|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » மாலையை அணிவித்து மாய விளையாட்டு |
|
பக்தி கதைகள்
|
|
ஸந்த் நாமதேவர் எழுதிய ‘பாஹதா துஜே’ என்று தொடங்கும் ‘அபங்’ பாடலின் பொருள். ‘பாண்டுரங்கா, உன் பாத தரிசனம் பிறப்பு, இறப்பு துன்பங்களை நீக்கி விடும் என்ற போதிலும் எனக்கு ஒரு கவலை உண்டாகிறது. ஒருவேளை நீ எனக்கு முக்தி அளித்து விட்டால் இங்கே உள்ள சத்சங்கம் எனக்கு எங்கே கிடைக்கும்? தேவா, பண்டரியில் நடக்கும் ஆனந்த உற்ஸவங்களை யாருடைய கண்களால் பார்ப்பேன்? அமிர்த சஞ்சீவினியான ஹரிகதையை யார் காதுகளால் கேட்பேன்? எனக்கு பண்டரியே போதும். இங்கே கிடைக்கும் சுகத்திற்காக நான் உன்னிடம் ஆயிரமாயிரம் ஜென்மங்களை யாசிக்கிறேன்’
‘நான் இப்படிக் கேட்பது சரியா என்று தெரியவில்லை. என்றாலும் இப்படி ஒரு எண்ணம் எனக்கு அடிக்கடி வருகிறது’ என்று தொடங்கி அதைத் தொடர்ந்தாள் பத்மாசனி. ‘கண்ணனை நினைத்தால் ஆனந்தமாகவும் இருக்கிறது வியப்பும் ஏற்படுகிறது. ஒரு புறம் குருக்ஷேத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்துக் காட்டுகிறார். இன்னொரு புறம் குழந்தைக் கண்ணனாக வெண்ணெய் திருடித் தின்கிறார். ஒரு புறம் அன்னை யசோதைக்கு தன் வாயைத் திறந்து பிரபஞ்சத்தை காட்டுகிறார். மறுபுறம் யசோதையால் உரலில் கட்டப்படுகிறார். ஒருபுறம் கம்ச வதம் நடைபெறுகிறது. இப்படி செயற்கரிய செயல்களை ஒருபுறம் செய்து கொண்டே குறும்புத் தனங்களையும் செய்கிறார் கண்ணன். அவரது வடிவமான விட்டலனும் தன் பக்தர்களை நண்பர்களாகவும் நடத்துகிறான். அவர்களை அவ்வப்போது சோதனைக்கும் உள்ளாக்குகிறான். எதற்காக இத்தனை வேறுபாடுகள்?’
பத்மாசினியின் கேள்விக்கு உடனடியாக பதிலளித்தார் பத்மநாபன். ‘நாம் இந்த பிரபஞ்சத்தில் மிக மிகச் சிறிய அணுக்கள்தான். கடவுளை நாம் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது இயலாத செயல். கண்ணனைப் பொறுத்தவரை அவனது அனைத்து கோணங்களையும் ரசிப்பதோடும் வழிபடுவதோடும் நிறுத்திக் கொள்வதுதான் உத்தமம். அதனால்தான் வல்லபர் மதுராஷ்டகத்தில் ‘மதுராதிபகே அகிலம் மதுரம்’ என்கிறார். கண்ணனைப் பொறுத்தவரை அனைத்துமே இனிமைதான்’.
பத்மாசனியின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. .............. மன்னர் ராமதேவர் பாண்டுரங்கனின் விக்ரகத்தை சிரத்தையுடன் தன் ஆட்சிப் பகுதிக்கு எடுத்துச் சென்றார். துங்கபத்ரா நதிக்கரையிலுள்ள குன்றின் மேல் அதை பிரதிஷ்டை செய்தார். அவருக்கென்று ஒரு கோயிலையும் அமைத்து தினமும் பூஜைகள் செய்தார். அதே சமயம் பண்டரிபுரம் தன் சோபையை இழந்திருந்தது. பானுதாசர் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ‘என் விட்டலன் எங்கே? எங்கே?‘ என்று பித்துப் பிடித்தவர் போல மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் காதுகளை அந்த செய்தி எட்டியது. வித்யாரண்ய நகரை நோக்கி மன்னர் ராமதேவன் விட்டல விக்கிரகத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்! இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட உடனேயே பானுதாசர் வித்யாரண்ய நகரை நோக்கி ஓடத் தொடங்கினார். குன்றின்மீது இருந்த கோயில் அவர் கண்களில் பட்டது. புதிதாக எழுப்பிய கோயில். அங்குதான் விட்டலனின் விக்கிரகம் இருக்க வேண்டும். மூச்சு வாங்க குன்றின்மீது வெகு வேகமாக ஏறினார். கோயிலை சிலர் காவல் காத்துக் கொண்டிருந்தனர். மிக சாமர்த்தியமாக அவர்கள் அறியாமல் உள்ளே நுழைந்தார். அங்கே விட்டலனின் திருவுருவம் புன்னகையுடன் காட்சியளித்தது. பானுதாசர் வாய்விட்டுக் கதறினார். ‘விட்டலா நீ இங்கு வரலாமா? பண்டரிபுரம் அல்லவா உனது இடம்? என்னைப் போன்றவர்கள் நீ இன்றி தவித்துக் கொண்டிருக்கிறோம். உடனே உன்னை அழைத்துச்செல்ல நான் வந்திருக்கிறேன். என்னுடன் வந்துவிடு விட்டலா’ என நெஞ்சுருக வேண்டினார். விட்டலன் அவருக்கு நேரடி தரிசனம் தந்தான். தன் பக்தனை சமாதானப்படுத்தும் விதத்தில் ‘பானுதாசா, ராமதேவனும் என் பக்தன்தான். அவன் வேண்டுகோளையும் தவிர்க்க முடியவில்லை. சரியான நேரம் வரும் போது உன்னுடன் பண்டரிபுரம் வருவேன். அதுவரை பொறுமையாக இரு’ என்றான். பானுதாசர் ஓரளவு சமாதானமடைந்தார். என்றாலும் அவர் கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டே இருந்தது. விட்டலனும் உருகினான். தன் கழுத்தில் அணிந்திருந்த நவரத்தின மாலையை அவருக்கு அணிவித்து ‘சென்று வா பானுதாசா’ என்றான். ‘ எனக்கு எதற்கு நவரத்தினமாலை?’ இன்று பானுதாசர் கேட்க, ‘காரணமாகத்தான்’ என்ற பொருள் பொதிந்த பதில் விட்டலனிடமிருந்து வந்தது. மறுநாள் விடிந்தது. தன்னை ஓரளவு தேற்றிக் கொண்ட பானுதாசர் அங்கிருந்த துங்கபத்ரை நதியில் குளித்தார். அங்கிருந்தபடியே தற்போது விட்டலன் உறைந்திருந்த மலைக் கோயிலை நோக்கி கைகூப்பினார். அப்போது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரண்மனைக் காவலர்கள் பலரும் அங்குமிங்குமாக தென்பட்டனர். வீதியில் சென்ற ஒவ்வொருவரையும் நிறுத்தி எதையோ கேட்டார்கள். ‘விட்டலனுக்கு அணிவித்திருந்த விலை உயர்ந்த நகை ஒன்றைக் காணோம். அதைத் திருடிய கள்வனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவனைப் பிடித்து விட்டால் அவன் கதி அவ்வளவுதான். காரணம் பண்டரிபுரத்திலிருந்து தான் அழைத்து வந்திருந்த விட்டலனின் மீது மன்னருக்கு அவ்வளவு பிரேமை’ என்று ஒருவர் தன் தோழனிடம் கூறிக் கொண்டிருந்தார். பானுதாசரின் காதுகளில் இந்த வாக்கியங்கள் விழுந்தன. என்றாலும் அவை அவர் மனதுக்குள் சென்றதாக தெரியவில்லை. காரணம் எப்போது விட்டலன் மீண்டும் பண்டரிபுரத்துக்கு வரப் போகிறார் என்பது குறித்த சிந்தனைதான் அவருக்கு மேலோங்கி இருந்தது. இரு அரண்மனைக் காவலர்கள் பானுதாசரைக் கண்டனர். அவரது கழுத்திலிருந்த நவரத்தினமாலை அவர்களின் கவனத்தைக் கவர்ந்தது. ‘இவரை உடனே கைது செய்ய வேண்டும்’ என்றான் ஒரு காவலன். மற்றவன் அப்படி நினைக்கவில்லை. ‘கொஞ்சம் பொறு. இவர் திருடனாக இருந்தால் அந்த நவரத்தினமாலையை அணிந்துகொண்டு வீதியில் வருவாரா? ஒரு வேளை இந்த மாலை இவருடையதோ என்னவோ? விசாரித்துப் பார்ப்போம்’ என்றான். இருவரும் பானுதாசரை நெருங்கினர். ‘நீங்கள் இந்த நவரத்தின மாலையை எங்கு வாங்கினீர்கள்?’ என்று கேட்டனர். ‘நான் எங்கே வாங்கினேன்? இது விட்டலனின் மாலை அல்லவா?’ என்று பெருமிதமாக கூறினார் பானுதாசர். தன் குற்றத்தை அவரே ஒப்புக்கொண்டதாகக் கருதிய காவலர்கள் அவரை மன்னரிடம் அழைத்துச் சென்றனர். விட்டலனின் மாலையையே தான் அணிந்திருப்பதாக பானுதாசர் கூறியதைக் குறிப்பிட்டார்கள். மன்னனுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. ‘விட்டலனின் ஆபரணத்தை ஒருவன் திருடுவதா?’. அதற்குமேல் யோசிக்காமல் பானுதாசரைக் கழுவேற்ற உத்தரவிட்டார். பானுதாசர் அதிர்ச்சி அடைந்தார். என்றாலும் அவர் மனம் கலங்கவில்லை. தனது இறுதி விருப்பமாக விட்டால் நீ ஒருமுறை தரிசிக்க வேண்டும் என்றார். மன்னன் அனுமதித்தான். குன்றின் மீதிருந்த கோயிலுக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர். விட்டலனைக் கண்குளிர கண்டு வணங்கினார். பின்னர் காவலர்கள் அவரை கழுமரத்தை நோக்கி அழைத்துச் சென்றனர். இதைக் காண பெரும் கூட்டம் கூடியது. பலருக்கும் அவரைக் கண்ட போது அவர் குற்றமற்றவர் என்று தோன்றியது. எனவே அவர்கள் அவருக்காக பரிதாபப்பட்டனர். மனம் வருந்தி ஒரு பெரும் கூட்டமாக பானுதாசரைப் பின்தொடர்ந்தனர். பானுதாசர் கழுமரத்துக்கு அருகே கொண்டு செல்லப்பட்டார். அப்போது ஒரு விந்தை நடந்தது. அந்த கழுமரம் பசுமரமானது. கிளைகள் படர்ந்து பரவின. இலைகள் உருவாகின. மரத்ததில் பழங்கள் பழுத்துத் தொங்கின. விவரம் அறிந்ததும் மன்னர் ராமதேவர் அங்கு ஓடி வந்தார். பானுதாசரின் மகிமையை அறிந்து ஓடி வந்தார். அவர் பாதம் பணிந்தார். ‘ராமதேவா... பெரும் தவறு இழைத்து விட்டாய். எனவே நான் பானுதாசருடன் பண்டரிபுரம் செல்கிறேன்’ என்றார். வேறு வழியின்றி கண்ணீர் மல்க மன்னன் சம்மதிக்க வேண்டி இருந்தது. குன்றின்மேல் இருந்த கோயிலில் பிரதிஷ்டை செய்த விட்டலனின் விக்கிரகம் பானுதாசர் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அதைப் பல்லக்கில் வைத்து பண்டரிபுரம் புறப்பட்டார் பானுதாசர். பண்டரிபுரம் பழைய தேஜஸைப் பெற்றது. பானுதாசரின் புகழ் பெரிதும் பரவியது.
|
|
|
|
|