|
பிரபு சங்கர்
நீலமாலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் நீலமாலை. வந்திருப்பவன் ஏதோ நாட்டு அரசன் என அவள் கேள்விப்பட்டிருந்தாள். கம்பீரமாக இருந்த அவனது தோற்றத்தைக் கண்ட நீலமாலை ‘இவன் வென்று விடுவான்’ என நினைத்தாலும் ஏமாற்றமே மிஞ்சியது. அவனால் வில்லை பார்க்க முடிந்ததே தவிர அதை துாக்க முடியவில்லை. நல்ல வேளையாக வில் அவன் மீது விழவில்லை. தன் தோழி வாடிய முகத்துடன் வருவதைக் கண்டு திடுக்கிட்டாள் சீதை. ‘நீலமாலை... என்னாயிற்று’ எனக் கேட்டாள். ‘இம்முறையும் வில் தான் வெற்றி பெற்றது’ என உரிமையுடன் பதிலளித்தாள் நீலமாலை. ‘நாணேற்ற வந்த நாயகனை வில் புறக்கணித்து விட்டது’ என ஏமாற்றத்துடன் சொன்னாள். ‘உன் தவிப்பு வியப்பைத் தருகிறது நீலமாலை. மனதளவில் நான் இன்னமும் திருமணத்திற்கு தயாராகவில்லை. அதனால்தான் என் தந்தை ஜனகர் விதித்த போட்டியில் இதுவரை யாரும் வெற்றி பெறவில்லை. எனக்கென ஒருவன் எங்கோ பிறந்திருப்பான். அவன் வரும்வரை நான் காத்திருக்கிறேன்’ என சிரித்தபடி சொன்னாள் சீதை. ‘உன் மணக்கோலத்தைக் காண ஆவலாக உள்ளேன்’ என ஏக்கமாகச் சொன்னாள் நீலமாலை. அரண்மனையின் பணிப்பெண்ணின் மகளான அவளுக்கு சீதை மீது அத்தனை அன்பு. ஒருமுறையாவது அவளைப் பார்க்கவில்லை என்றால் அன்றைய பொழுது அவளைப் பொறுத்தவரை வீணே கழிந்ததாகும். தாயார் சுநயனா, சகோதரிகளை விட நீலமாலையிடம் அந்தரங்க உணர்வுகளை அதிகம் பகிர்வாள் சீதை. யாகசாலை அமைப்பதற்காக ஜனகர் நிலத்தை உழுத போது, ஏர்முனையில் கிடைத்த பெட்டகத்தில் இருந்த பொக்கிஷம் அல்லவா சீதை! பெற்றெடுப்பதை வளர்ப்பது ஒரு சுகம் என்றால் கண்டெடுப்பதை வளர்ப்பதும் தனி சுகமே என்பதை ஜனகரும் அவரது மனைவி சுநயனாவும் அனுபவ பூர்வமாக உணர்ந்தார்கள். இந்த மகாலட்சுமி வந்த ராசியால்தான் அவர்களுக்கு சொந்த மகளாக ஊர்மிளையும் பிறந்தாள். இந்த விஷயம் எல்லாம் அறிந்திருந்ததால் சீதையின் மீது நீலமாலைக்கு தனி அபிமானம் உருவானது. தோட்டத்தில் ஓடிப் பிடித்து விளையாடும் போதும், அரண்மனைக்குள் அம்மானை விளையாடும் போதும் சகோதரிகளுக்குச் சமமாக நீலமாலையும் பங்கேற்பாள்.
பின்னாளில் குகன், சுக்ரீவன், விபீஷணனைத் தன் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது தம்பியராக தன் காதல் கணவர் ராமன் ஏற்கப் போகிறானே, அந்த பெருந்தன்மை திருமணத்துக்கு முன்பே சீதையின் மனதிலும் உதித்து விட்டது போலும்! அதனால்தான் நீலமாலையைத் தன் சகோதரிகளில் ஒருத்தியாக ஏற்றுக் கொண்டாள்.
சீதையை மணக்க மன்னர் ஜனகர் விதித்த நிபந்தனை சரிதான் என்பதை நீலமாலை உணர்ந்திருந்தாள். ஆமாம், சீதையின் மென்மையான பெண்மைக்குள் இத்தனை உறுதியா என வியப்பு கொண்டிருந்தாள் அவள். ஒருமுறை அம்மானை விளையாடிய போது ஒரு காய், வில் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கு அடியில் புகுந்து கொண்டது. அம்மானைக் காயைத் தேடிச் சென்ற சீதை, தன் இடது கையால் பெட்டியை நகர்த்தி, காயை எடுத்தாள். இதைக் கண்டு பிரமித்தாள் நீலமாலை. மறுநாள் அந்தப் பக்கமாக வந்த ஜனகர் வழக்கமான இடத்தை விட்டு பெட்டி நகர்ந்திருந்தைக் கண்டு திகைத்தார். ‘அவ்வாறு செய்தது சீதை’ என விளக்கம் அளித்தாள் நீலமாலை. அப்போதே வில்லில் நாணேற்ற வல்ல இளைஞன் ஒருவனே சீதைக்கு கணவராக வர வேண்டும் என்ற நிபந்தனை விதித்தார் ஜனகர்.
ஒருநாள் வாடிய முகத்துடன் நிற்பதைக் கண்டாள் நீலமாலை. பதட்டமுடன் விசாரித்தபோது அந்த மாற்றத்தைத் தந்தவன் ஒரு மாவீரன் என்றாள் சீதை. ஆமாம், அரண்மனை உப்பரிகையிலிருந்து இவள் நோக்க, அண்ணலாகிய அவனும் நோக்கிய அந்த நொடியில் இருந்து ஏற்பட்ட மாற்றம் தான் அவை. ‘அவன் யார், என்ன பெயர், எங்கே வந்தான், நம் அரண்மனைக்கு வருவானா’ என புலம்ப ஆரம்பித்தாள் சீதை. நீலமாலை அப்போதிருந்தே ‘அந்த ஆணழகன் நம் அரண்மனைக்கு வர வேண்டுமே... சீதைக்கு கணவராக வேண்டுமே... அதற்கு ஜனகரின் நிபந்தனையால் தடை வராமல் இருக்க வேண்டுமே…’ என பிரார்த்தித்தாள். மறுநாள் தர்பார் மண்டபம் நிறைந்திருந்தது. முனிவர் விஸ்வாமித்திரருடன் வந்த ராமனும், லட்சுமணனும் அனைவரின் கண்களிலும் நிறைந்திருந்தனர். முனிவரும் ஜனகரும் பேசிக் கொண்டதும், வில்லை வளைக்க ராமன் தயாரானான். மண்டபத்தில் ஆவலுடன் காத்திருந்தாள் நீலமாலை. ராமன் வில்லை துாக்கி, அதன் கீழ் முனையைத் தன் இடக்கால் விரல்களுக்கிடையே பற்றிக்கொண்டு, நாணை இழுக்க, அந்தக் கணமே இடி இறங்கியது போன்ற முழக்கத்துடன் இரண்டாக ஒடிந்த வில் ராமனின் பாதங்களைச் சரணடைந்தது. அதைக் கண்டதும் ஓட்டம் பிடித்தாள் நீலமாலை. மூச்சிறைக்க சீதையின் முன் நின்றாள். இந்த நிகழ்வை, வடங்களும் குழைகளும் வானவில்லிட தொடர்ந்த பூங் கலைகளும் குழலும் சோர்தர நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள் நெடுந் தடங் கிடந்த கண் நீலமாலையே’ என்கிறார் கம்பர். கண்களில் காதல் ஏக்கம் கலையாமல் தோழியைப் பார்த்தாள் சீதை. ‘அயோத்தி மன்னர் தசரதரின் இரண்டு மகன்களை விஸ்வாமித்திர மகரிஷி அழைத்து வந்திருந்தார். அவர்களில் மூத்தவன் யார் தெரியுமா? நீ பார்த்து மோகித்தாயே, சற்றுமுன் இடியோசை கேட்டதே... அது உன் மனதில் குடியிருக்கும் நாயகன். ஆஹா சீதை... உன் எண்ணம் நிறைவேறப் போகிறது. உன் காத்திருப்பு வீண் போகவில்லை அவன் பெயர் ராமன்’ என விவரித்தாள் நீலமாலை. நாணம் பொங்கியது சீதைக்கு. செவ்வரியோடிய கண்கள் மகிழ்ச்சியால் வெண் சங்காய்ப் பூத்தன. நல்ல செய்தியைச் சொன்ன நீலமாலையை அணைத்தாள் சீதை.
|
|
|
|