|
ஸந்த் ஞானேஸ்வரர் எழுதிய ‘ ஜிம் சாது போத ஜாலா’ என்று தொடங்கும் ‘அபங்’ பாடலின் பொருள். கற்பூரம் எரிந்தால் முடிவில் ஒன்றும் இருக்காது. அது போல ஞானிகளின் உபதேசத்தைக் கேட்ட பக்தருக்கு தன் உடல் மீதுள்ள பற்று நீங்கும். அதனால் தெய்வீக அனுபவமும், மோட்சமும் கிடைக்கும். அவர்கள் ஹரியாகிய கடவுளையே எங்கும் காண்பர்.
‘ஞானிகளின் வரலாற்றை எத்தனை முறை கேட்டாலும் அற்ப விஷயங்களில்தானே ஈடுபடுகிறோம்’ என ஆதங்கப்பட்டாள் பத்மாசினி. ‘உண்மைதான். எனக்கும் இந்த எண்ணம் வருவதுண்டு. இதைப் பற்றி பேசும் போது மதுரகவி ஆழ்வாரின் நினைவு வருகிறது’. ‘என்ன’ என ஆர்வமுடன் கேட்டாள் பத்மாசினி. ‘செல்லும் வழியில் ஒரு புளிய மரப்பொந்தில் ஒளி தோன்றுவதைக் கவனித்தார் மதுரகவி ஆழ்வார். அங்கு மூச்சுப் பேச்சின்றி நம்மாழ்வார் உட்கார்ந்திருந்தார். அவரிடம், ‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் அது எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’ எனக் கேட்டார். வேதாந்த ரீதியில் கேட்டதால் அவரும், ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’ என்றார் நம்மாழ்வார். அதாவது அறிவற்ற உடலோடு ஆத்மாவுக்குத் தொடர்பு ஏற்பட்டால், அது எதை அனுபவித்துக் கொண்டு எங்கே இருக்கும்? என்ற கேள்விக்கு ‘அந்த ஆத்மா உடலைப் பற்றிக்கொண்டு, அதிலுள்ள இன்ப துன்பங்களை அனுபவித்துக்கொண்டு அங்கேயே கிடக்கும்’ என மறைமுகமாக விடையளித்தார் நம்மாழ்வார். வியப்பில் ஆழ்ந்த மதுரகவி ஆழ்வார் அவரைச் சரணடைந்தார். நம்மாழ்வாரும் சீடராக ஏற்றுக் கொண்டார். பத்மாசினியின் முகம் மலர்ந்தது. ‘இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது. நம்மாழ்வாரின் பாசுரங்களை சுவடியில் எழுதும் பேறு பெற்றவர் மதுரகவி ஆழ்வார் அல்லவா? ஆழ்வார்களில் பெருமாளைப் பாடாதவர் இந்த மதுரகவி மட்டும்தானே’ என்றாள். ஆமாம் என தலையசைத்த பத்மநாபன், பக்தரான நரஹரியின் வரலாறை சொல்ல ஆரம்பித்தார். .................. பண்டரிபுரத்தில் நரஹரி என்னும் பொற்கொல்லர் இருந்தார். தினமும் சிவன் கோயிலுக்குச் செல்வார். அதற்கு அருகில் இருந்த விட்டலனின் கோயிலுக்கு செல்ல மாட்டார். கோபுரம் கண்ணில் பட்டால் கூட தலையைத் திருப்பிக் கொள்வார். அப்படி ஒரு சிவபக்தர். பண்டரிபுரத்தில் அனைவரும் விட்டல நாமம் உச்சரிப்பதால் மனம் வெறுத்தார். சிவனும் விட்டலனும் எதிரிகள் எனக் கருதினார். அந்த ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். திருமணமாகிப் பல வருடங்களுக்கு பிறகு அவரது மகன் நோய்வாய்ப்பட்டான். சோகத்தில் ஆழ்ந்த அவர் விட்டலனைச் சரணடைந்தார். ‘என் மகனை நோயிலிருந்து காப்பாற்று விட்டலா. உனக்கு தங்கத்தினாலான அரைஞாண் கயிறை காணிக்கை தருவேன்’ என வேண்டினார். இது போன்ற வேண்டுகோளுக்கு எல்லாம் சம்மதிப்பவரா கடவுள்? திருவிளையாடல் ஒன்றை நடத்தத் தீர்மானித்தான் விட்டலன். நோய் தீர்ந்தது. மகிழ்ந்த பணக்காரர், ‘பொன் அரைஞாண் கயிறு ஒன்றை செய்து தர வேண்டும்’ என பொற்கொல்லர் நரஹரியிடம் கேட்டார். ‘யாருக்கு? உங்கள் மகனுக்கா?’ எனக் கேட்டார் நரஹரி. தனது வேண்டுதலை விளக்கினார் பணக்காரர். நரஹரியின் முகம் மாறியது. தான் வெறுக்கும் திருமாலின் வடிவமான விட்டலனுக்கு நகை செய்வதா?’ என நினைத்தாலும் பணக்காரரின் வற்புறுத்தலுக்காக சம்மதித்தார். ‘விட்டலனின் இடுப்பு அளவை அளந்து விட்டு வாருங்கள். அரைஞாண் செய்யலாம்’ என்றார். கோயிலுக்குச் சென்று அளந்து வந்தார் பணக்காரர். அரைஞாணை செய்து கொடுத்தார் பொற்கொல்லர். கோயிலுக்குச் சென்று விட்டலன் திருவுருவத்துக்கு அணிவித்த போது இரண்டு விரற்கடை குறைவாக இருந்தது. பொற்கொல்லரிடம் நடந்ததை தெரிவித்தார். ‘சரியாகத் தானே செய்தேன். இவர் தவறான அளவை சொல்லிவிட்டாரோ’ என எண்ணிய நரஹரி அந்த அரைஞாணை இரண்டு விரற்கடை நீளமாக்கி கொடுத்தார். இம்முறை பணக்காரருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. விட்டலனின் இடுப்பை விட அரைஞாண் இரண்டு விரற்கடை அதிகமாக இருந்தது. சலிப்புடன் நரஹரியை அணுகினார் பணக்காரர். அதிர்ச்சி அடைந்த நரஹரி. ‘ நீங்கள் சரியான அளவு கொடுக்கவில்லை’ என கேட்க, எரிச்சல்பட்ட பணக்காரர், ‘ என்னை பழி சொல்லாதீர்கள். நீங்களே வந்து அளவு எடுங்கள்’ எனக் கூறி தன்னுடன் வருமாறு கூறினார். பணக்காரரை பகைத்துக் கொள்ளவும் முடியவில்லை விட்டலன் கோயிலுக்குச் செல்லவும் மனமில்லை. தன் கண்களைக் கட்டிக் கொண்டு கோயிலுக்கு வந்தார். விட்டலனின் இடுப்பின் மீது கைகளை வைத்த போது அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் தட்டுப்பட்டது புலித்தோல். இது சிவபெருமானின் ஆடையல்லவா? கைகளை உயர்த்திய போது உடுக்கை, பாம்பு, கங்காநதி, சந்திரன் என ஒவ்வொன்றாக இருப்பதை உணர்ந்தார். ‘அடடா இந்த பணக்காரர் என்னை ஏமாற்றி விட்டாரே! சிவன் கோயிலுக்கு அல்லவா அழைத்து வந்துள்ளார். சிவபெருமானை தரிசிக்காமல் கண்களை கட்டி இருப்பது பாவம்’ என எண்ணி கட்டுகளை அவிழ்த்தார். எதிரில் பீதாம்பர தாரியாக விட்டலன் காட்சியளித்தான். கண்களை மீண்டும் கட்டிக் கொண்டார். ‘வந்த வேலையை முடிப்போம். ஏதோ குழப்பத்தில் விட்டலனின் சிலையை சிவபெருமானாக கருதி விட்டேனே’ என எண்ணியபடி மீண்டும் சிலையைத் தொட்டார். குழப்பம் நீடித்தது. சிவபெருமானுக்குரிய திரிசூலம் தட்டுப்பட்டது. கைகளை மேலே நகர்த்திய போது நெற்றிக்கண் இருப்பதை உணர்ந்தார். ‘அடடா இது எம்பெருமான் சிவனே’ என வேகமாக கட்டை அவிழ்த்தார் நரஹரி. அங்கே விட்டலனின் உருவம் காட்சியளித்தது. நரஹரியின் அகக்கண் திறந்தது. ‘ஹரனும் நானே; ஹரியும் நானே. உன் பெயரிலேயே ஹரியை வைத்துக் கொண்டு இப்படி முட்டாளாக செயல்படுகிறாயே’ என சிவபெருமானும், விட்டலனும் ஒரே குரலில் கேட்பது போலிருந்தது. விட்டலனின் எதிரே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். விட்டல பக்தராகி அபங்கம் என்னும் பாடல்களைப் பாடினார். ஹரியும் சிவனும் ஒன்று என்னும் அரிய தத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொல்வதாக அமைந்தது நரஹரியின் வாழ்க்கை.
|
|
|
|