய சின்னமான இந்த ஊஞ்சல் ‘லோ ஜின் ஜா’ எனப்படுகிறது.
பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தன் நுாலில், ‘‘தாய்லாந்து மக்கள் தங்களின் அன்பு, நம்பிக்கையை இந்த பாடல்களில் காண்கிறார்கள். நம் மண்ணின் செய்திகள் அனைத்தும் பாசுரங்கள் வழியாக கிழக்கு கடற்கரை தீவுகள் முதல் தாய்லாந்து வரை பரவியுள்ளது. திருப்பாவை திருவெம்பாவை விழா 20ம் நுாற்றாண்டில் அங்கு தேசியத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு இருக்கிறது’’ என்கிறார். தாய்லாந்தில் திருப்பாவை பாடல்களை கேட்டு மகிழ்ந்ததாக தனிநாயக அடிகளாரும் குறிப்பிடுகிறார். இது பற்றிய விரிவான செய்திகளை எச்.ஜி.குவாரிட்ச் வேல்ஸ் எழுதிய ’தாய்லாந்து நாட்டு அரச வாழ்க்கை’ என்னும் ஆங்கில நுாலில் காணலாம்.
தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் முடிசூட்டு விழாவில் திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டதாக சைவ அறிஞர் ம. பாலசுப்பிரமணிய முதலியார் குறிப்பிடுகிறார்.
காஞ்சி மஹாபெரியவர் திருப்பாவை திருவெம்பாவை பற்றி சொல்லும் போது, ‘‘இந்த பாடல்களை சைவ, வைணவ பேதமாக சிலர் நினைக்கிறார்கள். திருப்பாவையின் முதல் பாட்டின் முதல் எழுத்து மா. அதாவது ‘மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என ஆரம்பிக்கும். அதே போல் திருவெம்பாவையின் முதல் பாட்டின் முதல் எழுத்து ஆ. அதாவது ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி’ என்று ஆரம்பிக்கும். ஆண்டாள் பாடிய மா என்ற திருப்பாவை பாட்டின் முதல் எழுத்து, திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகரை குறிக்கும் என்றும் அதேபோல மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையின் முதல் பாட்டின் முதல் வரியான ஆ என்பது திருப்பாவை பாடிய ஆண்டாளை குறிக்கும்” என்கிறார்.
கடல் கடந்து, மலை கடந்து வெளிநாட்டிலும் திருப்பாவை பாடப்படுவதால் மற்ற ஆழ்வார்களுக்கு இல்லாத சிறப்பு ஆண்டாளுக்கு மட்டுமே இருக்கிறது. திருப்பதியில் தினமும் அதிகாலையில் சுப்ரபாதம் சேவை நடப்பது வழக்கம். ஆனால் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் ஆண்டாளின் திருப்பாவை பாடப்படுகிறது. அப்போது பாசுரங்களை திருமலை பெரிய ஜீயர் சுவாமிகளுடன் பட்டாச்சாரியார்கள் சேர்ந்து பாடுவர். ஆண்டாள் வேண்டிக் கொண்டபடியே இன்றைக்கும் திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் போது கருட சேவையன்று ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஆண்டாளின் பூமாலை, பட்டு, கிளி ஆகியவை திருப்பதி பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
பெற்றுக் கொண்டால் போதுமா? திரும்ப கொடுக்க வேண்டாமா? ஆண்டாளின் மாலை மரியாதையை ஏற்றதோடு பெருமாளுக்கு அணிவித்த பட்டு, மாலை, இரு வெண்குடைகள் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. எல்லா ஆழ்வார்களை விடவும் ஆண்டாள் ஒருபடி மேலே உயர்ந்து நிற்கிறாள் தானே! அவளின் அடிகளை பின்பற்றி பயணித்து நாமும் சிறப்பு பெறுவோம் வாருங்கள்!
|
|
|
|