|
பெருமைகள் பல கொண்ட ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் அரையர் சேவையும் ஒன்று. நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாடி அபிநயத்துடன் ஆடும் நிகழ்ச்சி அரையர் சேவை. கூம்பு வடிவ தொப்பியை தலையிலும், பெருமாளுக்கு சூடி களைந்த மாலை, பரிவட்டத்தை அணிந்து கொண்டு அபிநயம் செய்வர். இந்த சேவையை உருவாக்கியவர் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகள்.
பாசுரங்களை பாடும் போது அதற்கேற்ப முகம், கைகளால் பாவனை காட்டியபடி நடிப்பார்கள். பரவச நிலையில் இவர்கள் பெருமாளை புகழ்ந்து ஆடிப் பாடுவர். அரையர் சேவையில் முத்துக்குறி என்றொரு பகுதி உண்டு. குறி சொல்லும் பெண்ணிடம், தன் மகளின் எதிர்காலம் குறித்து தாய் கேட்பதே முத்துக்குறி. இதைக் காண ஆண்களும் பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபு. அரையர் ஒருவர் பட்டு உடுத்தி தாயாகவும், மகளாகவும், குறி சொல்பவராகவும் மாறி மாறி அபிநயத்தோடு ஆடிப் பாடுவதைக் காணும் பக்தர்கள் மெய் மறந்து விடுவர். ஸ்ரீரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்துார் கோயில்களில் மட்டுமே வைகுண்ட ஏகாதசியின் போது அரையர் சேவை நடக்கிறது. மரபுவழியில் வந்த குடும்பத்தினர் மட்டுமே அரையர் சேவை நிகழ்த்துகின்றனர்.
அரையர் சேவையை அடுத்து ஐந்து கருட சேவை நிகழ்வும் இக்கோயிலில் சிறப்பானது. ஆண்டாள் ரங்க மன்னாருடன் எப்படி இணைந்தாள் என்பதை நாம் அறிந்தது தானே! பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய ரங்கமன்னார், ஸ்ரீரங்கத்துக்கு ஆண்டாளை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். அதன்படி ஆண்டாளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வர அவரின் கண்முன்னே தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். ஆனாலும் ஆண்டாளை ரங்கமன்னார் அடைந்ததைப் பற்றிய சுவாரஸ்யமான கதை ஒன்று உண்டு. அதனடிப்படையில் ஆடிப்பூர உற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் ஐந்து கருட சேவை நடக்கிறது.
நம் வீடுகளில் நல்ல அறிவு, ஞானத்துடன் அழகான பெண் இருந்தால் திருமணம் செய்ய சொந்த பந்தங்களில் ‘என் மகனுக்கு உன் மகனுக்கு’ என போட்டியிடுவர். அப்படித்தான் ஆண்டாளை அடைய பெரும் போட்டி நடக்கிறது. ஆண்டாளை யாருக்குத் தான் பிடிக்காது? ஆனால் இங்கே போட்டி யாரிடையே தெரியுமா? பெருமாள்களுக்கிடையே... ஆண்டாளை மணம் புரியும் நோக்கத்தில் ஐந்து பெருமாள்கள் ஸ்ரீவில்லிபுத்துாரை நோக்கி புறப்பட்டனர். முதலாவதாக ஸ்ரீவில்லிபுத்துாரில் இருக்கும் வடபத்திரசாயி, இரண்டாவதாக ஸ்ரீரங்கம் ரங்கமன்னார், மூன்றாவதாக திருப்பதி திருவேங்கடமுடையான், நான்காவதாக திருமாலிருஞ்சோலை கள்ளழகர், ஐந்தாவதாக திருத்தங்கல் திருத்தங்காலப்பன் புறப்பட்டு வருகிறார்கள்.
ஆண்டாளை மணமுடிக்க ஸ்ரீரங்கத்திலிருந்து ரங்கமன்னாரை கருடாழ்வார் சுமந்து வருகிறார். அவர் விரைந்து வந்து ரங்க மன்னாரை முதலில் ஆண்டாளிடம் சேர்த்து விடுகிறார். திருப்பதி திருவேங்கடவனுக்கு வரும் வழியிலேயே இந்த செய்தி தெரிய வருகிறது. நாம் கூட ஒரு நிகழ்ச்சிக்காக தாமதமாகச் செல்லும் போது, அதற்குள் நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்று விட்டனர் என கேள்விப்பட்டால் அந்த இடத்திலிருந்து திரும்பப் போய் விடுவோம் அல்லவா? மற்ற பெருமாள்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை உருவாகி விட்டது. அப்படி அந்தச் செய்தியால் கலக்கமான திருப்பதி பெருமாள், உடனே ஸ்ரீவில்லிபுத்துாருக்கு அருகிலுள்ள திருவண்ணாமலையில் நின்று விடுகிறார். ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வடமேற்கே நான்கு கி.மீ., தொலைவில் உள்ள இந்த திருவண்ணாமலை தென் திருப்பதி என்ற சிறப்புடன் திகழ்கிறது. 350 படிக்கட்டுகளுக்கு உயரே உள்ள மலைக்கோயிலில் நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாளாக இவர் அருள்புரிகிறார். திருப்பதியைப் போலவே இங்கு காட்சி தருகிறார்.
அதே போல கள்ளழகருக்கும் ஆண்டாள் ரங்கமன்னாரை அடைந்த செய்தி கிடைக்கிறது. உடனே அவரும் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு அருகிலுள்ள செண்பகத் தோப்பில் நின்று விடுகிறார். இங்கும் மலை மீது கள்ளழகர் பிரதிநிதியாக காட்டழகர் கோயில் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்துாரிலுள்ள வடபத்ரசாயி, திருத்தங்கல் திருத்தங்காலப்பனும் இப்படியே ஆண்டாளை மணக்க முடியாமல் போகிறது. இப்படி மற்ற பெருமாள்களை முந்திக்கொண்டு ரங்க மன்னார் ஆண்டாளை கைபிடித்ததாக ஒரு வரலாறு உண்டு. இந்த சம்பவம் தான் ஐந்து கருட சேவையாக ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவத்தின் ஐந்தாம் நாளன்று நடக்கிறது. ரங்கமன்னாரைத் தவிர கோபித்துக் கொள்ளும் மற்ற நான்கு பெருமாள்களை பெரியாழ்வார் கெஞ்சி திருமண தம்பதியரை வாழ்த்திட வாருங்கள் என சொல்வது போல அர்ச்சகர்கள் நான்கு பெருமாளையும் சமாதானம் செய்யும் நிகழ்வு சுவாரஸ்யமானது.
கருடன் விரைந்து வந்து ரங்கமன்னாரை ஸ்ரீவில்லிபுத்துாரில் சேர்த்ததால் பெருமாளுக்கு சரிசமமாக கருவறையில் இருக்கிறார். ஆண்டாள், ரங்க மன்னார், கருடன் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர். மாப்பிள்ளை தோழனாகவும் கருடன் இங்கு இருப்பதாக ஐதீகம். ரங்கமன்னார் நின்ற கோலத்தில் வலது கையில் பிந்துகோளும் (தற்காப்பு ஆயுதம்), இடது கையில் செங்கோலும், இடுப்பில் உடைவாளும், கால்களில் திருபாதுகையும் கொண்டு ராஜாங்க கோலத்தில் உள்ளார். ஆண்டாளோ இடது கையில் கிளியை தாங்கி வலது கையில் திருவடியை காட்டியபடி இருக்கிறாள். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமாக மூவரும் சேவை சாதிப்பதாக ஆன்றோர்கள் அருளியுள்ளனர்.
கடவுளின் அருள் இருந்தால் எதை வேண்டுமானாலும் அடையலாம். அதற்கு அப்பழுக்கற்ற பக்தி அவசியம் என்பதை ஆண்டாள் வரலாறு உணர்த்துகிறது. ஆண்டாளின் அற்புதமான வரலாற்றை தினமும் படிப்பவர், கேட்பவர் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்வர்.
ஆரம்பம் என ஒன்று இருந்தால் முடிவு என ஒன்று இருக்கத்தானே வேண்டும். அந்த வகையில் இந்தத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது.
ஆண்டாளின் பேரறிவையும், வரலாறையும், பாசுர பெருமைகளையும், அற்புதங்களையும் மற்றுமொருமுறை இந்த உலகம் படிக்க வாய்ப்பளித்த அவளின் கருணையை எண்ணி மகிழ்கிறேன். தொடரை எழுதிய இந்த 9 மாதங்களாக என் மனம் முழுவதும் அவளே வியாபித்து இருந்தாள். சிந்தனையில் கோலோச்சினாள். துாக்கத்திலும் விழிப்பிலும் கனவிலும் கூட என்னை விட்டு வைக்கவில்லை.
பல இடங்களில் இருந்து பறித்த பூக்களால் அழகிய மாலை தொடுத்து ஆண்டாளுக்கு சமர்ப்பித்தது போன்ற மகிழ்ச்சியும் நிறைவும் பெற்றேன். இத்தொடரை படித்த அனைவருக்கும் ஞானப்பூங்கோதையாம் ஆண்டாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்.
ஆண்டாளை சரணடைவோம்! ஆனந்தம் பெறுவோம்!
|
|
|
|