|
சிவபெருமானும், பார்வதியும் தேவகணங்கள் புடைசூழ சொக்கட்டான் விளையாடினர். ஆட்டம் முடியும் நேரத்தில் பார்வதி ஜெயிக்கும் நிலையில் இருந்தாள். திடீரென சிவன் ‘நான் ஜெயிச்சுட்டேன்’ என எழுந்தார். “நான் தான் ஜெயிக்கப் போகிறேன், நீங்கள் ஆட்டம் முடியாத நிலையில் எழுந்தால் எப்படி?” என கோபித்தாள் பார்வதி. அருகில் இருந்த சித்ரநேமி என்ற கணதேவனிடம், “நீயே சொல்லப்பா! யார் ஜெயித்தது?” என்றார் சிவன். சிவன் நெற்றிக்கண்ணை திறந்தால் என்னாவது? அம்மாவைக் கூட சமாளித்து விடலாம்” என்ற எண்ணத்தில் சித்ரநேமி, “நீங்கள் தான் ஜெயித்தீர்கள்?” என பொய் சொல்லி விட்டான். வந்ததே பார்வதிக்கு கோபம். நடுநிலை தவறி தீர்ப்பளித்தால் தொழுநோய் தான் வரும். இதோ! அந்தப் பரிசை இப்போதே அடைவாய்”என சாபமிட்டாள் பார்வதி. சிவன் சமாதானமாக,“பார்வதி... நீ தான் வென்றாய். விளையாட்டுக்காக சொன்னதை பெரிதுபடுத்தி விட்டாயே! சித்ரநேமிக்கு இட்ட சாபத்தை திரும்பப் பெறு” என்றார். இரக்கம் ஏற்படவே, “ நீதிக்கு மாறாக தீர்ப்பளிக்கக் கூடாது என்பதற்காக இந்த நாடகத்தை நடத்தினேன். இதுவும் உன் நன்மைக்கே. பூலோகத்தில் நீ பிறப்பெடுத்து கங்கையும், யமுனையும் கூடும் நல்ல நாளான ஆவணி மாத பவுர்ணமிக்கு முந்திய வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்துக் காத்திரு. அந்நாளில் துங்கபத்ரா நதிக்கரையில் லட்சுமிபூஜை செய்ய தேவலோகப் பெண்கள் வருவார்கள். அதில் நீயும் கலந்து கொண்டு அவளைத் தரிசிக்க வேண்டும். அவள் உனக்கு தொழுநோய் நீங்க வரம் தருவாள்” என விமோசனம் அளித்தாள். சித்ரநேமியும் துங்கபத்ரா நதிக்கரையில் அந்த நாளுக்காக காத்திருந்தான். பார்வதி குறிப்பிட்ட நல்ல நாளில், தேவலோகப் பெண்கள் பூஜித்த காட்சியைக் கண்டான். அவனும் விரதத்தில் பங்கேற்று முடிவில் அங்கு வந்தவர்களுக்கு தாம்பூலம் கொடுத்தனுப்பினான். அவனது தொழுநோய் நீங்கியது, லட்சுமியாய் வந்தவள் தொழுநோய் தீர வரம் தந்ததால் ‘வரலட்சுமி’ என பெயர் பெற்றாள்.
|
|
|
|