Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கோடிகாஸ்யன்
 
பக்தி கதைகள்
கோடிகாஸ்யன்


ஜெயத்ரதன் திரவுபதி பற்றி கூறியதைக் கேட்ட கோடிகாஸ்யன் அடுத்த நொடியே திரவுபதியை பற்றிய விபரங்களை அறிய புறப்பட்டான். அதற்காக காம்யக வனத்தில் கால் பதித்த போது கூகை ஒன்று அலறியது. காட்டுப்பூனை ஒன்று வலமிருந்து இடமாக ஓடியது. கோடிகாஸ்யன் ஓரளவு சகுன சாஸ்திரம் கற்றவன். அவனுக்கு அப்போதே தான் எதற்காக வந்தோமோ அது வெற்றி அடையாது என்பது தெளிவாகி விட்டது. இருந்தாலும் அரச கட்டளையைச் செயல்படுத்தும் விதமாக திரவுபதி இருக்கும் குடிலை அடைந்தான். அவன் சென்ற போது பாண்டவர் ஒருவரும் அங்கில்லை. மான்குட்டிக்கு பசும்தளிர்களை திரவுபதி ஊட்டிக் கொண்டிருந்தாள். கோடிகாஸ்யனைக் கண்டதும் ஆச்சரியமுடன் பார்த்தாள். திரவுபதியின் அழகில் மயங்கியவனாக அவளை நோக்கி வந்த காரணத்தையும் மறந்து வெறித்து பார்த்தான். அவனது தோற்றம் அதிகாரம் மிக்க ராஜ்ய பதவியில் இருப்பவன் என்பதை உணர்த்தியது.
 ‘‘யார் நீ... எதற்காக வந்திருக்கிறாய். பசிக்காக வந்த அதிதியாக உன்னைக் கருத முடியவில்லை. எந்த ராஜ்ஜியத்தை சேர்ந்தவன் நீ?’’ என திரவுபதி அடுக்கடுக்காக கேட்டாள். கோடிகாஸ்யனும் சுயநினைவுக்கு திரும்பியவனாக தன்னை அறிமுகம் செய்யத் தொடங்கினான்.   
‘‘மங்கையே... நான் சிந்து நாட்டரசனான ஜெயத்ரதனின் மெய்க்காப்பாளன். வேட்டைக்காக காட்டுக்கு வந்தேன். வந்த இடத்தில் உன்னைக் கண்டேன். உன் அழகு என்னை மெய் மறக்கச் செய்து விட்டது’’ என்றான்.  
‘‘அழகை ரசிக்கலாம். ஆனால் மயங்கக் கூடாது. அது ஆபத்து. அதிலும் நான் பாண்டவர்களின் பத்தினி. என் கணவர்கள் இங்கிருந்தால் உன் கதி அதோகதிதான். அவர்கள் வரும் முன்பாக ஓடி விடு’’ என்றாள் திரவுபதி. இதைக் கேட்ட கோடிகாஸ்யன் அதிர்ந்தான்.
‘‘மங்கையே... நீ மணமானவளா... நம்ப முடியவில்லை’’ என்றான்.
‘‘நீ எதற்காக நம்ப வேண்டும்? தனித்திருக்கும் குலப்பெண்ணிடம் எப்படி பேச வேண்டும் எனத் தெரியாதா?’’
‘‘நான் தவறாக பேசவில்லையே. எழில்மிக்க கன்னியாகத் தோன்றுகிறாய். அதனால் உன்னை மணமான பெண்ணாக கருத முடியவில்லை என்றேன்’’
‘‘போதும் நிறுத்து. இங்கிருந்து புறப்படு’’
‘‘அடேயப்பா... நெருப்பாய் தகிக்கிறதே உன் சொற்கள். அழகை வியப்பது குற்றமா’’
‘‘அதில் என்ன சந்தேகம். நான் நெருப்பில் பிறந்தவள். யாக குண்டம் தான் என் கருவறை. வேதமே என் தாய். துருபத மகாராஜாவின் மகள். என் பெயர் திரவுபதி. நித்ய கன்னித்தன்மை எனக்கான வரம். அதனால் அழியாத கற்புடையவள்’’
‘‘இப்படியும் ஒரு வரமா... வியப்பாக இருக்கிறது’’
‘‘வியப்பதோடு நிறுத்திக் கொண்டு முதலில் புறப்படு. உன்னிடம் இவ்வளவு பேசியதே அதிகம்’’  என்ற திரவுபதி குடிலுக்குள் சென்று கதவை அடைத்தாள். கோடிகாஸ்யனும் அங்கிருந்து ஜெயத்ரனிடம் சென்றான்.
‘‘வந்து விட்டாயா... அவள் யார் எனத் தெரிந்ததா’’
‘‘தெரிந்தது பிரபு. ஆனால் அதை தெரிந்து கொள்ளும் முன்பு நான் நிறையவே அதிர்ந்து விட்டேன்’’
‘‘அப்படி என்ன நடந்தது’’
‘‘தங்கள் மனம் கவர்ந்த அவள் சாமானியப் பெண்ணல்ல. நாம் சுக்கில சுரோணித கலப்பால் மாமிச உடல் கொண்டு பிறந்தவர்கள். ஆனால் அவளோ வேள்வித்தீயில் தோன்றிய அக்னி புஷ்பம். அதனால் நித்ய கன்னித்தன்மை கொண்டவள். அவள் பெயர் திரவுபதி’’
‘‘பலே... இப்படி ஒரு சிறப்பா... மன்னிக்க வேண்டும். நித்ய கன்னியாக இருப்பினும் பாண்டவர் ஐவருக்கும் பத்தினியாம்’’
‘‘பாண்டவர்களின் பத்தினியா...அதிலும் ஐவருக்குமானவளா... அது எப்படி’’
‘‘ஆம்... பாண்டவர் ஐவரும் உடம்பால் வேறாக இருப்பினும் உணர்வால் ஒன்றானவர்கள். இவர்களோடு இல்வாழ்வில் ஈடுபட்டாலும் கன்னித்தன்மை விலகாத விசேஷ சக்தி கொண்டவள். இதனால் கற்பு என்னும் துாய்மைக்கு எந்த குறையும் அவளுக்கு ஏற்படாதாம்’’  
‘‘இப்படி ஒரு வரமா... அதனால் தான் அத்தனை அழகாக இருக்கிறாளா’’
‘‘அதை நான் ஆமோதிப்பது பண்பல்லவே’’
‘‘சரியாகச் சொன்னாய். உன் வேலை முடிந்தது. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். இத்தனை பெரிய வரம் உடையவள் வனத்திலா வாழ்வது’’
‘‘தாங்கள் அறியாததல்ல. கவுரவர்களுடன் ஆடிய சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்த பாண்டவர்கள் காட்டில் உள்ளனர். அவர்களுடன் தானே பத்தினியும் இருந்தாக வேண்டும்?’’
‘‘பாண்டவரை அவள் மணந்ததன் விளைவு இது. வரம் காரணமாக அந்த ஐவருடன் கன்னித் தன்மை கெடாதபடி வாழ முடியுமானால் என்னுடனும் வாழலாமே’’
‘‘பிரபு’’
‘‘அதிர்ச்சி வேண்டாம். அவள் அழகு என்னை மயக்கி விட்டது. அடுத்து அவளின் விசேஷ அம்சங்கள் பற்றி கூறவும் அவள் மீதான என் காதல் பல மடங்கு அதிகரித்து விட்டது. அவளை அடைந்தே தீருவேன்’’
‘‘பிரபு அது அத்தனை சுலபம் அல்ல. பாண்டவர்கள் அதிதீரர்கள்’’
‘‘அவர்கள் அதிதீரர்கள் என்றால் நான் அதிசூரன். அந்த அழகுப்பதுமை இனியும் வனத்தில் வாடக் கூடாது. இந்த சிந்து நாட்டின் அரண்மனையில்தான் இருக்க வேண்டும்’’ என்று சொல்லி அப்படியே திரவுபதியைக் காணப் புறப்பட்டான்.
ஒரு பெரிய தேரில் நான்கு குதிரைகளின் இழுப்பில் வனம் புகுந்த ஜெயத்ரதன் திரவுபதியின் குடிலை அடைந்த போது அப்போதும் பாண்டவர்கள் ஐவரும் அங்கில்லை. திரவுபதி தனித்திருந்தாள். தனக்குத் தானே பல்லாங்குழியில் சோழிகளை இட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் மீது ஜெயத்ரதனின் நிழல் விழவே நிமிர்ந்தாள்.
கூரிய விழிகளால் நோக்கிய ஜெயத்ரதன் புன்னகைத்தான். திரவுபதி வேகமாக எழுந்து அங்கிருந்த திரைச்சீலையின் பின் சென்று,
‘‘யார் நீ’’ என்றாள் ஆவேசமாக..
‘‘என்னைத் தெரியவில்லையா... ஒரு வகையில் நான் உன் உறவினன். அந்நியன் அல்ல’’
‘‘யாராக இருந்தாலும் தனி்த்திருக்கும் என்னிடம் வந்து பேசுவது முறையல்ல’’
‘‘முறைகள் எல்லாம் பிரஜைகளுக்குத் தான். ஒரு நாட்டின் சக்கரவர்த்திக்கு அல்ல. நான் சிந்து தேச அரசன் ஜெயத்ரதன். கவுரவர்களின் சகோதரியான துச்சலையின் கணவன். சுருக்கமாக கூறினால் நீங்கள் வனத்தில் வாழ்ந்திடக் காரணமான துரியோதனனின் மாப்பிள்ளை’’
‘‘புரிகிறது. காட்டில் நாங்கள் படும் பாட்டை பார்த்து வரச் சொல்லி உன்னை அனுப்பியுள்ளானா அந்த துரியோதனன்’’
‘‘தவறு திரவுபதி. உன் அழகில் மயங்கி நானாகத் தான் வந்துள்ளேன். மகாராணியாக வாழ வேண்டிய நீ இப்படியா ஒரு குடிசைக்குள் விளையாட ஆள் இன்றி தனியாக பல்லாங்குழி ஆடியபடி இருப்பாய்’’
‘‘முதலில் இங்கிருந்து போகிறாயா இல்லையா... என் கணவர்கள் வந்து விட்டால் நீ பேசியதற்கு உன் நாக்கை அறுத்து விடுவார்கள்’’
‘‘என் அருமை தெரியாமல் பேசுகிறாய். பாண்டவர் ஐவர் இருந்தும் அவர்களால் உன்னை ராணியாக வாழ வைக்க துப்பில்லை. என்னோடு வா. நித்ய கன்னியான உனக்கு நான் ஆறாவது கணவன். அதே சமயம் சிந்து நாட்டுக்கே ராணியாக்கும் கணவன் என்பதை மனதில் கொள்’’
‘‘இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினாலும் சகிக்க மாட்டேன். காமுகனே இங்கிருந்து வெளியேறு’’
 என திரவுபதி சப்தமிட்ட போது, பாண்டவர்கள் அங்கு வந்து கொண்டிருந்தனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar