|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » கிருஷ்ணன் செய்த மாயம் |
|
பக்தி கதைகள்
|
|
திரவுபதி அதிர்ச்சியுடன் பார்க்கவும் கிருஷ்ணனும் பதிலுக்கு சலனத்துடன் பார்த்தவனாய், ‘‘திரவுபதி என்னாயிற்று? நான் அப்படி என்ன கேட்கக் கூடாததை கேட்டு விட்டேன். பசிக்கிறது என்றேன்... இதற்கா இந்த அதிர்ச்சி’’ என்று கேட்டான். ‘‘அண்ணா... நான் உன்னை நினைக்கவுமே வரத் தெரிந்த உனக்கு இங்குள்ள பிரச்னை என்னவென்று தெரியாதா... தெரிந்தே நீ என்னை இப்படி சோதிக்கலாமா’’ என்று பதில் கேள்வி கேட்டாள் திரவுபதி. ‘‘அது என்னவோ தெரியவில்லை. என்னை தியானிப்பவர்கள் எனக்குத் தெரியுமளவு, அவர்களின் பிரச்னை எனக்குத் தெரிவதே இல்லை. எல்லோரும் என் அருளுக்கும் கருணைக்கும் தியானிப்பதாகவே நான் கருதி விடுகிறேன். ஆனால் பல நேரங்களில் பலருக்கும் கஷ்டம் வந்தால் நான் நினைவுக்கு வருகிறேன். நீயும் இப்போது கஷ்டத்தில் இருப்பது என்னிடம் பேசிய விதத்திலேயே புரிந்து விட்டது. அப்படி என்ன கஷ்டம் உனக்கு’’ என ஒன்றும் தெரியாதது போலக் கேட்டான் கிருஷ்ணன். தர்மன் உள்ளிட்ட ஐவரும் சலனம் அடைந்தனர். அர்ஜுனனுக்கு கோபமே வந்தது. ‘‘கிருஷ்ணா... இப்படி இனி பேசாதே. ஆபத்துக்கும் தேவைக்கும் மட்டும் சிந்திப்பவர்கள் நாங்கள் இல்லை. உன்னை நாங்கள் நினைக்காத நொடிகளே இல்லை’’ என கோபம் குறையாமல் பேசினான். அதைக் கேட்டு சிரித்தான் கிருஷ்ணன். ‘‘உன் சிரிப்புக்கோ ஓராயிரம் அர்த்தங்கள். இப்போது எதை உத்தேசித்து சிரித்தாய்’’ என பீமன் குறுக்கிட்டான். ‘‘அடேயப்பா... என் சிரிப்பின் பின்னால் இப்படி எல்லாம் கூட கருத்துக்கள் இருக்கிறதா... போகட்டும். திரவுபதி முதலில் பசிக்கு உணவு; பிறகே பேச்சு! போ... முதலில் அட்சய பாத்திரத்தைக் கொண்டு வந்து என் பசியை ஆற்று. பிறகு உன் கஷ்டம் குறித்து பேசலாம்’’ கிருஷ்ணனின் துாண்டுதல் திரவுபதிக்கு கண்ணீரை வரவழைத்தது. ‘‘அட... கண்ணீரா... நான் அப்படி என்ன உன் மனம் வருந்தும்படி பேசி விட்டேன்’’ ‘‘அண்ணா... உன் வார்த்தை விளையாட்டு போதும். பசிக்கு சோறிட முடியாத பாவியாக என்னை ஆக்கி விட்டாயே... நியாயமா’’ ‘‘என்னாயிற்று திரவுபதி? அட்சய பாத்திரம் தொலைந்து விட்டதா... இல்லை ஆதித்தனே அதை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டானா?’’ ‘‘ஐயோ... அண்ணா! அப்படி எல்லாம் ஏதுமில்லை. அதன் இன்றைய காருண்யம் முடிந்து விட்டது. இனி நாளையே நான் அதைப் பயன்படுத்த இயலும். நாங்கள் அனைவரும் சாப்பிட்ட நிலையில் அதைக் கவிழ்த்து வைத்து விட்டோம். அதோ அந்த பேழைக்குள் அது இருப்பதைப் பார்’’ ‘‘ஓ... இது தான் இப்போது உனக்கான சங்கடமா’’ ‘‘கிருஷ்ணா... இது சங்கடம் மட்டுமல்ல. எங்கே சாபத்தில் முடிந்து விடுமோ என அச்சமாகவும் உள்ளது’’ ‘‘அட்சயத்தால் அன்னம் வரும். சாபம் எப்படி வரும்?’’ ‘‘ஐந்தாயிரம் சீடர்களுடன் துர்வாச முனிவர் சாப்பிட வருகிறேன் என்றால் இப்போதுள்ள நிலையில் சாபம் உண்டாகாதா’’ ‘‘துர்வாசர் வருகிறாரா... அதுவும் ஐந்தாயிரம் சீடர்களுடனா... அவர் ஒருவர் வந்தாலே அது பெரும்பாடு’’ ‘‘போதும் கிருஷ்ணா... உன் ஞான திருஷ்டிக்கு தெரியாதது என ஒன்று இருக்க முடியாது. நேரம் கடந்து கொண்டிருக்கிறது. அறுசுவை விருந்து இங்கே தயாராக இருப்பதாக அவர் நம்பிக் கொண்டு சீடர்களுடன் வந்தபடி உள்ளார். அவரிடம் நாளை வரை பொறுத்திருக்கச் சொன்னால் ஏற்பாரா’’ ‘‘அவராவது ஏற்பதாவது... என் பசிக்கு உணவளிக்காத உங்கள் பசிக்கும் இனி உணவு என்பதே கிடைக்காமல் போகட்டும் என சபித்தாலும் சபிப்பார்’’ ‘‘அதற்குத் தான் கிருஷ்ணா அஞ்சுகிறோம். எங்கள் வனவாழ்வே ஒரு பெரும் சோதனை. இதில் இது போல பல சோதனைகள்’’ ‘‘சாதனை புரிய வேண்டும் என்றால் சோதனைகளை சந்தித்து தானே ஆக வேண்டியிருக்கிறது’’ ‘‘கிருஷ்ணா... இந்த சோதனையில் நாங்கள் எதை சாதித்து விட முடியும்? இது வேதனைக்குரியது மட்டுமே. இதை நீ அறியவில்லையா’’ ‘‘இதை மட்டுமல்ல... நான் பல விஷயங்கள் கேளவிப்பட்டேன். அது உண்மை தான் என்று இப்போது தெரிகிறது’’ ‘‘அப்படி என்ன கிருஷ்ணா கேள்விப்பட்டாய்’’ ‘‘இந்த துர்வாசர் இங்கு வரும் முன்பு எங்கு சென்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா?’’ ‘‘அது எதற்கு... அதை நாங்கள் தெரிந்து என்னாகப் போகிறது’’ ‘‘தர்மா... உனக்கு எப்போதும் வெளுத்தது எல்லாம் பால் தான். உனக்கு எதையும் சந்தேகிக்கவே தெரியாது. போகட்டும்... இப்போது துர்வாச விஜயம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இவர் சில தினங்கக்கு முன்பு ஹஸ்தினாபுரம் சென்று துரியோதனனின் விருந்தினராய் இருந்து விட்டு பிறகே இங்கு இப்போது வர உள்ளார்’’ ‘‘ஓ... கவுரவர் சந்திப்பு முடிந்தது. பாண்டவர்களையும் சந்திப்போம் என்பது அவர் விருப்பமா’’ ‘‘அவர் விருப்பம் அல்ல. அது துரியோதனன் வாய் வழியாக வெளிப்பட்ட சகுனியின் விருப்பம்’’ ‘‘இதில் சகுனிக்கென்ன லாபம்’’ ‘‘என்ன லாபமா... எங்கே துர்வாசரின் சாபத்துக்கு ஆளாகி விடுவோமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறீர்களே இது போதாதா சகுனிக்கு’’ என கிருஷ்ணன் சொல்லவும் திரவுபதி உள்ளிட்ட அனைவருக்கும் துர்வாசர் வருகை என்பது தங்களுக்கு சாபத்தை உண்டாக்கும் முயற்சி என்பது புரிந்தது. ‘‘கிருஷ்ணா... இந்த சகுனியும், துரியோதனனும் திருந்தவே மாட்டார்களா... எங்களை வனத்திற்கு அனுப்பியுமா அவர்கள் ஆத்திரம் அடங்கவில்லை’’ என பீமன் கோபமாக கேட்டான். ‘‘வனவாசம் முடிந்து திரும்பி வந்து நிற்கும் போது நாட்டைத் தர வேண்டுமே. நீங்கள் மீண்டும் மன்னர்களாகி விடுவீர்களே...’’ ‘‘ஓ... நாங்கள் வனத்தோடு அழிய வேண்டும் என்பது தான் அவன் விருப்பமா’’ ‘‘அட அப்பாவிகளா... இதைக் கூட தெரிந்து கொள்ள முடியாதவர்களா நீங்கள்’’ ‘‘கிருஷ்ணா... உன் ஒவ்வொரு வார்த்தையும் எங்களை வதைக்கிறது. இப்போது இந்த இக்கட்டில் இருந்து நாங்கள் எப்படி தப்பிப்பது? இந்திர மகேந்திர ஜாலங்களால் உணவை தருவிக்கலாம் தான். ஆனால் அட்சய பாத்திரம் மூலம் உணவு வேண்டும் என்பதே துர்வாசரின் விருப்பம். ஆனால் இப்போது அதற்கு வழி இல்லையே’’ ‘‘எனக்கு என்னவோ ஒரு வழி இருப்பது போலவே தோன்றுகிறது. ஆமாம் எங்கே அந்த அட்சய பாத்திரம்’’ ‘‘அதோ பேழையில்...’’ ‘‘எடுத்து வா திரவுபதி’’ ‘‘அண்ணா... அதை இன்று பயன்படுத்த முடியாதே’’ ‘‘தெரியும். இருந்தாலும் அதை ஒரு பார்வை பார்க்க ஆசைப்படுகிறேன். அற்ப ஆசைதான்... மானிடப் பிறப்பெடுத்து விட்டால் மாயை என்னையும் ஆட்டி வைக்கிறது. என்ன செய்ய’’ ‘‘உன்னிடம் அற்ப ஆசையா... அண்ணா எப்போதும் உன்னைத் தாழ்த்திக் கொண்டு பிறரை உயர்த்துவதே உன் கருணை என்பது எனக்குத் தெரியாதா... இதோ அதை எடுத்து வருகிறேன். தாராளமாகப் பார்’’ திரவுபதி பேழைக்குள் இருந்து அட்சய பாத்திரத்தை எடுத்து வந்து கிருஷ்ணரிடம் தந்தாள். அதில் ஓரிடத்தில் ஒரு சிறு கீரைத் துணுக்கு ஒட்டிக் கொண்டிருந்தது. ‘‘அடடே... ஒரு கீரைத் துணுக்கு இதை நீ சரியாக கழுவாததால் ஒட்டியிருக்கிறதே. இது போதுமே என் பசிக்கு’’ என அதை தன் ஆள்காட்டி விரலால் தொட்டு எடுத்து அப்படியே நாவில் வைத்து, ‘‘ஆஹா... என்ன ருசி’’ என சிலாகித்தான். அந்த நொடியே பாண்டவர்கள் ஐவருடன் திரவுபதியும் பரவசம் அடைந்தனர். இனம் புரியாத நிறைவும், மகிழ்வும் உண்டானதை அவர்கள் உணர்ந்தனர். கிருஷ்ணனோ அந்த அட்சய பாத்திரத்தை பேழைக்குள் வைத்து விட்டு அவர்களைப் பார்த்தான். ‘‘கிருஷ்ணா... என்ன மாயம் செய்தாய். எங்களுக்குள் இனம் புரியாத பூரண நிறைவை உணர்கிறோம்’’ என்றான் அர்ஜுனன். அவர்கள் மட்டுமா உணர்ந்தனர். நதியில் நீராடி விட்டு கரையேறிய துர்வாசர் முதல் அவரது சீடர்கள் அனைவரும் கூட வயிற்றைத் தடவிக் கொண்டு ஒரு பெரிய ஏப்பம் ஒன்றை விட்டனர்.
|
|
|
|
|