|
கடவுளிடம் சரணாகதி அடைந்தவருக்கு எந்த கஷ்டமும் தீரும் என்பதை கீழ்கண்ட கதையின் மூலம் அறியலாம். முன்பு திருமறைக்காடாக இருந்த வேதாரண்யத்தில் வாழ்ந்தவர் பரஞ்ஜோதி முனிவர். இவர் இயற்றியது திருவிளையாடல் புராணம். இதில் புலவர் ஹேமநாதரின் கர்வத்தை அடக்க விறகு விற்பவராக வருவார் சிவபெருமான். அது போல திருச்செங்கோட்டிற்கு வந்த ஒரு புலவரின் கர்வத்தை அடக்க இங்குள்ள முருகன் மாடு மேய்க்கும் சிறுவனாக வருவார். அக்கதையை பார்ப்போம். கொங்கு நாட்டு தேவாரத் தலங்களில் ஒன்று திருச்செங்கோடு. இங்குள்ள சுவாமியின் திருநாமம் அர்த்தநாரீஸ்வரர். இவரை தரிசிப்பவருக்கு குடும்பஒற்றுமை பலப்படும். இங்கு செங்கோட்டு வேலவர் என்ற பெயரில் முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். அவரது தீவிர பக்தர் குணசீலர். ஒருமுறை பன்முக திறமையும், கர்வமும் கொண்ட புலவர் ஒருவர் இங்கு வந்தார். அங்கு குணசீலரை சந்தித்தார். அவர்களுக்குள் எழுந்த பேச்சு போட்டியாக மாறியது. இதை நினைத்து உறங்காமல் இருந்தார் குணசீலர். ‘கூகா என என் கிளை கூடி அழப், போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித்தியாகா சுரலோக சிகாமணியே’ என அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில் செங்கோட்டு வேலவரை சிறப்பித்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுநாள் போட்டிக்காக புலவர் திருச்செங்கோட்டு மலையின் மீது ஏறும் போது மலையைப் பார்த்து, இது சர்ப்ப (பாம்பு) மலை என்றால் ஏன் படமெடுத்து ஆடவில்லை என பொருள் வருமாறு ‘சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்ப சயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே’ என இரண்டு அடிகள் கூட பாடலை பாட முடியாமல் திணறினார். அப்போது அங்கு ஆடு மேய்த்த சிறுவன், ‘அது குமரன் திருமருகன் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே’ என பொருள் வரும் பாடினான். அதைக் கேட்ட புலவர் அவனிடம் ‘நீ யார்’ எனகேட்டார். அதற்கு நான் குணசீலரின் கடைசி மாணவர் என சொன்னான். புத்தி தெளிந்த புலவர் வந்திருப்பது முருகன். அவரது அடியவரான குணசீலரை எதிர்ப்பது ஆபத்து என்பதை உணர்ந்து , அவரிடம் மன்னிப்பு கேட்டார். இன்றும் வைகாசி திருவிழாவில் அந்நிகழ்வு நடக்கிறது. அப்பாவைப் போலவே நம்பியவர்களை காப்பாற்றும் கருணை பிள்ளைக்கு உண்டு என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். நம்பினோர் கெடுவதில்லை என்னும் வார்த்தை சத்தியமானவை
|
|
|
|